நேற்று UPSC தேர்வு முகமை நடத்திய குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வில் ஒரு கேள்விக்கு பதிலாக பெரியாரின் பெயர் இடம்பெற்றிருந்தது. இதில் பெரியாரின் பெயருக்கு பின்னால் ஜாதி அடையாளம் இடம்பெற்றிருந்தது.
ஒன்றிய தேர்வு முகமையின் இந்த செயலுக்கு திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பெயருக்குப் பின்னால் ஜாதியைப் பட்டமாகச் சூட்டிக்கொள்வது அடையாளமாகவும் பெருமிதமாகவும் இன்றளவிலும் இருக்கிறது. ஆனால் 1929-ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டில், பெயருக்குப் பின்னால் இருக்கும் ஜாதிப் பட்டத்தை நீக்குவதாக அறிவித்தார் தந்தை பெரியார். அவரது 'குடி அரசு இதழிலும் ஜாதிப் பட்டம் போடப்படுவது நிறுத்தப்பட்டது. அவரைப் பின்பற்றி, கடந்த ஒரு நூற்றாண்டில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டத்தை சூட்டிக்கொள்வதை அவமானமாகக் கருதி விட்டொழித்துவிட்டது.
ஜாதியை அவமானமாக, இழிவாகக் கருதிய பெரியாரை, அவரது ஜாதியைச் சொல்லி அழைப்பதை மதத்தின் பெயராலும், மொழியின் பெயராலும் செய்வதை சிலர் கொள்கையாகக் கொண்டிருக்கின்றனர் இப்போதும். பெரியார் சிலைக்கு காவி பூசி அவமதிப்பதைப்போல, பெரியாருக்கு ஜாதிப் பட்டம் பயன்படுத்தினாலும் அவமதிப்பது போலத்தான் என்றே இதைச் செய்கிறார்கள்.
ஆனால் அண்மையில் நடைபெற்ற குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வில் பெரியாரின் பெயருக்குப் பின்னால் ஜாதி அடையாளம் திணிக்கப்பட்டிருக்கிறது. இது வன்மையான கண்டனத்திற்குரியது. தனி நபர்களோ அல்லது அரசியல் இயக்கமோ பெரியாரைத் தூற்றுவது வேறு, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள யு.பி.எஸ்.சி. தேர்வாணையம் இத்தகைய செயலில் ஈடுபடுவது வேறு. இரண்டும் ஒன்றல்ல. இதற்குமுன்பும் இதே தவறை யு.பி.எஸ்.சி. செய்தபோதும் கண்டனங்கள் எழுந்தன. மீண்டும் மீண்டும் இதைச் செய்வது தன்னிச்சையாகவோ அறியாமையிலோ நடப்பதாகத் தெரியவில்லை.
ஜாதி ஒழிப்புக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்ட அய்யாவை, மீண்டும் மீண்டும் ஜாதிய வட்டத்திற்குள் அடக்க முயலும் ஒன்றிய அரசின் யுபிஎஸ்சி தேர்வு முகமையின் செயல் சிறுபிள்ளைத்தனமானது. கண்டிக்கத்தக்கது"என்று கூறப்பட்டுள்ளது.