தமிழ்நாட்டின் பெருமையை, உலகிற்கு உரக்கச் சொல்லும் கீழடி அகழாய்வின் முடிவினை ஏற்றுக்கொள்ள முடியாமல், அதில் திருத்தம் மேற்கொள்ளச் சொல்லும் ஒன்றிய அரசின் நோக்கம் என்ன? என தி.மு.க நாடாளுமன்ற குழுத் துணைத்தலைவர் தயாநிதி மாறன், ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்திடம் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக கேள்விகள் எழுப்பியுள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து நடந்து வரும் கீழடி அகழாய்வு, கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் கைகளுக்கு மாறிய பிறகுதான், 5,000க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, பண்டை கால தமிழ் மக்கள் இரும்பு பயன்படுத்தியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அதன்படி பார்த்தால் தமிழ் நிலத்தில், 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு காலத்தைத் தொடங்கிய பெருமை தென்னிந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்குமே உரித்தானது.
இத்தகு கீழடியின் பெருமையை, தொன்மையை உலகறியச் செய்யும் வகையில், கடந்த 2023ஆம் ஆண்டு, சிவகங்கை அருகே, இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் 31,000 சதுர அடி பரப்பளவில் 18.43 கோடி ரூபாய் செலவில் கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.
அவற்றை உலகளவிலான ஆய்வகங்களுக்கு அனுப்பி, கரிமப் பகுப்பாய்வில் காலக்கணக்கீடு செய்யப்பட்ட மாதிரிகள், Accelerator Mass Spectrometry (AMS) அறிக்கைகள், வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துகள் என பல சான்றுகள் இருந்தும், ஒன்றிய அரசு தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையைப் புறந்தள்ளுகிறது. கீழடி அகழாய்வை இரண்டு கட்டங்களாக மேற்கொண்ட தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை திடீரென பணியிட மாற்றம் செய்தது ஏற்க முடியாதது.
ராஜஸ்தானில் பத்தே பத்து குழிகளைத் தோண்டி, சரஸ்வதி நதியைக் கண்டுபிடித்ததை ஏற்க முடிந்த ஒன்றிய அரசால், 102 குழிகள், 88 கார்பன் மாதிரிகள், 5700க்கும் மேற்பட்ட பொருட்களை அகழாய்வு செய்து கண்டறியப்பட்ட தமிழரின் தொன்மையான கீழடி நாகரீகத்தையும், ஆய்வு முடிவுகளையும், ஆதாரங்கள் இருந்தும், ஏற்றுக் கொள்ள மறுப்பதற்குக் காரணம் என்ன என மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதன் விவரங்கள் பின்வருமாறு :-
- கீழடி அகழாய்வு தொடர்பான, தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை, இந்தியத் தொல்லியல் துறை திருத்தி அனுப்பச் சொல்வதற்கான, அறிவியல்பூர்வமான காரணங்கள் ஏதும் இருக்கின்றனவா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
- இந்தியத் தொல்லியல் துறை கேட்ட, திருத்தப்பட்ட அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு, தமிழ்நாடு தொல்லியல் துறைக்கு வழங்கப்பட்ட காலக்கெடு எவ்வளவு? என கேள்வி எழுப்பியுள்ளார்.
- 2024ஆம் ஆண்டு. ஜூன் 18ஆம் தேதியில் தொடங்கப்பட்ட 10ஆம் கட்ட அகழாய்வில், ஏற்கனவே ஆறு மண் குழாய்கள் மற்றும் பல்வேறு நகர்ப்புற குடியிருப்பு கட்டமைப்புகள் இருந்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 10ஆம் கட்ட அகழாய்வில் எஞ்சியிருக்கும் பணிகளை மேற்கொள்ள இந்தியத் தொல்லியல் துறை வழங்கவுள்ள நிதியுதவி பற்றிய விவரங்கள் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.
- வருங்காலங்களில் வைகை நதிக்கரையோர தொல்பொருள் தளங்களில் நடைபெறும் அகழ்வாராய்ச்சிகளில் தமிழ்நாடு தொல்லியல் துறை மற்றும் இந்தியத் தொல்லியல் துறையை ஒருங்கிணைத்து, அறிவியல் ரீதியான உண்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக நிறுவப்படவுள்ள அமைப்பு குறித்த விவரங்கள் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார்.