அரசியல்

இந்திய அரசியலமைப்பு மீது நேரடி தாக்குதல்! - சமயச்சார்பின்மையை நீக்க முற்படும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க!

ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க.வின் முதன்மை நோக்கமான ஆதிக்க எண்ணம், அவர்களின் சொந்த சொற்கள் வாயிலாகவே வெளிவந்துள்ளது.

இந்திய அரசியலமைப்பு மீது நேரடி தாக்குதல்! - சமயச்சார்பின்மையை நீக்க முற்படும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்திய கூட்டாட்சியில், கட்சி சார்ந்தும் ஒருதலைப்பட்சமாகவும் ஒன்றிய அரசு அல்லது மாநில அரசுகள் செயல்படக்கூடாது என்பதற்காக, அண்ணல் அம்பேத்கர் அவர்களால் இந்திய அரசியலமைப்பு இயற்றப்பட்டு, அதனை முறைப்படுத்த நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அம்பேத்கர் காலத்திலிருந்து இந்திய அரசியலமைப்பை எதிர்த்து வருகிற ஆர்.எஸ்.எஸ் இயக்கம், தனது கொள்கை அரசியல் கட்சியான பா.ஜ.க.வைக் கொண்டு அதிகாரத்தைக் கைப்பற்றி நாடாளுமன்றம் என்ற கருவியைக் கொண்டு, அரசியலமைப்பின் சமத்துவ கூறுகளை நீக்க முனைப்புக்காட்டி வருகிறது.

எனினும், இதனை வெளிப்படையாக தெரிவிக்காமல், தாங்கள் அரசியலமைப்பை மதிக்கிறவர்கள் என்ற பிம்பத்தை அவ்வப்போது அள்ளித்தெளித்தும் வருகிறது ஆர்.எஸ்.எஸ். அதையே, அரசியல் வட்டாரத்தில் பின்பற்றி வருகிறது பா.ஜ.க.

காரணம், ஆர்.எஸ்.எஸ்-ல் தங்களது இளமை காலங்களை கழித்து, முற்றிலும் ஆர்.எஸ்.எஸ் சிந்தனை படைத்தவர்கள்தான், தற்போது பா.ஜ.க தலைமையிலான அரசின் உயர் பொறுப்புகளை வகிக்கின்றனர். அதற்கு, மோடி, அமித்ஷா, நட்டா என எவரும் விதிவிலக்கல்ல.

இந்திய அரசியலமைப்பு மீது நேரடி தாக்குதல்! - சமயச்சார்பின்மையை நீக்க முற்படும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க!

இதுப்போன்ற சூழலில், நேற்று புது டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசாபலே, “இந்திய அரசியலமைப்பின் முன்னுரையில் சமயச்சார்பின்மை, சமதர்மம் உள்ளிட்ட சொற்கள் அவசர நிலை காலத்தில் சேர்க்கப்பட்டவை. அவை இனியும், அரசியலமைப்பில் இருக்க வேண்டுமா என்பதை சிந்திக்க வேண்டும்” என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதனால், ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க.வின் முதன்மை நோக்கமான ஆதிக்க எண்ணம், அவர்களின் சொந்த சொற்கள் வாயிலாகவே வெளிவந்துள்ளது. 1,000 ஆண்டுகளுக்கு முன்பு, பிறப்பின் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தி வைத்ததை, மீண்டும் செயல்படுத்த கடந்த 100 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸின் நோக்கமும் பொதுப்பட வெளியாகியுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், “இந்திய அரசியலமைப்பின் சமயச்சார்பின்மையையும், சமதர்மத்தையும் நீக்க ஆர்.எஸ்.எஸ் திட்டமிடுகிறது. ஆனால், பா.ஜ.க தங்களது கொள்கையில் சமூக நீதி, சமயச்சார்பின்மையை குறிப்பிட்டிருக்கிறது.

தங்களது கொள்கையை தாங்களே விமர்சிக்கிறார்களா? அல்லது பொய் கொள்கையை முன்மொழிகிறார்களா? இனியும் ஒட்டுமொத்த தேசத்தையும் ஏமாற்றுவதை பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் நிறுத்த வேண்டும். உங்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை, நினைத்தாலும் அழிக்க முடியாது” என தனது X சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories