துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் 4.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.000 இருக்கைகள் வசதியுடன் கட்டப்பட்டுள்ள “கலைஞர் கலையரங்கத்தை” திறந்து வைத்தார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (20.4.2025) நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் 4.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.000 இருக்கைகள் வசதியுடன் கட்டப்பட்டுள்ள”கலைஞர் கலையரங்கத்தை” திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நந்தனம் அரசு கலைக்கல்லூரியின் முன்னாள் மாணவரும், இந்நாள் வணிகவியல் துறை பேராசிரியருமான ஆர்.ராஜ்குமார் அவர்கள் கல்லூரியின் மேம்பாட்டிற்காக 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை துணை முதலமைச்சர் அவர்களிடம் வழங்கினார்.
மேலும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாநில அளவில் நடத்தப்பட்ட விரைவு வினாடி வினா (ஹேக்கத்தான்) போட்டியில், நந்தனம் அரசு கலைக்கல்லூரியின் நிதி மற்றும் கணக்கியல் துறை மாணவர்கள் தாங்கள் பெற்ற வெற்றிக் கோப்பையை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து விழா மேடையில், பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “1986-இல், கலைஞர் அவர்கள் இந்தக்கல்லூரியில் பேசும் பொழுது “இந்த சிறிய அறையில் நிறைய மாணவர்கள் இருக்கிறீர்கள். உங்களை இந்த அறைக்குள் திணித்துக் கொண்டு நிற்கிறீர்கள். அதனால், காற்று உள்ளே வரமுடியவில்லை. நான் பேசிமுடித்தவுடன் நீங்கள் கலைந்து சென்றுவிடுவீர்கள் என்பதால், இந்த திணிப்பு அரை மணி நேரத்தில் விலகிவிடும். ஆனால், இந்தித் திணிப்பு எப்போது விலகும்” என்று கலைஞர் கேட்டார்கள்.
கலைஞர் அன்றைக்கு கேட்ட அந்தக்கேள்வி இன்றைக்கும் நமக்கு பொருத்தமாக இருக்கின்றது. அதற்கான விடையை, நம்முடைய முதலமைச்சர் அவர்களின் காலத்தில், நிச்சயம் தமிழ்நாட்டு மாணவர்கள் நீங்கள் வென்று எடுப்பீர்கள் அதற்கான விடையை நாம் நிச்சயம் பெறுவோம் என்று கூறிக்கொள்கின்றேன்.
தமிழ்நாடு என்பதற்கு அடிப்படையே தமிழ் தான். அந்தத் தமிழுக்கு இப்போது மிகப்பெரிய ஆபத்தை பல்வேறு வழிகளில் ஏற்படுத்த முயன்றிருக்கிறார்கள். மும்மொழிக் கொள்கை கொண்டு வருகின்றார்கள், நீட் தேர்வு கொண்டு வந்தார்கள், இந்தித் திணிப்பு கொண்டு வருகின்றார்கள், புதிய கல்விக் கொள்கை என்று வெவ்வேறு பெயர்களில் இதெல்லாம் வந்தாலும், ஒட்டுமொத்தமாக இதன் நோக்கம் தமிழ்நாட்டில் இந்தியை எப்படியாவது நுழைத்துவிட வேண்டும் என்பது தான்.
இதற்கான வாதங்களை நிறைய பேர் சொல்வார்கள். உண்மையைப் போலவே சிலர் பேசுவார்கள். மாணவச் செல்வங்களாகிய நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உண்மைய புரிந்துகொள்ள வேண்டும். இன்றைக்கு தமிழ்நாட்டில் தமிழ் உணர்வு உயிர்ப்போடு இருப்பதற்கு காரணம், 1965-இல் ஏற்பட்ட மாணவர்களுடைய எழுச்சி தான் முக்கிய காரணம். அந்த மாணவர்கள் போராட்டம் தான் இந்தி திணிப்பை தமிழ்நாட்டிற்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தியது.
உங்களுடைய சீனியர்கள் நடத்திய போராட்டம் தான் தமிழ்மொழியை, தமிழ்ப் பண்பாட்டை காத்து நாம் எல்லோரையும் பாதுகாத்தது. இன்றைக்கு உங்களுக்கு முன் போராடிய அந்த சீனியர்களுக்கு எல்லாம் இப்போது, 70, 80 வயது ஆகியிருக்கும். அவர்கள் எல்லாம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போராடினார்கள்.
இன்றைக்கு அவர்களிடம் போய் கேட்டீர்கள் என்றால், உங்களுடைய சீனியர்களுக்கு நீங்கள் கொடுக்கக் கூடிய ஒரே பரிசு என்ன தெரியுமா?
“எங்களுடைய காலத்திலும் நாங்களும் இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டோம். அதில் என்றென்றும் உறுதியாக இருப்போம்” நீங்கள் உங்களுடைய சீனியர்களுக்கு கொடுக்கின்ற வாக்குறுதியைத்தான் அவர்கள் விரும்புவார்கள். பொதுவாக, தந்தை பெரியாராக இருந்தாலும், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களாக இருந்தாலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை விரும்ப மாட்டார்கள். காரணம், மாணவர்கள் படிப்பில் தான் கவனம் செலுத்த வேண்டும். போராட்டம் நடத்திக் கொண்டிருந்தால் அவர்களுடைய படிப்பு பாதித்துவிடும் என்ற எண்ணம்தான்.
ஆனால் இன்றைக்கு, கல்விக்கே ஆபத்து ஏற்படுத்தக் கூடிய வகையில் நீட் தேர்வு, முமமொழிக் கொள்கை, புதிய கல்விக் கொள்கை என்று பல தொந்தரவுகளை ஒன்றிய அரசு நம்முடைய மாணவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இந்த சூழ்ச்சிகளை, ஆபத்துகளை மாணவர்கள் நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் இதனை சரியாக புரிந்து கொண்டால், என்றென்றைக்கும் நம்முடைய இன எதிரிகளால் நம்மை வெற்றி கொள்ளவே முடியாது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
100 வருடங்களுக்கு முன்பு ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கி படிப்பதற்கு விடுதி வசதி கூட கிடையாது. அப்போது, டாக்டர் நடேசனார் அவர்கள் நீதிக் கட்சித் தலைவராக இருந்தார். அவர்தான், ‘திராவிடன்’ இல்லம் எனும் மாணவர் விடுதியை திருவல்லிக்கேணியில் 1916-ஆம் ஆண்டு தொடங்கினார்.
இன்றைக்கு, நீதிக் கட்சியின் மறுவடிவமாக இருக்கக் கூடிய தி.மு.கழகத்தின் திராவிட மாடல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அன்றைக்கு நம்முடைய மாணவர்களுக்கு ஹாஸ்டல் வசதி கிடையாது. ஆனால், இன்றைக்கு இந்தக் கல்லூரிக்கு பக்கத்திலேயே எம்.சி.ராஜா நவீன கல்லூரி மாணவர் விடுதிக் கட்டடத்தை, சென்ற வாரம் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மாணவர்களுக்காக திறந்து வைத்தார்கள்.
இது தான் திராவிட இயக்கத்துடைய வெற்றி. இதுதான் திராவிட மாடல்அரசினுடைய வெற்றி. திராவிட இயக்கம் எதையெல்லாம் தொட்டதோ அதில் எல்லாம் வெற்றிபெற்று வருகிறது. நிச்சயம் மாணவர்கள் உங்களுடைய துணையோடு நம்முடைய அனைத்து போராட்டத்திலும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை நம்முடைய அரசிற்கு இருக்கின்றது.
இதற்கு எல்லாம் என்ன காரணம், திராவிட இயக்கத்தின் கொள்கைகள் என்பது மனித உரிமை, சமூக நீதி, பகுத்தறிவு, பெண்ணுரிமைக் கொள்கைகளை அடிப்படையாக கொண்டவை. அதனால், இந்த கொள்கைகள் அனைத்தும் நிச்சயம் வெற்றி என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.
இன்றைக்கு நம்முடைய மாணவர்களுடைய கல்விக்கான நிறைய திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருகிறது. தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண், நான் முதல்வன் போன்ற திட்டங்கள் எல்லாம் மாணவர்கள் உயர்கல்விப் படிப்பதற்கு பேருதவியாக இருக்கின்றன.
வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில், மேற்படிப்பு, ஆராய்ச்சிக்கல்வி பயில நம்முடைய அரசு உதவித்தொகை தொடர்ந்து வழங்கி வருகின்றது.
தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வியில் என்றென்றும் சிறந்து விளங்கக்கூடியவர்கள் நிச்சயம் அது தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது. பெரிய அறிவாளிகளாக, தொழிலதிபர்களாக, சமூகத்தில் நீங்கள் அத்துணை பேரும் வெற்றிபெற, இருக்கக்கூடிய அனைத்து மனிதர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக நீங்கள் உங்களுடைய வாழ்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டுக்கு, தமிழுக்கு எதிரான சூழ்ச்சிகளை மாணவச்செல்வங்கள் நீங்கள் வீழ்த்த வேண்டும் என்று கூறிக்கொண்டு. இதற்கு எல்லா வகையிலும் நம்முடைய அரசும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் என்றென்றும் மாணவர்களோடு துணை நிற்பார்கள்.”