பாஜக ஆட்சி நடைபெறும் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தின் கவி நகர் பகுதியில், ஹர்ஷ் வர்தன் ஜெயின் என்பவர் பெரிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அலுவலகமாக மாற்றி, வீட்டிற்கு வெளியில் வெஸ்ட் அண்டார்டிகாவின் தூதர் என்று பெரிய போர்டு ஒன்றையும் வைத்திருந்துள்ளார். அவரது நடவடிக்கை குறித்து சந்தேகம் அடைந்த உள்ளூர் மக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து ஹர்ஷ் வரதன் வீட்டை போலீசார் சோதனை செய்தனர். அப்போது, ஹர்ஷ் வர்தன் போலி தூதரகம் நடத்தி வருவதை போலீசார் கண்டுபிடித்தனர்.
ஹர்ஷ் வரதனிடமிருந்து, போலி நம்பர் பிளேட் கொண்ட நான்கு சொகுசு வாகனங்கள், 18 போலி தூதரக நம்பர் பிளேட்டுகள், 12 போலி தூதரக பாஸ்போர்ட்கள், பல்வேறு நாடுகளின் 34 முத்திரைகள், 44 லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஹவாலா நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட பல நிறுவனங்களின் வணிக ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
அதில் வெஸ்ட் அண்டார்டிகா செபோர்கா, லடோனியா மற்றும் போல்வியா போன்ற கற்பனையான நாடுகளின் பிரதிநிதியாக தாம் இருப்பதாகவும் கூறி போலி நாடுகளின் பெயரில், போலியான ஆவணங்கள், அடையாள அட்டைகள் மற்றும் பாஸ்போர்ட்டுகளையும் அவர் வழங்கியுள்ளது அம்பலமானது.
மேலும், இந்திய வெளியுறவுத் துறையின் போலியான முத்திரைகளைக் கொண்ட ஆவணங்களையும் அவர் தயாரித்துள்ளார். பல்வேறு நாடுகளின் உயர் அதிகாரிகள் மற்றும் பிரதமர்கள், அதிபர்களுடன் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை ஹர்ஷ் வர்தன் தனது அலுவலகத்தில் வைத்துள்ளார். தொழிலதிபர்களை ஏமாற்றி, சர்வதேச சந்தைகளில் முதலீடு செய்ய உதவுவதாக கூறி ஹவாலா நெட்வொர்க்வையும் நடத்தி வந்துள்ளார்.
ஹர்ஷ் வர்தன் ஜெயின், ஏற்கனவே 2011-ம் ஆண்டு சேட்டிலைட் போல் கைத்திருந்ததாக கைது செய்யப்பட்டவர் ஆவார். ஹர்ஷ் வர்தன் ஜெயினுக்கு, சர்ச்சை சாமியார் சந்திராசாமி, சர்வதேச ஆயுத வியாபாரி அட்னான் ககோஷி ஆகியோருடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. போலி தூதரக மோசடியில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்பதால், அவர்களும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் முதல்முறையாக போலி தூதரகம், அதுவும் இல்லாத நாடு ஒன்றின் பெயரில் கடந்த 7 ஆண்டுகளாக தூதரகம் நடத்திவந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.