உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக திகழ்ந்து வருகிற இந்தியாவில், ஊடகங்களுக்கு முறையே அளிக்கப்பட வேண்டிய சுதந்திரம், ஒன்றியத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றிருப்பவர்களால் பல நேரங்களில் தடுக்கப்படுகிறது.
இதனால், ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் ஊடக சுதந்திர குறியீடு தரவரிசைப் பட்டியலில், இந்தியாவிற்கு 150,152 ஆகிய இடங்களே கிடைக்கப்பட்டு வருகின்றன. சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, போர் பதற்றத்தில் இருந்து வரும் உக்ரைன் நாடு கூட, இப்பட்டியலில் 62ஆவது இடத்தை பெற்றுள்ளது.
உலக நாடுகளிடையே இந்தியாவில் அதிகப்படியான வளர்ச்சி இருக்கிறது, இந்தியா சக்திவாய்ந்த நாடு என பிரச்சாரம் செய்து வரும் பிரதமர் மோடி, நாட்டு மக்களின் துயரை எள்ளளவு கூட எண்ணிப் பார்க்காததுதான், ஊடக சுதந்திரத்தில் இந்தியா பெற்றிருக்கிற நிலைக்கு முதன்மை காரணமாக விளங்கி வருகிறது.
மணிப்பூரில் சிக்கல் என்றால் அங்கு நடப்பதை தடுக்கவும், சட்ட ஒழுங்கை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுக்காமல், அங்கு நடைபெறுகிற சிக்கல்களை மூடி மறைக்கதான் ஒன்றிய பா.ஜ.க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதே நிலைதான், நாட்டின் பிற பகுதிகளுக்கும். இதனை சமூக வலைதளமான X நிருவனத்தின் நிர்வாகமே, அண்மையில் வெளிப்படுத்தியது.
இது குறித்து, X நிறுவனம், “ஒரு குறிப்பிட்ட நிகழ்வு (விவசாயிகள் போராட்டம்) தொடர்பாக பதிவிடும் அனைத்து கணக்குகளையும் முடக்க, சட்டப்படி கோரிக்கை விடுத்துள்ளது இந்திய அரசு.
அவர்களின் கோரிக்கை கருத்துரிமைக்கு எதிராக இருப்பதால், அதில் எங்களுக்கு உடன்பாடில்லை. எனினும், அவர்கள் சட்ட வரையறைப்படி அணுகியுள்ளதால், அதனை எங்களால் மறுக்க இயலவில்லை. மேலும், இந்த வலைதள கணக்குகளின் முடக்கமானது இந்தியாவில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் இக்கணக்குகளுக்கு தடையில்லை” என தெரிவித்தது.
இந்த நடவடிக்கைகள், தற்போது முன்னேற்றம் கண்டு, இந்தியாவில் அரசியல் சாராத, கோடி மீடியாக்களுக்குள் (Godi Media) சிக்காமல் செயல்படுகிற ஊடகமாக விளங்கும், The Wire இணையதளம் முடக்கப்படுவதுவரை சென்றுள்ளது.
ஒன்றிய அரசின் செயல்பாடுகளை ஆதாரங்களுடன் The Wire ஊடகம் வெளிப்படுத்தி வந்த நிலையில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் போர் பதற்றம் நிகழ்கிற சூழலில், இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது x சமூக வலைதளப்பக்கத்தில், “ஊடகங்களின் குரலை முடக்குவது, ஜனநாயகத்தன்மைக்கு உகந்தது அல்ல. இதனை உணர்ந்து, The Wire ஊடக முடக்கத்தை ஒன்றிய அரசு திரும்பப்பெறும் என நம்புகிறேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில் ஊடக சுதந்திரம் தடைபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என தெரிவித்துள்ளார்.