ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் தொல்லைகள் கொடுத்து வருகிறது. மேலும் கல்வி நிதி, வெள்ள நிதி உள்ளிட்டவை கொடுக்காமல் மோடி அரசு தென் மாநிலங்களை வஞ்சித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு கூட தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்காமல் ஒன்றிய பாஜக அரசு வஞ்சித்து வருகிறது.
அந்த வகையில் கேரளாவில் கடந்த ஆண்டு (2024) ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏற்பட்ட சேதத்தை ஈடு செய்ய இப்போது வரை ஒன்றிய அரசு நிதி ஒதுக்காமல் இருக்கிறது. கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதோடு பலரும் இதில் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
இந்த கோர நிகழ்வு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி நிதியுதவி அளித்ததோடு, மருத்துவ உதவிகளையும், மீட்புக்குழுவையும் அனுப்பி உதவி செய்தது. அதோடு கர்நாடக காங்கிரஸ் அரசும் 100 வீடுகள் கட்டி தருவதாக உறுதியளித்தது. இப்படியாக அண்டை மாநிலத்துக்காக மற்ற மாநிலங்கள் உதவி கரம் நீட்டிய நிலையில், ஒன்றிய அரசு இதில் கண்டும் காணாதது போல் இருந்து வருகிறது.
இந்த பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்கக் கோரி கேரள அரசும், இந்தியா கூட்டணி கட்சிகளும் வலியுறுத்திய நிலையில் கூட, மனசாட்சியே இல்லாமல், இதனை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது என்று ஒன்றிய அரசு தெரிவித்தது. அதோடு தேவையான நிதியையும் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த நிலையில் கேரளாவின் அழிவையே ஒன்றிய பாஜக அரசு விரும்புவதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஆவேசமாக பேசியுள்ளார்.
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான எல்.டி.எஃப். அரசு 4ஆம் கொண்டாட்ட விழா இன்று கொண்டாடப்பட்டது. அப்போது இந்த விழாவில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியதாவது,
கேரளா சமீபத்தில் கடுமையான வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை சந்தித்தது. இயற்கை பேரிடர்களால் அழிவை சந்தித்த கேரளாவிற்கு ஒன்றிய அரசு எந்தவித உதவியும் செய்யவில்லை. இந்த விவகாரத்தில் ஒன்றிய பாஜக அரசு கேரளாவிற்கு எதிராக முற்றிலும் எதிர்மறையான நிலையை எடுத்தது.
மற்ற இடத்தில் இருந்து தருவதாக சொன்ன உதவிகளைக் கூட அவர்களுடைய அதிகாரத்தால் தடுத்தது நிறுத்த முயற்சித்தனர். கேரளா நொறுங்கட்டும், இன்னும் நொறுங்ககட்டும் என நினைத்தனர். அழிவு மனப்பான்மையுடன் ஒன்றிய அரசு செயல்பட்டது.
பல வருடத்திற்கு முன் கேரளா மாநிலம் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இந்த இயற்கை பேரிடரில் இருந்து கேரளா எப்படி மீளப்போகிறது என்று ஒட்டு மொத்த உலகமும் நினைத்தது. இயற்கை சீற்றத்தில் இருந்து மாநிலம் தப்பியது பற்றி நாடும், உலகமும் மகிழ்ச்சி அடைந்தன.
எப்படி நம்மால் தப்பிக்க முடிந்தது?. இதற்கு ஒரேயொரு காரணம்தான் இருக்கிறது. மாநிலத்தின் ஒற்றுமை மற்றும் அதன் மக்ககள். கடினமான நேரங்கள் மற்றும் சவால்களில் இருந்து தப்பிக்க ஒற்றுமை மற்றும் மக்கள் வலிமையாக இருந்தனர். கேரளாவின் அழிவதை ஒன்றிய அரசு விரும்பி, அதற்காக எதிர்மறையான நிலைப்பாட்டை எடுத்திருந்தாலும் கேரளா நொறுங்கி போகவில்லை." என்றார்.