சென்னை சைதாப்பேட்டையில், தமிழர்களின் தொன்மை நாகரிகத்தை வெளிப்படுத்தும் கீழடி ஆய்வின் முடிவை மறைக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து திராவிட கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். இதில் கலந்துகொண்டு பேசிய வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன்,
“கீழடி ஆய்வு தொடர்பான அறிக்கையினை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பி உள்ளது. பாரதிய ஜனதா அரசின் கலாச்சார துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஒரு தீவிரமான ஆர்.எஸ்.எஸ் கருத்தியலாளர். குறிப்பாக ஒரு வடிகட்டிய கலப்படம் இல்லாத ஆர்.எஸ்.எஸ் தொண்டர். அவரிடம் ஏதேனும் பரிந்துரைக்கு சென்றால் வெளிப்படையாகவே “அரசை விமர்சிப்பவர்கள், ஏன் பரிந்துரைக்கு வருகிறீர்கள்?” என கேட்கும் அளவிற்கான ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளர்.
தமிழர்களின் தொன்மை கீழடி ஆய்வறிக்கையில் வெளியாகியுள்ளது. இவ்வறிக்கையில், கீழடி கட்டமைப்பு கி.மு 6 ஆம் நூற்றாண்டு காலத்தை சார்ந்தது என உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு நிறுவிய ஒரு ஆய்வகத்தில் இந்த அறிக்கையும் காலமும் உறுதிப்படுத்தவில்லை. உலகளாவிய அளவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் அமெரிக்க ஆய்வகத்தில் தான் இவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கனிம சோதனை (ACCELERATOR MASS SPECTROMETER) மூலம் அதற்கான தனித்துவமாக அமைக்கப்பட்ட ஆய்வகத்தில் கறியாக மாறிய எலும்புகள், தானியங்களின் கனிமங்களை எடுத்து காலத்தினை உலகத்தார் அனைவராலும் ஒப்புகொள்ளப்படும் முறையை பயன்படுத்தி ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருப்பவர்கள் மிகைப்படுத்தி தந்த அறிக்கை இது கிடையாது. உலகத்திலுள்ள பல நாடுகள் எந்த ஆய்வகத்துக்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்கிறார்களோ அந்த ஆய்வகத்திற்கு அனுப்பியது (ARCHEOLOGICAL SURVEY OF INDIA) ஒன்றிய அரசன் ஒரு துறையாகும். அமர்நாத் ராமகிருஷ்ணாவோ அல்லது தமிழ்நாடு முதலமைச்சரோ இதை நேரடியாக அனுப்ப முடியாது.
இதற்கு பன்னாட்டு அணுகுமுறைகள் நடைமுறைகள் உள்ளது. அவற்றை பின்பற்றி 11ஆம் அடுக்கில் கிடைத்த கனிமங்கள்தான் ஆய்வுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, 6 ஆம் நூற்றாண்டை சார்ந்தது என அறிவிக்கப்பட்டது.
இதுவரையில் சொல்லப்பட்ட கீழடி அகழாய்வு சுவடுகள், ஆரிய நாகரீகத்தை அடியுடன் புரட்டிப்போட்டு, அதனை பொய் என்று நிரூபிக்கிறது. அனைத்து தளங்களிலும் ஆரியர்கள்தான் சாதனை படைத்துள்ளனர், அவர்கள்தான் முன்னோடிகள் என்று இதுவரை சொல்லிவந்த கருத்துகள் ஒரு ஆய்வின் மூலமாக பொடி பொடியாக சிதறுகிறது என்பதனை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அனைவரும் இந்தியர்கள் என கூறும் வகையில் தமிழர்களும் இந்தியர்கள் தான் ஆகையினால் தமிழர்களின் தொன்மையை குறிக்கும் ஆய்வறிக்கை இந்தியர்களின் தொன்மையை குறிக்கும் என்று அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால், வெளிவரும் எதிர்மறை தான் இந்த அறிக்கைக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என வெளிவரும் கருத்துகளாகும்.
ஆய்வுகளின் முறை அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒன்று தான், அதனை யாரும் மீற முடியாது தொல்லியல் ஆய்வுகளிலும் இந்த விதிகள் தான். இதனைத் தாண்டியும் ஆதாரங்கள் தேவை என்று கூறுகின்றனர்.
நமக்கு கிடைத்த அறிவியல், தொல்லியல் அடிப்படையில் தமிழன் 2,600 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்தான் என அறிவித்துள்ளோம். ஆனால், அதற்கு முன்பாகவே தமிழன் வாழ்ந்திருந்தான் தமிழ் இருந்தது , அப்போதும் அவன் நாகரிகத்துடன் வாழ்ந்துள்ளான் என இவை உறுதி படுத்துகிறது. ஆனால், அதனை அவர்களால் ஏற்றுகொள்ள முடியவில்லை
திராவிடம் வேறு தமிழ் வேறு என சிலர் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு திமுக எதிர்ப்பு என்பது மட்டுமே கொள்கை. திமுக எதிர்ப்பது தவறில்லை திமுகவை எதிர்ப்பது தமிழ் தேசியம் ஆகாது. தமிழ் தேசியம் என்பது இந்து தேசியத்தை எதிர்ப்பது, சனாதான தேசியத்தை எதிர்ப்பது. அது தான் உண்மையான தமிழ் தேசியம். அவை இல்லாத போலிய அரசியலை இங்கு முன் வைக்கிறார்கள்.
உண்மையினை மறைக்க முடியாது. அறிவியலை இடைக்காலமாக தள்ளிப் போட முடியும். ஆனால் இது நிரந்தரமானது அல்ல. மக்கள் நினைத்தால் தூக்கி எறிவார்கள் அந்தக் காலம் நெருங்கி வருகிறது. அதனால் கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமானது என அறிவிக்க வேண்டும்” என்றார்.