முரசொலி தலையங்கம் (20-05-2025)
மாநிலப் பட்டியலில் கல்வி!
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய, 'தேசியக் கல்விக் கொள்கை - 2020 எனும் மதயானை' நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி அவர்களும் மிகமிக முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்கள். 'கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுங்கள்' என்பதுதான் அந்தக் கோரிக்கை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி அவர்கள் முன்னிலையில் பேசும் போது முதலமைச்சர் அவர்கள் இதே கருத்தை வலியுறுத்தினார்கள். அரசமைப்புச் சட்டம் எழுதப்பட்டபோது கல்வியானது, மாநிலப்பட்டியலில்தான் இருந்தது. 1975 ஆம் ஆண்டு இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட போது கல்வியானது பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. 42 ஆவது சட்டத்திருத்தம் மூலமாக இது செய்யப்பட்டது.
1976 ஆம் ஆண்டுக்கு முன்பு இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 246, ஏழாவது அட்டவணையில் பட்டியல் இரண்டில் இருந்தது. கல்வி குறித்து அனைத்து முடிவுகளை எடுக்கும் அதிகாரமும் மாநில அரசுகளின் கையில் இருந்தது. இப்போது கல்வி, பொதுப்பட்டியல் வரிசை 25 இல் இருக்கிறது. "நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது, கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றி நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசன திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று கோரி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் அவர்கள் 'அறம் செய்ய விரும்பு' அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தார். நீதிபதிகள் மகாதேவன், சுந்தர் மற்றும்செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய முழு அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடத்தியது. இன்னமும் அந்த வழக்கு விசாரணையில்தான் இருக்கிறது.
மாநிலக் கல்விக் கொள்கையை வகுக்க நீதிபதி டி.முருகேசன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். இக்குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. அக்குழு தனது முதல் பரிந்துரையாக, 'கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்' என்று கூறி இருக்கிறது.
இன்றைய பா.ஜ.க. அரசானது, கல்வித் துறை முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் பட்டியலில் இருப்பதைப் போலவே செயல்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் பட்டியலில் கல்வி இருப்பதைப் போலச் செயல்படும் அவர்கள், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்கிறார்களா என்றால் அது இல்லை. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறைக்கு இந்த ஆண்டு ரூ.40 ஆயிரம் கோடி செலவு செய்கிறது. ஆனால் ஒன்றிய பா.ஜ.க. அரசு, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் செலவு செய்யும் தொகை ரூ.70 ஆயிரம் கோடிதான். நிதி ஒதுக்கீடு செய்யாமலேயே கல்வித் துறையை ஆக்கிரமித்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
2022 ஆம் ஆண்டு ஒன்றிய கல்வி அமைச்சகத்தால் ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டது. 'கல்விக்கான நிதி நிலை செலவின பகுப்பாய்வு' என்று இதற்குப் பெயர். இந்தியாவில் கல்வித் துறைகளின் மொத்த வருவாய் செலவு ரூ.6.25 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டது. இதில் ஒன்றிய அரசால் செய்யப்படும் செலவு தொகை 15 விழுக்காடு மட்டுமே. 85 விழுக்காடு தொகையை மாநில அரசுகளே செலவு செய்கின்றன என்று அந்த அறிக்கை சொல்கிறது. 85 விழுக்காடு தொகையை செலவு செய்யும் மாநில அரசுகளால், கல்விக் கொள்கையை தீர்மானிக்க முடியாது என்பது அவமானம் அல்லவா?
அனைத்துச் செலவுகளையும் செய்வது மாநில அரசு. ஆனால் பாடத்திட்டத்தை மட்டும் அவர்களது பாடத் திட்டமாக வைத்திருக்க வேண்டுமாம். மருத்துவக் கல்லூரியை கோடிக்கணக்கில் செலவு செய்து நடத்துவது மாநில அரசு. ஆனால் மாணவர் சேர்க்கையை 'நீட்' தேர்வு மூலமாக நடத்துவது ஒன்றிய அரசு. இதைப் போல எதேச்சதிகாரப் புத்தி இருக்க முடியுமா? அனைவருக்கும் கட்டாயக் கல்வி, அனைவருக்கும் அடிப்படைக் கல்வி, அனைவருக்கும் குறைந்த பட்சக் கல்வித் தகுதி – இதுதான் பள்ளிக் கல்வியின் அடிப்படை ஆகும்.
பள்ளிக் கல்வியின் இந்த முகத்தை, அடிப்படையைச் சிதைக்கவே, 'தேசியக் கல்விக் கொள்கை' கொண்டு வரப்படுகிறது. தேசியக் கல்விக் கொள்கை, நீட் தேர்வு ஆகியவைதான், 'மாநிலப் பட்டியலில் கல்வி' என்ற முழக்கத்துக்கு முக்கிய அடிப்படையாக உள்ளது. ஒன்றிய அரசாங்கம் 'ஒரே மாதிரி பாடத்திட்டத்தில்' தான் கவனம் செலுத்துகிறது. இங்கே தேவையானது, தனித்தனி கவனிப்புகளும், அக்கறை களும் தேவை. ஒரு பி.எம்.ஸ்ரீ. பள்ளியை கட்டுவது முக்கியமல்ல. அதில் படிக்கும் பிள்ளைகளுக்கு எந்த அடிப்படையில் கல்வி கற்பிக்கப்படப் போகிறது என்பதுதான் முக்கியம். உயர் தரமான கட்டடத்தை விட, கற்பிப்பு அக்கறையே அவசியம்.
பள்ளிப் படிப்பை முடித்து உயர் கல்வி செல்பவர்களின் எண்ணிக்கை தேசிய அளவில் 27.1 சதவிகிதமாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் உயர் கல்விக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை 51.4 சதவிகிதம் ஆகும். அதாவது இந்திய சராசரியை விட தமிழகத்தின் சராசரி இரண்டு மடங்கு ஆகும். தேசிய தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 14 பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றுள்ளன. முதல் 100 இடங்களுக்குள் தமிழகத்தைச் சேர்ந்த 33 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. இதே போன்ற உயர்நிலையில் பல மாநிலங்கள் இல்லை. எனவே, அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ற கவனிப்புகள் தான் தேவை. கல்வி அறிவில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக கேரளா இருக்கிறது. 96.2 விழுக்காடு பெற்றுள்ளது கேரளா. மிகக் குறைவான கல்வி அறிவு கொண்ட மாநிலமாக பீகார் இருக்கிறது. இது 61.8 விழுக்காடு மட்டுமே. இரண்டு மாநிலக் கல்வியையும் ஒரே மாதிரியாக நடத்த முடியுமா?
நெருக்கடி நிலை காலம் இந்தியாவின் இருண்ட காலம்’ என்று சொல்கிறார் பிரதமர் மோடி. இருண்ட காலத்தில் எடுக்கப்பட்ட முடிவை எதற்காக அவர் பின்பற்ற வேண்டும். ‘இருண்ட காலம்’ என்பது அரசியலுக்காக சொல்லப்படும் கருத்தல்ல என்று மெய்ப்பிக்கும் வகையில், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற பிரதமர் மோடி முடிவேடுக்க வேண்டும்.