கீழடி அகழாய்வுகள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வு முடிவுகளை வெளியிட ஒன்றிய பா.ஜ.க அரசு மறுத்து வருகிறது. ஒன்றிய அரசின் இந்த தமிழர் விரோத போக்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
இதனிடையே கீழடி குறித்த ஆய்வு முடிவுகளை வெளியிட்ட ஆய்வாளர் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், கீழடி ஆய்வு முடிவுகளை ஒன்றிய அரசு உடனடியாக வெளியிடவேண்டும் என மதுரையில் இன்று திமுக மாணவரணி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று, திமுக மாணவரணி தரப்பில் மதுரை வீரகனூர் சுற்றுச்சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக மாணவரணிச் செயலாளர் ராஜீவ் காந்தி தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகம் பொறித்த முகமூடியை அணிந்தவாறும், கையில் ஏந்திவாறு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கீழடி ஆய்வு முடிவுகளை ஒன்றிய அரசு உடனடியாக வெளியிடவேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டது.