தமிழ்நாடு மக்களின் வாக்குக்காக கோடிகளில் செலவு செய்து பிரிவினை மாநாடு நடத்தும் பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ், மக்களின் தேவைகளையும் அடிப்படைகளையும் சலைக்காமல் புறக்கணித்து வருகிறது.
அதற்கு தவிர்க்க முடியாத ஓர் எடுத்துக்காடாக, ஒன்றிய பா.ஜ.க அரசு கடந்த 10 ஆண்டுகளில் மொழிகளின் வளர்ச்சிக்கு செலவழித்த நிதி விவரம், தற்போது வெளியாகியுள்ளது.
2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 126.12 கோடி. அதில் 1 விழுக்காடு என்று எடுத்துக்கொண்டால் கூட 1.26 லட்சம் பேர். ஆனால் அதிலும் பாதி கூட இல்லாத அளவில், அதாவது வெறும் 24,821 மக்களே தாய்மொழியாக கொண்ட ஒரு மொழியை (சமஸ்கிருதத்தை), ஒட்டுமொத்த நாட்டின் ஆதிக்க மொழியாக திணிக்க, கடந்த 10 ஆண்டுகளில் ரூ.2,532.59 கோடி செலவழித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு என்பதுதான் அந்த விவரம் சொல்வது.
இவை தவிர்த்து, டெல்லி பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத பாடம், இந்திய சட்டங்களுக்கு சமஸ்கிருதம் - இந்தியில் பெயர் சூட்டல், ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு சமஸ்கிருத - இந்தி பெயர்கள், பள்ளிகளில் சமஸ்கிருதம், சமஸ்கிருதம்தான் இந்தியாவின் மூல மொழி என்ற வரலாற்று பிழையான பிரச்சாரம் என ஒன்றிய பா.ஜ.க அரசாலும், பா.ஜ.க.வின் கொள்கை தாயான ஆர்.எஸ்.எஸ் இயக்கதினாலும் தேசிய அளவில் வெகுவாக பரப்பப்படுகிறது.
இதுபோன்று, சமஸ்கிருத வளர்ச்சிக்கு பாடுபடும் இதே ஒன்றிய பா.ஜ.க அரசுதான், ‘தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை ஏற்க மறுக்கிறோம், தாய் மொழியை தூக்கிப்பிடிக்கிறோம்’ என்ற காரணத்திற்காக, PM SHRI திட்டத்தின் வழி, சுமார் 44 லட்சம் பள்ளி மாணவர்கள் பயன்பெறக்கூடிய ரூ.2,151.59 கோடி கல்வி நிதியை நிறுத்தி, வேறு மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துள்ளது.
அதுமட்டுமல்ல, நூறு நாள் வேலைத்திட்டம், தமிழ்நாடு மக்களின் போக்குவரத்து முறையை எளிதாக்கும் மெட்ரோ திட்டம் என தொடங்கி, இரயில்வே திட்டங்கள் வரை பல திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்காமல் தாமதித்தும் வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
இவை ஏன், புதிய நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவியுள்ளோம், திருக்குறளை பரப்புகிறோம் என பம்மாத்து பிரச்சாரத்தில் ஈடுபடும் பா.ஜ.க, தமிழுக்கோ, திருக்குறள் பரப்பலுக்கோ இதுவரை செய்தது என்ன? ஒதுக்கிய நிதி எவ்வளவு?
சுமார் 25,000 பேர் தாய்மொழியாக கொண்டிருக்கும் சமஸ்கிருதத்தை வளர்க்க ரூ.2,533 கோடி செலவழிக்க மனமிருக்கும் பா.ஜ.க.விற்கு, தமிழ் மொழி வளர்ச்சிக்கு கடந்த 10 ஆண்டுகளில் செலவழித்த தொகை வெறும் ரூ.113.48 கோடிதான். அதுவும், தமிழ்நாடு அரசின் பல்வேறு அழுத்தத்திற்கு பிறகு கிடைத்த நிதி. இல்லையென்றால், தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் நிதியே இல்லை என்றுகூட சொல்லும் ஒன்றிய அரசு.
இவ்வாறான சூழலில்தான், தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது என்பதற்காக மதுரை, கோவை, சென்னை என பெருநகரங்களுக்கு வருகைதர பெரும் முனைப்பு காட்டி வருகிறார் ஒன்றிய உள்துறை அமித்ஷா.
ஆனால், இந்த முனைப்பு, ஏன் தமிழ்நாடு மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு உரிய நிதி வந்தடைய காட்டப்படுவதில்லை? என்ற கேள்விக்கு, ஒன்றிய பா.ஜ.க அரசிடமோ, பா.ஜ.க அமைச்சரவையிடமோ இன்றளவும் சரியான பதில் இல்லை. காரணம், கருத்தியல் முரண். தமிழ்நாட்டில் முழங்கப்படும் சமூக நீதி.
இந்த நிதி கோரிக்கை எல்லாம், ஒன்றிய அரசின் சேமிப்பிலிருந்து கேட்கும் நிதி அல்ல. தமிழ்நாட்டு மக்கள் வரியாக செலுத்திய தொகையிலிருந்து கேட்பது. ஆனால், ஒன்றிய அரசோ தனது அமைச்சர்களின் சொத்தை கேட்பதுபோல், சினம் கொள்கிறார்கள்.
தமக்கு சொந்தமில்லாத நிதியை தரவே இத்தனை சினம் கொள்ள பா.ஜ.க அரசிற்கு உரிமை இருக்கிறது என்றால், வரியை வழங்கி வஞ்சிப்பை பெறும் தமிழ்நாட்டிற்கு எதிர்குரல் எழுப்ப உரிமை எப்படி இல்லாமல் போகும்.
இதனை தோலுரித்து காட்டவேண்டிய தமிழ்நாட்டின் பல அரசியல் கட்சிகள், பா.ஜ.க.வின் அதிகாரத்திற்கும், பணத்திற்கும் பணிந்துபோய், மக்களை பகடைகாயாக பயன்படுத்த திட்டமிடுகின்றனர்.
ஆனால், தனித்துவமிக்க தமிழ்நாடு மக்கள், பா.ஜ.க.வின் வெறுப்பு நடவடிக்கைகளையும், பாரபட்ச நடவடிக்கைகளையும் உணர்ந்து, தங்களது வாக்குக்கருவியைக் கொண்டு தக்க பதிலடி தந்து வருகின்றனர். தமிழ்நாடு மக்களின் இந்நடவடிக்கை, தென் இந்தியாவில் மட்டுமல்லாது, தேசிய அளவில் தற்போது பரவத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டின் உரிமை முழக்கம், மாநிலங்களின் உரிமைகளை மேட்டெடுக்கும் போராட்டாக மாறி வருகிறது.