அரசியல்

"எந்த தடை வந்தாலும் அதை முறியடித்து மாணவர்களை நாங்கள் படிக்க வைப்போம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

"எந்த தடை வந்தாலும் அதை முறியடித்து மாணவர்களை நாங்கள் படிக்க வைப்போம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை, ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில், பல்கலைக்கழகங்கள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு, தனியார் கலைக் கல்லூரிகள் கூட்டமைப்பு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளின் சார்பில் நடைபெற்ற “மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு” விழா நடைபெற்றது.

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை :

மாணவச் செல்வங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறீர்களா! மேடையில் இருக்கக்கூடிய எங்களுக்கே டயர்ட் ஆகிவிட்டது. நீங்கள் டயர்ட் ஆகவில்லை – எனர்ஜியோடு இருக்கிறீர்கள். இருந்தாலும், நான் சுருக்கமாக என்னுடைய ஏற்புரையை நிகழ்த்த விரும்புகிறேன்.

கலை நிகழ்ச்சிகளின் வாயிலாகவும் – பாராட்டுரைகள் வாயிலாகவும் – நீங்கள் பொழிந்த அன்பில் நான் திக்குமுக்காடி விட்டேன் என்றுதான் சொல்லவேண்டும்! நீங்கள் பாராட்டிவிட்டீர்கள் என்று நான் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு போகவில்லை. உங்களுடைய அன்புக்கும் - நம்பிக்கைக்கும் – எதிர்பார்ப்புக்கும் இன்னும் என்னை தகுதிப்படுத்திக் கொள்ள இன்னும் கடுமையாக உழைக்கவேண்டும் என்ற எண்ணம்தான் எனக்குள் ஏற்படுகிறது!

‘மாநில சுயாட்சி நாயகர்’ என்று இந்த விழாவுக்கான இன்விடேஷனில் போட்டிருக்கிறீர்கள். அது நான் இல்லை! தமிழ்நாட்டு மக்கள்தான்!

“தி.மு.க-வுக்கு வாக்களித்தால் ஸ்டாலின் அமைக்கின்ற ஆட்சி சமூகநீதி ஆட்சியாக, சமத்துவ ஆட்சியாக இருக்கும்; மாநில சுயாட்சிக்கு அவர் உறுதியாக போராடுவார்! இந்தியாவில் கூட்டாட்சிக் கொள்கை வெற்றி பெற இறுதிவரை வாதாடுவார்” என்று நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள்தான் மாநில சுயாட்சியின் நாயகர்கள்.

என்னைப் பொறுத்தவரைக்கும், வெற்றி என்பது Team work! அதனால்தான், சில நாட்களுக்கு முன்னால், இந்த தீர்ப்புக்கு துணை நின்ற நம்முடைய வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா நடத்தினோம்! இதுதான் Team Effort-க்கான அங்கீகாரம்!

"எந்த தடை வந்தாலும் அதை முறியடித்து மாணவர்களை நாங்கள் படிக்க வைப்போம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

இந்த சமயத்தில்தான், இந்த தீர்ப்புக்காக பாராட்டு விழா நடத்தவேண்டும் என்று நம்முடைய மதிப்பிற்குரிய முனிரத்தினம் அவர்கள் கேட்கிறார் என்று நம்முடைய அமைச்சர் எ.வ.வேலு அவர்களும், நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் அவர்களும் வந்து கேட்டார்கள். பொதுவாக, யாராவது பாராட்டு விழா என்று சொன்னாலே, அதற்கு நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். நேரம் தர மாட்டேன். ஆனாலும், இந்த விழாவுக்கு நான் ‘OK’ சொன்னதற்கு காரணம் - உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புதான்! அது, தனிப்பட்ட ஸ்டாலினுக்காக இல்லை; ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்திருக்கக்கூடிய வெற்றி!

இன்னும் சொல்லவேண்டும் என்றால், இந்தியாவில் இருக்கின்ற எல்லா மாநிலங்களுக்கும், இந்திய மக்களுக்கும் சுப்ரீம் கோர்ட் மூலமாக தமிழ்நாடு பெற்றுத் தந்திருக்கக்கூடிய வெற்றி! இந்த விழா எதற்காக என்றால், உரக்கச் சொல்லப்படாமல் விடப்படும் வெற்றிகளின் அமைதியில், பொய்களும் – போலிப் பரப்புரைகளும் Chair போட்டு உட்கார்ந்திருக்கும்! அது நாட்டுக்கு நல்லதில்லை! அதனால்தான் இந்த விழா நடக்கின்றது!

இந்த விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கின்ற நம்முடைய மதிப்பிற்குரிய முனிரத்தினம் உள்ளிட்ட கல்வியாளர்கள் - நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர்கள் - துணைவேந்தர்கள் - பேராசிரியர்கள் - சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு - தனியார் கலைக் கல்லூரிகள் கூட்டமைப்பு - அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் - கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி! நன்றி! பங்கெடுத்து பாராட்டுரை வழங்கிய கல்வியாளர்களுக்கும் என்னுடைய நன்றி!

இங்கே நிறைய மாணவர்கள் இருக்கிறீர்கள். நாளைய தலைவர்கள் நீங்கள்! நீங்களே யோசித்துப் பாருங்கள்… C.M. ஆகி மக்களுக்குத் தேவையான திட்டங்களைத் தீட்டினால், After all, ஒன்றிய அரசின் ஏஜெண்டாக நியமிக்கப்பட்ட Temporary-யாக இங்கே தங்கியிருக்கின்ற ஒரு கவர்னர் அதையெல்லாம் தடுத்து நிறுத்த முடியும் என்றால், மக்கள் போடுகின்ற ஓட்டுக்கு என்ன மரியாதை? எலக்ஷன் எதற்கு நடத்தவேண்டும்?

ஆளுநர் பதவி என்பது, எந்த பயனும் இல்லாத ரப்பர் ஸ்டாம்ப் போஸ்ட்! நீங்கள் கொஞ்சம் யோசித்து பாருங்கள்… உங்கள் காலேஜ் இருக்கின்ற இடம், மாநில அரசினுடையது! உங்கள் ஆசிரியர்களுக்கு சம்பளம் தருவது மாநில அரசு! மாணவர்களான உங்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து தருவது, மாநில அரசு! ஆனால், உங்கள் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தைக் கவனிக்கின்ற துணை வேந்தரை ஆளுநர் நியமிக்க முடியும் என்றால், அது எந்தவகையில் நியாயம்? அதனால்தான் கோர்ட்டுக்குச் செல்வோம் என்று முடிவு செய்தேன்!

மாண்பமை உச்சநீதிமன்றத்தின் நீதியரசர்கள் பர்த்திவாலா அவர்களும், மகாதேவன் அவர்களும் அடங்கிய அமர்வு அரசியலமைப்பின் வழி நின்று தெளிவான தீர்ப்பை வழங்கி, பல ஆண்டுகளாக நிலவிய ஒரு பிரச்சினைக்கு முடிவு கட்டியிருக்கிறார்கள். எளிமையாக சொல்லவேண்டும் என்றால், பூனைக்கு மணி கட்டியிருக்கிறார்கள்! மாணவர்களான உங்களுக்கே தெரியும்… உங்களுடைய Project Submit செய்வதற்கு Deadline கொடுப்பார்கள்.

அதுபோல, சட்டமன்றம் பாஸ் செய்த சட்டத்தின் மேல் ஒரு மாதத்திற்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று Dead-line செட் செய்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, இந்தத் தீர்ப்பில் என்னென்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால், மசோதாவை நிறுத்தி வைப்பதாக இருந்தால், மூன்று மாதத்திற்குள் அரசுக்குத் தெரிவிக்கவேண்டும்.குடியரசு தலைவர் அவர்களுக்கு அனுப்புவதாக இருந்தால் மூன்று மாதத்திற்குள் செய்யவேண்டும். ஒரு பில் இரண்டாவது முறையாக ஆளுநருக்கு வந்தால், உடனடியாக ஒப்புதல் வழங்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் சொல்லிவிட்டது.

"எந்த தடை வந்தாலும் அதை முறியடித்து மாணவர்களை நாங்கள் படிக்க வைப்போம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

தமிழ்நாடு கவர்னர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களுக்கும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் ஒப்புதல் தந்து தீர்ப்பு வழங்கிவிட்டது.ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு வைத்தது மிகப்பெரிய வெற்றி! “நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற அரசுக்கும் மதிப்பளிக்கின்ற வகையில், ஆளுநர்கள் செயல்படவேண்டும்' என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்! இப்படி ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்திருக்கிறோம்! நான் கேட்கிறேன்… பிரதமரின் உரிமையை குடியரசுத் தலைவர் எடுத்துக்கொண்டால் சும்மா இருப்பார்களா? இந்தத் தீர்ப்பு வந்ததும் தாங்கிக்கொள்ள முடியாமல், ‘குடியரசு துணைத் தலைவர்’ சொல்கிறார்… என்ன சொல்கிறார்.... “நாடாளுமன்றம் பெரிய அதிகாரங்கள் கொண்டது” என்று சொல்கிறார். ஏங்க…! நாங்களும் அதைத்தான் சொல்கிறோம் - சட்டமன்றத்துக்கு, ஆளுநர்களை விட அதிக அதிகாரம் இருக்கிறது!

இதையெல்லாம் நாங்கள் சொல்வதால், நாங்கள் ஆளுநரின் அதிகாரப் போட்டி நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். நமக்கும், அவருக்கும் ஏதாவது தனிப்பட்ட பகை இருக்கிறதா? எதுவுமில்லை!

இப்போது சமீபத்தில்கூட, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு போயிருந்தேன் - நன்றாகதான் பேசி வந்தோம். அரசியலில் கொள்கை மாறுபாடுகள் இருந்தாலும், மனிதர்களுக்குள்ளே பண்பாடும், நட்புணர்வும் காக்கப்படவேண்டும்! நாளைக்கே இந்த ஆளுநர் இடத்தில் வேறு யாராவது வந்து, அவர்களும் இதையே செய்தால், அவருடைய செயல்பாடுகளையும் எதிர்க்கத்தான் போகிறோம்!

ஆனால், நம்மை பொறுத்தவரைக்கும், நம்முடைய உரிமையை எந்தக் காலத்திலேயும் விட்டுத்தர மாட்டோம்! இதுதான் என்னுடைய பாலிசி! ஆனால், என்னைப் பொறுத்தவரைக்கும், தனிப்பட்ட முறையில் கேட்டீர்கள் என்றால், இதே ஆளுநர் தொடரவேண்டும் என்பது தான் என் விருப்பம். இப்படி தொடர்ந்தால் தான் நமக்கு மக்களிடத்தில் இன்னும் செல்வாக்கு வந்துகொண்டே இருக்கும். அவர்களுக்கு செல்வாக்கு போய்க்கொண்டே இருக்கும். செல்வாக்கு இல்லை. அதுவேறு. இந்தத் தீர்ப்பைப் பற்றி, நான் உங்களிடம் விவரிக்க காரணம், எதிர்காலத்தில் நீங்கள் வேலைகளுக்கு போகும்போதோ அல்லது வேறு இடங்களிலோ அதிகார அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டீர்கள் என்றால், நீங்கள் நடத்துகின்ற போராட்டம் என்பது, உங்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்குப் பிறகு வரப் போகிறவர்களுக்கும் தீர்வு சொல்லக் கூடியதாக அமையவேண்டும்!

அடுத்து, இந்தியாவில் இன்னும் தேவையான துறைகளில் மாநிலங்களுக்கான உரிமைகள் முழுமையாக வழங்கப்படாமல் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், இந்தத் தீர்ப்பு கொடுத்திருப்பது நம்பிக்கையோடு – மாநில சுயாட்சியை வென்றெடுக்க - ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்திருக்கிறோம். இந்தக் குழுவின் அறிக்கையைப் பற்றியும் வரலாறு நிச்சயம் பேசும்! இந்தியாவுக்கே என்றைக்கும் முன்மாதிரியாக இருப்போம்!

அடுத்து, தமிழ்நாடு உயர்கல்வியில் எப்படி இருக்கவேண்டும் என்று உங்களுக்கு நன்றாக தெரியும். தமிழ்நாட்டின் உயர்கல்வி வளர்ச்சியை, இன்னும் உயர்த்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு அடித்தளம் அமைத்து கொடுத்திருக்கிறது.

இந்தியாவில் இருக்கின்ற டாப் 100 கல்லூரிகள் - பல்கலைக்கழகங்கள் லிஸ்ட் எடுத்து பாருங்கள்.

ஐந்தில் ஒரு பங்கு நம்முடைய தமிழ்நாட்டில்தான் இருக்கிறது.நாட்டிலேயே Ph.D Scholars தமிழ்நாட்டில்தான் அதிகம்.உயர்கல்வியில் தமிழ்நாட்டின் சேர்க்கை விகிதம், அதாவது G.E.R. 47 சதவிகிதம்! ஆனால், National Average 28.4 சதவிகிதம் தான்!

அப்போது நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்… நாம் எந்த அளவுக்கு Advance-ஆக இருக்கிறோம் என்று. இதையெல்லாம் பேசுவதால், “இத்துடன் என் கடமை முடிந்துவிட்டது. தமிழ்நாட்டிற்கு இதுவே போதும்” என்று நான் நினைக்கவே மாட்டேன். உலகத்தோடு போட்டி போடவேண்டும். அதற்கு, நம்முடைய இளைஞர்கள் இன்னும் வளர்ந்தாக வேண்டும். திராவிட மாடல் அரசு, இளைஞர்களுக்கான அரசு! ஏற்கெனவே நாம் மாணவர்களுக்காக செயல்படுத்திக் கொண்டு இருக்கின்ற திட்டங்கள் எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரியும்…

"எந்த தடை வந்தாலும் அதை முறியடித்து மாணவர்களை நாங்கள் படிக்க வைப்போம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

இங்கு குறிப்பிட்டுச் சொன்னார்கள்...

41 இலட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ள நான் முதல்வன் திறன் பயிற்சி திட்டம்,

மாணவர்கள் தங்களுக்கான சரியான Course எது என்று தேர்ந்தெடுக்க ‘கல்லூரிக் கனவு திட்டம்’,

கல்லூரியில் சேருகின்ற அரசுப் பள்ளி மாணவர்கள் எல்லோருக்கும் மாதாமாதம் ஆயிரம் ரூபாய் வழங்குகின்ற ‘புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டம்’,

கிராமப்புற மாணவர்களுக்காக ‘சிகரம் தொடு திட்டம்’, பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துகின்ற மாணவர்கள் உயர்கல்வி பயில ‘உயர்வுக்குப்படி திட்டம்’ - இப்படி பல திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டு இளைஞர்கள் சிறந்த வேலைவாய்ப்பை பெற பாடுபடுகிறோம். உங்கள் எதிர்காலத்திற்காக தான் நம்முடைய பல்கலைக்கழகங்களை வளர்த்தெடுக்க நினைக்கிறோம்.

தமிழ்நாட்டில் உயர்கல்வியை உலகளவில் மேம்படுத்த – துணைவேந்தர்கள், பதிவாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தை சில நாட்களுக்கு முன்னால் தலைமைச் செயலகத்தில் நடத்தினேன். அதில் நான் வலியுறுத்தி பேசியது என்னவென்றால், உலகத் தரம் வாய்ந்த கல்வியை வழங்கவேண்டும் - உலகத்தில் இருக்கின்ற பல நாடுகளில் இருந்தும், நம்முடைய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க மாணவர்கள் வரவேண்டும் – அதற்கான திட்டத்தை தயார் செய்யுங்கள் என்று சொல்லியிருக்கிறேன். கல்வி நிலையங்களில், Scientific கருத்துகள் மட்டுமே கற்பிக்கப்பட வேண்டும். பகுத்தறிவுக்கு எதிரான முட்டாள்தனமான கட்டுக்கதைகளை, மூடநம்பிக்கைகளை பரப்புகின்ற இடமாக பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஒருபோதும் இருக்கக் கூடாது!

இரண்டே Agenda தான் இருக்கவேண்டும்:

ஒன்று, Scientific Approach,

மற்றொன்று, Social Justice!

இதை கற்று தருகின்ற இடமாக தான் கல்விக்கூடங்கள் இருக்கவேண்டும். இதற்கு மாறான நிகழ்ச்சிகளை நடத்துவதோ, இதற்கு எதிராக பேசுகிறவர்களை கெஸ்ட்டாக கூப்பிடுவதோ நடந்தால், இந்த அரசின் Reaction கடுமையாக இருக்கும். ஏற்கெனவே ஒரு சம்பவத்தில் அது தெரிந்திருக்கும்.

மாணவர்கள் அதிகமாக இருக்கிறீர்கள்… உங்களிடம் சில விஷயங்களை ஷேர் செய்த கொள்ள விரும்புகிறேன். நிறைய பேர் இப்போது “படிக்காமாலேயே பெரிய ஆள் ஆகிவிடலாம், பணம் சம்பாதிக்க படிக்க வேண்டும் என்று அவசியமில்லை - யூடியூப்-ல் கூட சம்பாதிக்கலாம் - இன்ஸ்டாகிராமில் சம்பாதிக்கலாம் - அந்தக் கடை போடலாம், இந்தக் கடை போடலாம்” என்று டிசைன் டிசைனா ஏமாற்றுவார்கள். அந்த வலையில் சிக்கிவிடாதீர்கள். அவர்கள் சொல்வதெல்லாம் விதிவிலக்குகள். விதிவிலக்குகள் எப்போதும் விதியாகாது. உங்களுக்கு விருப்பமான எந்த வேலையையும், தொழிலையும் செய்யலாம். அது தவறில்லை. ஆனால், எல்லாவற்றிற்கும் கல்விதான் அடிப்படை! மறந்துவிடாதீர்கள். படிப்பு பயனற்றது என்று யாராவது சொன்னால், அவர்களை Silent-ஆக உங்களுடைய வாழ்க்கையிலிருந்து ‘Avoid’ செய்யுங்கள்.

கல்விதான் யாராலும் பறிக்க முடியாத உண்மையான சொத்து என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறேன். இன்னும் நூறு முறை சொல்லுவேன்… ஏனென்றால், மாணவர்களை படிக்கவிடக்கூடாது என்று இப்போது புதிது புதிதாக தேசிய கல்விக் கொள்கை, விஸ்வகர்மா திட்டம் என்று திட்டங்களை கொண்டு வருகிறார்கள்.

மற்றொரு பக்கம், சோசியல் மீடியா மூலமாக தவறான அறிவுரைகள், திசைதிருப்பல்கள், மறுபக்கம், மாணவர்களிடம் சாதிய உணர்வை தூண்டுவது என்று பல வகையில் சதி நடைபெறுகிறது. உங்கள் Role Model-யை சோஷியல் மீடியாவில் தேடாதீர்கள். சோஷியல் மீடியா என்பது, பொழுதுபோக்குக்கான ஒரு இடம்! அது உங்களுடைய திறனை மட்டுப்படுத்துவதாக இருக்கக் கூடாது! இதை மீறி படித்து நீங்கள் முன்னேறவேண்டும். ஏற்கெனவே, A.I – Quantum Computing போன்ற துறைகளில் நம்முடைய தமிழ்நாட்டு மாணவர்கள்தான் முன்னணியில் இருக்கிறார்கள். இதற்குக் காரணம், கல்வியில் நம்முடைய தொலைநோக்குப் பார்வைதான்! இதே வேகத்துடன், அடுத்த நூற்றாண்டுக்கு தேவையான கல்வியை நம்முடைய மாணவர்களுக்கு தர கல்வியாளர்கள் உறுதியேற்கவேண்டும்!

கல்வியுடன், நம்முடைய மாணவர்களுக்கு சமூகநீதி – இடஒதுக்கீடு ஆகிவற்றின் வரலாறு தேவை. இதனால், அடைந்துள்ள வளர்ச்சி ஆகியவற்றைச் சொல்லிதந்து, நாம் இன்னும் அடைய வேண்டிய வளர்ச்சியை நோக்கி நடைபோடவேண்டும்! எந்தத் தடை வந்தாலும், அதையெல்லாம் முறியடித்து நாங்கள் நிச்சயம் உங்களை படிக்க வைப்போம்!

நான் சொல்லிக் கொள்வதெல்லாம்… நீங்கள் பார்ப்பது மட்டுமே உலகம் என்று நினைக்காதீர்கள். உலகம் மிக மிகப் பெரியது. அதை பார்க்க கல்வி என்கின்ற கண்ணாடியை நீங்கள் போட்டுக்கொள்ள வேண்டும்!

சாதி, மதம், தெரு, ஊர் என்று உங்களுடைய எல்லையை நீங்களே சுருக்கிக் கொள்ளாதீர்கள். அந்தக் காலத்திலேயே “பிச்சை எடுத்தாவது படி” என்று ஏன் சொன்னார்கள் என்று யோசியுங்கள்… கல்விக்கு மிஞ்சியது எதுவுமே இல்லை!

நிறைவாக, நான் சொல்லிக்கொள்ள விரும்புவது… இங்கே, அரசு – கல்வியாளர்கள் – மாணவர்கள் இருக்கிறார்கள். நமக்கான உரிமைகளை மீட்டு, உங்களைப் படிக்க வைப்பது அரசின் கடமை!

உங்களுக்கு நல்ல கல்வியை வழங்கி, அறிவார்ந்தவர்களாக உயர்த்துவது கல்வியாளர்களின் கடமை! நாங்கள் உருவாக்கித் தருகின்ற வாய்ப்புகளையும், கல்வியையும் பயன்படுத்தி, வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி, உங்கள் குடும்பத்துக்கும் – நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டியது, மாணவர்களாகிய உங்கள் கடமை! இந்த கடமைகளை நிறைவேற்ற இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும், திராவிட மாடல் அரசும் என்றைக்கும் துணை நிற்கும்! துணை நிற்கும்!

banner

Related Stories

Related Stories