ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் 4 மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் தாமதம் செய்தார்.
2021 ஆம் ஆண்டு கேரள சட்ட மன்றம் நிறைவேற்றிய மூன்று பல்கலை கழக மசோதாக்கள், 2022 கூட்டுறவு சங்கங்கள் மசோதா ஆகிய 4 மசோதாக்களை கேரள ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளார். இதனை எதிர்த்து கேரள அரசு 2023 ஆம் ஆண்டு மனுதாக்கல் செய்தது.

தற்போது கேரளாவில் புதிய ஆளுநர் பதவி ஏற்றும் அந்த 4 மசோதாக்கள் தொடர்ந்து நிலுவையில் உள்ளன. அவரும் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத நிலையில், கேரள அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஜாய்மாலா பாக்ஷி அமர்வில் விசாரணைக்கு வருகிறது. அப்போது தமிழ்நாடு அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பை சுட்டிக் காட்டி வாதிட கேரள அரசு தரப்பு வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர்.








