கொரோனா பரவல் காரணமாக 2021-ம் ஆண்டு நடத்தப்படவேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒன்றிய அரசு மேற்கொள்ளவில்லை. அதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்தும் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் ஒன்றிய அரசு இருந்து வருகிறது.
இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஒன்றிய அரசு மேற்கொள்ளும் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டமாக நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம் தென் மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொகுதி மறுவரையறையை நடைமுறைப்படுத்தவே ஒன்றிய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை தாமதப்படுத்துவதாக விமர்சனம் எழுந்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு, மறுவரையறை தொடர்பான ஆபத்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவாகக் கூறியுள்ளார் என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இது குறித்து கருத்து பதிவிட்டுள்ள அவர், "நாடு தழுவிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 இல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், 2022 அல்லது 2023 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் இருந்ததது ஏன் ?
தற்போது 2026-ம் ஆண்டுக்கு பின்னர் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பு தொகுதி மறுவரையறையை முன்வைத்தே அறிவிக்கப்பட்டுளது. இதன் மூலம் பிரதமர் மோடி தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறையும்.
மேலும், வட மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.கவின் இலக்கை அடைவதை நோக்கி செல்கிறார் என்பது தெரிகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு, மறுவரையறை தொடர்பான ஆபத்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவாகக் கூறியுள்ளார்"என்று கூறியுள்ளார்.