முரசொலி தலையங்கம் (28-04-2025)
கலைஞர் பல்கலைக் கழகம்!
தமிழினத் தலைவர் - முத்தமிழறிஞர் கலைஞரே ஒரு பல்கலைக் கழகம். அவர் பெயரால் பல்கலைக் கழகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
கலைஞர் பல்கலைக் கழகம் கும்பகோணத்தில் அமைக்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பும் மிகச் சிறப்புக்குரியது ஆகும். திராவிட இயக்கத்தின் மாணவர் இயக்க மாநாடு முதன்முதலாக நடந்த இடம் கும்பகோணம். திராவிட இயக்கச் சிந்தனை கொண்ட மாணவக் கண்மணிகள் 1940களில் அங்கிருந்து தான் தங்களது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்கள். அத்தகைய மாணவர்களில் ஒருவர்தான் கலைஞர். திருவாரூரில் தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் அமைத்து நடத்தி வந்த மாணவர் கலைஞர் அவர்கள், இந்த மாநாட்டிலும் கலந்து கொண்டார்.
திராவிடர் கழகம் உருவாகும் முன்பே 1943 ஆம் ஆண்டு திராவிட மாணவர் கழகம் உருவாகிவிட்டது. பேரறிஞர் அண்ணா அவர்கள் இதற்கான மாநாட்டைத் தொடக்கி வைத்தார்கள். அத்தகைய ஊரில் கலைஞர் பெயரால் பல்கலைக் கழகம் அமைவது பொருத்தமானது.
கோவையில் வேளாண் பல்கலைக் கழகம் - சென்னையில் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம்- சென்னையில் கால்நடைப் பல்கலைக் கழகம் - டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகம் - உலகத் தமிழ் இணையப் பல்கலைக் கழகம் - நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் - சேலம் பெரியார் பல்கலைக் கழகம் - கோவை, திருச்சி, மதுரை, நெல்லையில் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக் கழகங்கள் - திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களை எல்லாம் அமைத்தவர் கலைஞர். அவர் பெயரால் பல்கலைக் கழகம் அமைவது பொருத்தமானது.
புதுமுக வகுப்பு வரை இலவசக் கல்வி என்று முதல்வர் கலைஞர் அறிவித்த பிறகுதான் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் பள்ளிகளை நோக்கி வந்தார்கள். இதை அறிந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களே, 'எனக்கு இது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கலைஞர் கருணாநிதியிடம் சொல்லுங்கள்' என்று சொல்லி அனுப்பினார்கள். தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளை அதிகப்படுத்தினார் முதல்வர் கலைஞர். அனைத்துப் பள்ளிகளிலும் நூலகம் அமைத்தார். உடற்கல்வியை கட்டாயம் ஆக்கினார். அறிவியல் பாடங்களை அதிகப்படுத்தி, அறிவியல் கூடங்களை அமைத்தார். பாடப்புத்தகங்களை இலவசமாக வழங்கினார். தமிழ்நாடு பாட நூல் நிறுவனம் அமைத்தார். கிராமப்புற மாணவர்களுக்கும், குடும்பத்தில் முதல் பட்டதாரிகளுக்கும் சலுகைகள் கொடுத்தார். அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கினார். தமிழ் வழிப்படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தார். கணினி பாடத்தை அறிமுகம் செய்தார்!.
தி.மு.க.வின் முதல் ஆட்சி காலத்திலேயே தமிழகத்தில் ஏராளமான அரசு கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. 1947 முதல் 67 வரையிலான 20 ஆண்டு காலத்தில் திறக்கப்பட்ட மொத்த கல்லூரிகள் 63 தான். ஆனால் கலைஞர் முதல்வராக இருந்த 1969 முதல் 1975 காலக்கட்டத்தில் 97 அரசு கல்லூரிகள் திறக்கப்பட்டது. அதனால்தான் காமராசர் காலம் 'பள்ளிக் கல்வியின் பொற்காலம்' என்றால், கலைஞர் காலம், 'கல்லூரிக் கல்வியின் பொற்காலம்' என்கிறோம்.
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மூலம் அனைத்துப் பாடங்களையும் தமிழில் மொழிபெயர்த்து 1000க்கும் மேற்பட்ட பாடப்- புத்தகங்களை வெளியிட்டார். தமிழை கணினிமொழி ஆக்கினார். தமிழ் பயிற்று மொழிக்கான அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். இன்று பள்ளிக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை தமிழில் படிக்கலாம் என்ற நிலையை உருவாக்கினார் கலைஞர்.
தமிழ்நாட்டின் உயர் கல்வி வளர்ச்சியில் தலைவர் கலைஞர் அவர்களின் பங்கு அளப்பரியது. தமிழ்நாட்டில் உயர் கல்வி செழித்தோங்கிட வேண்டுமென்ற முனைப்போடு அவர் தீட்டிய திட்டங்கள் ஏராளம். தமிழ்நாட்டின் மாணவர்கள் உயர் கல்வி பெற வேண்டுமென்ற முனைப்போடு, அனைத்துத் துறைகளிலும் ஒரு பல்கலைக் கழத்தை உருவாக்கிட வேண்டுமென்று அவர் திட்டங்களைத் தீட்டினார்.
மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி உருவாக்க வேண்டும் என்பதும் அவரது சிந்தனையில் தான் முதன்முதலாக உதித்தது. இன்றைக்குத் தமிழ்நாடு கல்வியிலும், தொழில் துறையிலும் முன்னேற்றம் கண்டுள்ளது என்றால், அதற்கான அடித்தளங்களை உருவாக்கிக் கொடுத்தவர் கலைஞர் அவர்கள்தான்.
உயர் கல்வி படிக்க வருபவர்களுக்கு நுழைவுத் தேர்வு இருந்தது. அந்த நுழைவுத் தேர்வு முறையை 2007 ஆம் ஆண்டு ரத்து செய்தார் முதலமைச்சர் கலைஞர். இதன் மூலமாகத் தான் அனைவருக்கும் உயர் கல்வி சாத்தியமானது.
தலைவர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி, இன்று தமிழகத்தில் மிகப்பெரிய கல்விப் புரட்சியையே ஏற்படுத்தியிருக்கிறது. ஊருக்குள் பள்ளிகள், நகரங்களில் கல்லூரிகள், மாவட்டங்களில் பல்கலைக் கழகங்கள் என உருவாக்கினார் கலைஞர்.. நுழைவுத் தேர்வை ரத்து செய்தார். இதன் மூலமாக கல்வியானது ஏழை - பணக்காரன், நகரம் - கிராமம் என எந்த வேறுபாடும் இல்லாமல் சீராக வளர்ந்தது.
இது கணினி - தொழில் நுட்ப உலகமாக இருக்கிறது. இப்படி இருக்கும் என்பதை 1996 ஆம் ஆண்டே கணித்தவர் கலைஞர். 1997-ஆம் ஆண்டே தகவல் தொழில் நுட்பக் கொள்கையை முதன்முதலில் தமிழ்நாட்டிற்கு வகுத்துக் கொடுத்தார் முதல்வர் கலைஞர். தரமணியில் 'டைடல் பார்க்கை' உருவாக்கிட அதற்கென புதுக் கொள்கையினை உருவாக்கி, ஆசியாவிலேயே மிகப் பெரிய தகவல் தொழில்நுட்பக் கட்டடமாக அதனைக் கட்டி, 2000-ஆம் ஆண்டில் அதனைத் திறந்து வைத்தார். இன்று உலகம் முழுவதும் தமிழ்நாட்டு இளைஞர்கள் ஐ.டி.துறையில் கோலோச்ச அடித்தளம் அமைத்தவர் முதல்வர் கலைஞர். 5.7.2000 அன்று தமிழ் இணையக் கல்விக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது.
இன்று தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறை இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கிறது. உயர் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் அதிகமாக இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இதுதான் கலைஞரின் வரலாற்றுச் சாதனையாகும்.
கலைஞர் என்ற பெயரை ஒரு பல்கலைக் கழகத்துக்கு வைப்பது மிகமிகப் பொருத்தமானதே எனவே தமிழ்நாடு அரசுக்கும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
'காமராசர் அவர்கள், கல்வியைக் கொடுத்து கண் திறந்தார், கலைஞர் அவர்கள் எழுந்து நடக்க வைக்க வேண்டும்' என்று சொன்னார் தந்தை பெரியார். எழுந்து நடக்க வைத்தவர் கலைஞர். அதலட் ஓடி வெற்றி பெறுவதைப் போல வெற்றி பெற வைத்துக் கொண்டிருக்கிறார் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
தமிழ்நாடே கல்வியில் சிறந்த பல்கலைக் கழகமாக ஆக - பல்கலைக் கழகங்களின் நிரந்தர வேந்தராக அவர் ஆன அரசியல் புரட்சியும் காரணமாக அமையப் போகிறது.