எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்களை கொண்டு ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இப்படியான ஆளுநர்களின் அராஜக போக்கிற்கு உச்சநீதிமன்றம் வரை சென்று ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுதந்துள்ளார். இதைதாங்கிக் கொள்ளமுடியாத ஒன்றிய பா.ஜ.க அரசு குடியர தலைவரை வைத்து அரசியல் செய்யப்பார்கிறது.
இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,”தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டிக்கும் வகையில், குடியரசுத் தலைவர் சில குறிப்புகளை வெளியிட்டிருக்கிறார். இந்த நடவடிக்கை, உச்சநீதிமன்றத்திற்கு நேரடி சவால் விடுவதாக உள்ளது. மாநில அரசின் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுக்க காலக்கெடு விதிப்பதை, ஒன்றிய அரசு எதிர்ப்பது ஏன்? என கேள்வி எழுப்பி இருந்தார்.
மேலும், ”மாநில அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல், ஆளுநர் முடக்குவதை சட்டப்பூர்வமாக்க பா.ஜ.க முயற்சிக்கிறதா?. பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை முடக்க நினைக்கிறதா ஒன்றிய அரசு?
ஒன்றிய அரசின் ஏஜெண்டுகளாக செயல்படும் ஆளுநர்கள் மூலம் மாநில அரசுகளை கட்டுப்படுத்தும் முயற்சியை, ஒன்றிய பா.ஜ.க அரசு முன்னெடுத்துள்ளது. ஆனால், அரசியலமைப்பு சட்டத்திற்கு, இறுதி விளக்கம் அளிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கே உள்ளது.
மாநிலங்களுக்கு, இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள அதிகாரப்பகிர்வை சீர்குலைக்கும் நோக்குடன் ஒன்றிய அரசின் குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்றத்திற்கு கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்த நடவடிக்கை, மாநில சுயாட்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதையும் எதிர்த்து தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது குரலை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வழிமொழிந்துள்ளார். ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனி மொழி, கலாச்சாரம் உள்ளது. எனினும் இந்தியாவின் பலம் அதன் பன்முகத்தன்மையில் உள்ளது. ஆனால், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஆளுநர்கள் மூலம் முடக்க ஒன்றிய பாஜக முயற்சித்து வருகிறது. இது கூட்டாட்சியின் மீதான ஆபத்தான தாக்குதல், இதை எதிர்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.