அரசியல்

“பதவிக்காலம் முடிந்த பிறகும் வெட்கமின்றித் ஒட்டிக்கொண்டிருக்கும் ஆர்.என்.ரவி!”: தொல்.திருமாவளவன் கண்டனம்!

“உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் ஆளுநரின் இப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.”

“பதவிக்காலம் முடிந்த பிறகும் வெட்கமின்றித் ஒட்டிக்கொண்டிருக்கும் ஆர்.என்.ரவி!”: தொல்.திருமாவளவன் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, இருப்பிடம் முதல் ஊதியம் வரை வழங்குவது தமிழ்நாடு அரசுதான் என்பதை ஆர்.என்.ரவி முற்றிலுமாக மறந்து, முழுக்க முழுக்க பா.ஜ.க.வின் பிரச்சாரக் குரலாகவே, தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகிறார்.

இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சட்டப்போராட்டத்தில் கடும் தோல்வி அடைந்தது, ஆர்.என்.ரவியை கூடுதலாக சினப்படுத்தியுள்ளது. அதனால், நாள்தோறும் புதுப்புது சர்ச்சை நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறார். அதில் ஒரு பகுதியாக ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில், தற்போது ஒரு புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

இது குறித்து, வி.சி.க தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏப்ரல் 25,26 ஆகிய நாட்களில் நீலகிரியில் உள்ள ஆளுநர் மாளிகையான "ராஜ்பவனில்" தமிழ்நாட்டில் உள்ள 45 மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் மாநாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் தலைமையில் நடைபெறும் எனவும்; அதில் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் அவர்கள் பங்கேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் ஆளுநரின் இப்போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழ்நாடு அரசு 10 பல்கலைக்கழக மசோதாக்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் கடந்த ஏப்ரல் 08ஆம் நாள் அரசமைப்புச் சட்ட உறுப்பு -142இன் மூலம் பத்து மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து சட்டமாக்கியது உச்சநீதிமன்றம். இந்த சட்டங்களின் மூலம் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் முதலமைச்சரிடமே இப்போது உள்ளது.

அதனடிப்படையில் கடந்த ஏப்ரல்-16 ஆம் நாள் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

“பதவிக்காலம் முடிந்த பிறகும் வெட்கமின்றித் ஒட்டிக்கொண்டிருக்கும் ஆர்.என்.ரவி!”: தொல்.திருமாவளவன் கண்டனம்!

மசோதாக்களை கிடப்பில்போடுவது சட்டவிரோதமானது என ஆளுநரின் போக்கை உச்சநீதிமன்றம் கண்டித்த பின்னரும் கூட அரசமைப்புச் சட்டத்தையும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் துளியும் மதிக்காமல் மீண்டும் குழப்பத்தை உண்டு பண்ணும் வகையில் அடாவடித்தனமாகவும் சட்டவிரோதமாகவும் செயல்படும் ஆளுநரின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

'உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல் செயல்படுகிறது ' என அண்மையில் சனநாயகத்தின் மீதான தனது வன்மத்தைக் கக்கிய குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் அவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்பார் எனக் கூறப்படுகிறது. அவர் மேற்குவங்க ஆளுநராக இருந்தபோது ஆர்.என்.ரவியைப் போலத்தான் மசோதாக்களை கிடப்பில் போட்டு மாநில அரசை முடக்கினார். அரசமைப்புச் சட்டத்தின்மீது கொஞ்சமும் மதிப்பில்லாதவர்தான் இந்த ஜகதீப் தன்கர் ஆவார்.

அவர் ஆர்.என்.ரவியோடு கூட்டு சேர்ந்து தமிழ்நாட்டில் குழப்பம் விளைவிக்க முனைந்திருக்கிறார். ஆளுநரின் தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டைத் தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வமாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆளுநர் பதவிக்காலம் முடிந்த பிறகும் வெட்கம் சிறிதுமின்றித் தமிழ்நாட்டில் தொடர்ந்து ஒட்டிக்கொண்டு, சனாதனப் பிரிவினைவாதக் கருத்துகளைப் பரப்பிவரும் ஆர்.என்.ரவி அவர்கள் உடனடியாக ஆளுநர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனக் குடியரசுத் தலைவருக்கு மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories