இந்தியாவில் வாழும் சிறுபான்மையின குடிமக்களின் இருப்பிடத்தை இடித்து தரைமட்டமாக்குவதில் பா.ஜ.க முன்னெடுத்திருக்கிற புல்டோசர் நடவடிக்கை, தேசிய அளவில் கண்டனத்தை பெற்றும், தனது நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகிறது.
குறிப்பாக, குஜராத்தில் சுமார் 30 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் பா.ஜ.க, அங்குள்ள சிறுபான்மையினர்களை பல்வேறு வகையில் வஞ்சித்து வருவதன் தொடர்ச்சியாக, இந்த புல்டோசர் நடவடிக்கை அமைந்துள்ளது.
இந்தியா என்ற கட்டமைப்பு உருவாவதற்கு முன், பேச்சளவில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட பல இடங்கள், எழுத்துப்பூர்வமான பதிவுகள் பெற்றில்லாத இடங்களாக இருப்பதைக் கண்டறிந்து, மத ஆலயங்கள், கல்வி கூடங்கள், இருப்பிடங்கள் என்றும் பாராமல், லட்சக்கணக்கான சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள கட்டடங்களை இடித்து தரைமட்டமாக்கி வருகிறது பா.ஜ.க அரசு.
இதனை, சமூக ஆர்வலர்கள் பலர் நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்ற போது, “இருப்பிடம் என்பது குடிமக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. அதனை இடித்து தரைமட்டமாக்குவது சரியல்ல. எனவே, புல்டோசர் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இதனை மீறும் அரசுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.
எனினும், நீதிமன்ற மாண்பை பொருட்படுத்தாது, தனது புல்டோசர் நடவடிக்கைகளை, தாங்கள் ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து செய்து வருகிறது பா.ஜ.க அரசு. அதற்கு, குஜராத், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் முதன்மை எடுத்துக்காட்டுகளாக விளங்கி வருகின்றன.
இந்நிலையில், குஜராத்தின் அகமதாபாத் பகுதியில் சுமார் 2.5 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவிலான இடங்கள், சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டு, அந்த மொத்த நிலப்பரப்பையும் தரைமட்டமாக்கும் நடவடிக்கையை இன்று (மே 20) தொடங்கியுள்ளது குஜராத் மாநில பா.ஜ.க அரசு.
இதனை எதிர்த்து உரிமைக்குரல் எழுப்ப மக்கள் முற்பட்டால், அவர்களை தடுத்து நிறுத்த சுமார் 3,000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவித்துள்ளது குஜராத் அரசு.
இதே வேளையில், பா.ஜ.க ஆளும் மற்றொரு மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பகுதியிலும், புல்டோசர் நடவடிக்கையை செய்து வருகிறது உத்தரப் பிரதேச பா.ஜ.க அரசு. இதனால், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்விடத்தை இழந்து வாடும் நிலை உருவாகியுள்ளது.