அரசியல்

துணைவேந்தர் நியமன விவகாரம்: தனக்கு வாய்ப்பான இடத்துக்குள் பதுங்க நினைக்கிறார் ஆளுநர் ரவி:முரசொலி காட்டம்!

தமிழ்நாடு அரசுக்குத் தடை போடுவதாக நினைத்து, உச்சநீதி மன்றத்துக்கு இழுக்கு ஏற்படுத்தி இருக்கிறார்கள்?

துணைவேந்தர் நியமன விவகாரம்: தனக்கு வாய்ப்பான இடத்துக்குள் பதுங்க நினைக்கிறார் ஆளுநர் ரவி:முரசொலி காட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (24-05-2025)

யாருக்கு இழுக்கு?

உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பைத் தருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஒரு உத்தரவு போடுகிறது. அந்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை போடுகிறது. உச்சநீதிமன்றத்தைவிட, உயர்நீதிமன்றம் அதிகாரம் பொருந்தியதா?

தமிழ்நாடு அரசுக்குத் தடை போடுவதாக நினைத்து, உச்சநீதி மன்றத்துக்கு அல்லவா இழுக்கு ஏற்படுத்தி இருக்கிறார்கள்?

இப்படி ஒரு செயலைச் செய்யப் போகிறார்கள் என்பதை திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் வீரமணி அவர்கள், முன்கூட்டியே உணர்ந்து அறிக்கை வெளியிட்டார்கள். அதுதான் நடந்திருக்கிறது.

“இந்த வழக்கை இந்த அமர்வு விரைவுபடுத்த அதற்கென்ன அவசியம்? அதுவும் விடுமுறைக் காலத்தில்? உச்சநீதிமன்றத் தீர்ப்பை, உயர்நீதிமன்ற அமர்வு தவறு என்று கூற முடியுமா, சட்டப்படி? இரண்டு வாரத்திற்குள் ஏதாவது தடையாணை போன்று வழங்கலாமா என்று கருதும் திட்டமோ என்ற நியாயமான சந்தேகம் எழவே செய்கிறது!

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்ற அமர்வு – அதுவும் விடுமுறைக் கால அமர்வு இப்படி விசாரித்து, ஏதாவது அவசர ஆணை பிறப்பிக்கத் துடிப்பது சட்டப்படி செல்லுமா என்பதும் கேள்விக்குறி.

குடியரசுத் தலைவர் உச்சநீதி மன்றத்திடம் ஆலோசனை கேட்டு 14 கேள்விகளை முன்வைத்துள்ள நிலையில், அதே பிரச்சினையை மய்யப்படுத்தி உள்ள ஒரு வழக்கின் விசாரணைக்கு இப்போது உயர்நீதிமன்றம் மிகுந்த அவசரம் காட்டுவது, சட்டப்படியும், நியாயப்படியும் உகந்ததா?” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள். அதுவே நடந்து விட்டது.

துணைவேந்தர் நியமன விவகாரம்: தனக்கு வாய்ப்பான இடத்துக்குள் பதுங்க நினைக்கிறார் ஆளுநர் ரவி:முரசொலி காட்டம்!

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் வழங்கியது. அதன்படி துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டங்களை அரசிதழில் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இந்தச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போடுகிறார். அதனை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன், லட்சுமி நாராயணன் அமர்வு விசாரிக்கிறது.

இப்படி ஒரு வழக்கு வருகிறது என்றால், ‘இது உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை சேலஞ்ச் செய்யும் வழக்கு. அதனை விசாரிக்க முடியாது’ என்று தள்ளுபடி செய்திருக்க வேண்டும். ‘குடியரசுத் தலைவரே உச்சநீதிமன்றத்துக்கு சில விளக்கங்களைக் கேட்டுள்ளார், எனவே இது உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு’ என்று சொல்லி தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.

குடியரசுத் தலைவர், ஒன்றிய அரசு, மாநில அரசு, ஆளுநர், அரசமைப்புச் சட்டம் ஆகியவை தொடர்புடைய ஒரு வழக்கில் பொத்தாம் பொதுவாக ‘தடை’ என்று சொல்லி இருக்கிறார்கள். ‘சும்மா’ நடந்து போகும் போது, சைக்கிளைத் தள்ளிவிட்டுப் போவதைப் போல இருக்கிறது இந்த உத்தரவு.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வந்ததால் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது, பல்கலைக் கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிப்பது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய 10 சட்ட மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் தனக்குரிய சிறப்பு அதிகாரம் மூலம் ஒப்புதல் அளித்தது. மசோதாக்கள் குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடு விதித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து ஒப்புதல் வழங்கப்பட்ட மசோதாக்கள் அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. இதனை இங்கிருக்கும் ஆளுநர் ரவியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

துணைவேந்தர் நியமன விவகாரம்: தனக்கு வாய்ப்பான இடத்துக்குள் பதுங்க நினைக்கிறார் ஆளுநர் ரவி:முரசொலி காட்டம்!

தமிழ்நாட்டு ஆளுநர் தனிக் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். சிந்தனைகளை ஆணவத்துடன் விதைப்பதுதான் அவரது கொள்கை. தான் தோன்றித்தனமாக கருத்துகளைச் சொல்வதும், அதற்கேற்ப அரசியல் அரங்கை நாசப்படுத்துவதும்தான் அவரது நடத்தைகள் ஆகும். தனது பின்னடைவுகள் மூலமாக அவர் எந்தப் பாடத்தையும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. தனது தோல்விகளை ஒப்புக் கொள்ளத் தெரியாமல், அதில் இருந்து திருந்த முயலாமல், இதுபோன்ற அற்பக் காரியங்களைப் பின்புலமாக இருந்து செய்து வருகிறார் ஆளுநர்.

ஆளுநர் ‘சேலஞ்ச்’ செய்ய வேண்டியது உச்சநீதிமன்றத்தைத் தான். அவர் போக வேண்டிய இடம் உச்சநீதிமன்றம்தான். ஆனால் தனக்கு வாய்ப்பான இடத்துக்குள் பதுங்க நினைக்கிறார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன், காணொலி மூலம் ஆஜராகி வாதிட்டார்.

“துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான யு.ஜி.சி. விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, இந்த வழக்கையும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி தமிழ்நாடு அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இந்த வழக்கை அவசர, அவசரமாக விசாரிக்க எந்த அவசியமும் இல்லை. அரசின் சட்டங்களுக்குத் தடை கோரும் இந்த வழக்கில் தமிழ்நாடு அரசுத் தரப்பில் பதில் அளிக்கப் போதிய அவகாசம் தராமல் விடுமுறை கால அமர்வில் அவசரகதியில் விசாரிப்பது நியாயம் அல்ல. உச்சநீதிமன்ற உத்தரவுப்படியே தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க. நிர்வாகி தாக்கல் செய்துள்ள இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் விரிவான வாதங்களை முன்வைக்க அவகாசம் வழங்க வேண்டும்” என்றும் மூத்த வழக்கறிஞர் வில்சன் கோரிக்கை விடுத்தார்.

“என்ன வாதம் வைத்தாலும் தடைதான்” என்பதைப் போல தடை கொடுத்துள்ளார்கள் ஜி.ஆர்.சுவாமிநாதனும், லட்சுமி நாராயணனும். ‘கிடப்பது கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மணையில் வை’ என்பதைப் போல!

உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்பது அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கு இணையானது ஆகும். அதற்கே தடை போட என்ன காரணம்?

தமிழ்நாடு அரசுக்கு இழுக்கு ஏற்படுத்துவதாக நினைத்து, உச்சநீதிமன்றத்துக்கு இழுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை நடந்த முறையும், அளிக்கப்பட்ட தீர்ப்பும் எதிர்காலத்தில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகும்.

banner

Related Stories

Related Stories