அரசியல்

மொழிப் பிரச்சினை : “ஏன் உருவானது பங்களாதேஷ்? பாடம் பெற வேண்டாமா?” - கி.வீரமணி தாக்கு!

சமஸ்கிருதம் – ஹிந்தியைத் திணிக்கும் ஆர்.எஸ்.எஸ்.சின் ஆசையும், ஆணையும் ஒரு போதும் நிறைவேற முடியாது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மொழிப் பிரச்சினை : “ஏன் உருவானது பங்களாதேஷ்? பாடம் பெற வேண்டாமா?” - கி.வீரமணி தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

1938-ல் பெரியார் தொடங்கிய ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு இன்று மராட்டியத்தில் வெடித்து வெற்றிக் கனி பறிக்கிறது! சமஸ்கிருதம் – ஹிந்தியைத் திணிக்கும் ஆர்.எஸ்.எஸ்.சின் ஆசையும், ஆணையும் ஒரு போதும் நிறைவேற முடியாது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

மகாராட்டிர மாநிலத்தில் பலம் வாய்ந்த கட்சியாகத் திகழ்ந்து வந்த சிவசேனையைப் பயன்படுத்தி, அதன் முதுகில் ஏறி, சில ஆண்டுகள் பயணம் செய்து, தங்களது ஆட்சிக் கனவை ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. நிறைவேற்றிக் கொண்டது!

அதன் பிறகு ‘ஆயாராம், காயாராம்’ அரசியல் பேரங்களால் அக் கட்சிையப் பிளந்து, பிரிவினைக்குப் பெரிதும் ஒத்துழைத்த ‘பாஸ்கரராவ்’களை (முன்பு ஆந்திராவில் கட்சி மாறியவர்) துணைக் கொண்டு சிவசேனா – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை மாற்றினார்கள்.

தேர்தல் வித்தைகளும் ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவும் :

அடுத்து நடந்த தேர்தலில் பல வித்தைகளால் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் சுட்டிக்காட்டியதுபோல, எப்படியோ வெற்றியைப் பறித்து பழைய முதலமைச்சர் ஷிண்டேவிடமிருந்து முதலமைச்சர் பதவியை அபகரித்து, மேனாள் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் என்ற உயர் ஜாதியினரையே மீண்டும் தாங்கள் திட்டமிட்டபடி முதலமைச்சராக்கி, தங்களது மறைமுக அஜெண்டாவை நிறைவேற்றிக் கொண்டது ஆர்.எஸ்.எஸ்.!

தங்களது முகமூடியைக் கழற்றி விட்டு, மும்மொழித் திட்டம் என்ற பெயரில் கல்வியைக் காவிமயமாக்கி, சமஸ்கிருத – ஹிந்தி திணிப்புக்குத் தொடக்கமாக ஹிந்தி மொழி ஆரம்பப்பள்ளிகளில் கட்டாயம் என்று பகிரங்கமாகவே அறிவித்து, ஆணை பிறப்பித்து ஆர்.எஸ்.எஸ். தங்களது திட்டத்தை நிறைவேற்றியது, ஹிந்தி மாநிலமல்லாத மகாராட்டிராவுக்கு அதிர்ச்சியைத் தந்தது.

மொழிப் பிரச்சினை : “ஏன் உருவானது பங்களாதேஷ்? பாடம் பெற வேண்டாமா?” - கி.வீரமணி தாக்கு!

காலந் தாழ்ந்தேனும் உணர்ந்த மராட்டிய மக்கள் :

பால்தாக்கரே நிறுவிய சிவசேனையினர், சகோதரர்கள் உத்தவ் தாக்கரே – ராஜ் தாக்கரே என இரு பிரிவாக உள்ளனர்; எனவே நாம் நமது ஹிந்தித் திணிப்பு விஷமத்தை இந்த சந்தர்ப்பத்தில் எளிதில் பயன்படுத்தி வெற்றியடையலாம் என்ற பா.ஜ.க.வின் ஆசையை, அங்குள்ள மராத்திய மக்கள் – காலம் தாழ்ந்தேனும் தெளிவாக உணர்ந்து விட்டனர். (ஹிந்தி எதிர்ப்பே அவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்தது!)

முதலில் ராஜ்தாக்கரேவும், பிறகு அவரது சகோதரர் உத்தவ்தாக்கரே இருவருமே கடுமையாக இதனை எதிர்த்துப் பெரும் கிளர்ச்சி எதிர்ப்பு எரிமலையாக வெடிக்கும் என்று விடுத்த எச்சரிக்கையைப் புரிந்து கொண்டு – ஆட்சியையே இழக்கும் நிலைக்கு அது கொண்டு போகும் என்பதை உணர்ந்த பட்னாவிஸ் தலைமையில் இருக்கும் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். அரசு, அந்த ஹிந்தித் திணிப்பு ஆணையை, அவசரமாக அமைச்சரவையைக் கூட்டி ‘வாபஸ்’ வாங்கியுள்ளது. மோடி, அமித்ஷா ஆர்.எஸ்.எஸ். ஆகியோர் ஆசையும், ஆணையும் இனி ஒரு போதும் நிறைவேற முடியாது என்பது சுவரெழுத்துபோல நாட்டிற்கே துல்லியமாய் விளக்கி விட்டது.

தேசிய மொழி என்று சட்டத்தில் உண்டா? :

‘‘தமிழ்நாட்டில் தானே ஹிந்தி எதிர்ப்பு’’ என்று ஓர் அலட்சியச் சிரிப்புடன் எகத்தாளமாக கேட்டவர்கள், இன்று மக்கள் உணர்வுக்கு முன் மண்டியிடும் நிலை கண்கூடு! இந்தியஅரசமைப்புச் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் உள்ள மொழிப் பிரிவுப்படி (இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறுகள் (Articles) 344(1) and 351) 22 மொழிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதில் மற்ற மொழிகளைப் போல ஹிந்தி, சமஸ்கிருதம் போன்றவைகளும் உள்ளடக்கம் அவ்வளவுதான்!

தனியே ஹிந்தி மொழி ‘தேசிய மொழி’ (National Language) என்ற சிறப்புத் தகுதி எங்கிருந்து அதற்கு உள்ளது அரசமைப்புச் சட்டப்படி?

மொழிப் பிரச்சினை : “ஏன் உருவானது பங்களாதேஷ்? பாடம் பெற வேண்டாமா?” - கி.வீரமணி தாக்கு!

மொழிப் பிரச்சினை உணர்ச்சி பூர்வமானது :

மற்ற மொழிகளுக்கு இல்லாத தனித் தகுதி ஹிந்திக்கு உண்டா? அதற்கு உண்டா?

அலுவல் மொழி (Official Language) என்பதுகூட ஒரே ஒரு வாக்கால் பலத்த எதிர்ப்புக்களிடையில் தான் அரசமைப்புச் சட்டத்தில் (அதுவும் தலைவரின் Casting Vote மூலமே) உள்ளே நுழைக்கப்பட்ட ஒன்று. ஹிந்தியின் வயது, காலம் எவ்வளவு?

மொழிப் பிரச்சினை என்பது உணர்ச்சி பூர்வமானது; ஏன் பிரிந்தது? பங்களாதேஷ் நாடு பாகிஸ்தான் எதனால் உருவானது? பாடம் பெற வேண்டாமா? சிந்திக்க வேண்டாமா?

சிங்கப்பூரின் மொழிக் கொள்கை :

சிங்கப்பூரின் தலைசிறந்த ஆளுமையான, ‘‘நவீன சிங்கப்பூரின் தந்தை’’ என்று போற்றப்படும் பிரதமராக இருந்த லீக் வான்யூ அவர்கள் இரு மொழித் திட்டமே சிறந்தது என்று தனது ஆழமான சிந்தனைகளையும், செயலாக்கத்தையும் குறித்து தனது நூலில் எழுதுகையில், ‘‘72 சதவீத மக்கள் பேசும் மொழி, சீனமொழி. அதனை ஆட்சி மொழியாக்குவது சிறந்தது, என்று என்னிடம் பலர் சொன்னதைநான் ஏற்றுக் கொள்ளாமல் – மலாய், சீனம், தமிழ், ஆங்கிலம் எல்லாம் மதிக்கப்படும் மொழிகளாக்கி, ஆங்கிலத்தை ஆட்சிக்குப் பயன்படுத்தும் திட்டத்தை அறிவித்தது, அனைத்து மக்களையும் அது அரவணைத்துச் செல்லவும், சிங்கப்பூரிய கலாச்சாரத்தையும், ஒற்றுமையையும், ஒருங்கிணைப்பையும் உருவாக்கவும் பெரிதும் உதவியது’’ என்று அழகாகக் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாவின் அறிவுரை :

அறிஞர் அண்ணா அவர்கள் மாநிலங்களவையில் பேசுகையில் அருமையான அனுபவ அறிவுரையை எழுதி ஹிந்தி வெறியர்களுக்கு விளக்கினார்.

‘‘Unity என்பது நாட்டின் ஒற்றுமை. Uniformity யாக ஒரே மொழியாளும் ஒரே சீர்மை என்பது வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ள வேண்டாம்’’ என்று கூறினார்.

தந்தை பெரியார் 1938இல் தொடங்கிய ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பும் – ஏன் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்தியாவில் பிரதிபலிப்பது உறுதி! மேற்கு வங்கம், வட கிழக்கு, பஞ்சாப் மற்றும் தென் மாநிலங்களில் ஹிந்தி எதிர்ப்பு பரவியுள்ளது.

இதை உணராதவர்கள் பாறையில் மோதிக் கொண்டால் அவர்களுக்குத்தான் நட்டம் – புரிந்து கொள்வீர்.

banner

Related Stories

Related Stories