அரசியல்

"பா.ஜ.க.வின் ஊதுகுழலாக செயல்படும் குடியரசுத் துணைத் தலைவர்" - செல்வப்பெருந்தகை விமர்சனம் !

அரசமைப்புச் சட்டத்துக்கு யாரும் விதிவிலக்காக இருக்க முடியாது என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

"பா.ஜ.க.வின் ஊதுகுழலாக செயல்படும் குடியரசுத் துணைத் தலைவர்" - செல்வப்பெருந்தகை விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலவரையறையை நிர்ணயித்தது. இதன் மூலம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காலவரையின்றி நிறுத்த வாய்த்த ஆளுநர்களின் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை குடியரசுத் துணை தலைவர் ஜக்தீப் தங்கர் அணுகுண்டு என விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் அரசமைப்புச் சட்டத்துக்கு யாரும் விதிவிலக்காக இருக்க முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றிய 10 மசோதாக்களை ஒப்புதல் வழங்குவதற்கு காலம் தாழ்த்தி, பிறகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பியும் ஒப்புதல் வழங்காத நிலையில், தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை வழங்கி மாநில உரிமைகளை பாதுகாத்து, கூட்டாட்சி தத்துவத்திற்கு பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஆளுநர் காலம் தாழ்த்தி சட்டவிரோதமாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த 10 மசோதாக்களுக்கும் அரசமைப்புச் சட்ட பிரிவு 142 இல் கூறப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, உச்சநீதிமன்றம் அதிரடியாக ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சரவையின் அறிவுரையின்படி தான் ஆளுநர் செயல்பட முடியும். தன்னிச்சையாக அவர் செயல்பட எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை என வழங்கப்பட்ட தீர்ப்பை தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவே வரவேற்கிறது, பாராட்டுகிறது. ஆனால், இந்தியாவின் குடியரசு துணைத் தலைவராகவும், மாநிலங்களவையின் தலைவராகவும் இருக்கிற திரு. ஜெகதீப் தன்கர் உச்சநீதிமன்ற தீர்ப்பை சகித்துக் கொள்ள முடியாமல், வரம்புமீறி கடுமையான விமர்சனங்களை மேற்கொண்டிருக்கிறார். உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நேர்மையை கேள்விக்குறியாக்கி இருக்கிறார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்குகிற தீர்ப்புக்கு எந்தவிதமான பொறுப்புடைமையும் இல்லாமல் அவர்கள் விரும்பியவாறு தீர்ப்பு எழுதுவது அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற நாடாளுமன்ற நிர்வாக அதிகாரங்களுக்கு எதிரானது என்று கூறியிருக்கிறார்.

இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை குறிப்பிட்டு, நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்று கேட்டு, நீதிபதிகளே சட்டம் இயற்றுகிறார்கள், அவர்களே செயல்படுத்துகிறார்கள், நாடாளுமன்றத்தை மிஞ்சுகிற அதிகாரத்தை பெற்று செயல்படுகிற நீதிபதிகள் வழங்குகிற தீர்ப்புக்கு யார் பொறுப்பேற்பது என்ற அவரது கடுமையான விமர்சனம் நாடு முழுவதும் எதிர்ப்பு அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

"பா.ஜ.க.வின் ஊதுகுழலாக செயல்படும் குடியரசுத் துணைத் தலைவர்" - செல்வப்பெருந்தகை விமர்சனம் !

மசோதா மீது குடியரசுத் தலைவர் உரிய காலத்திற்குள் முடிவெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அது சட்டமாகிவிடும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை கடுமையாக ஜெகதீப் தன்கர் விமர்சிக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசு, சட்டப் பேரவையில் மசோதாவை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பும் போது நியாயமான கால அவகாசத்திற்குள் அவர் ஒப்புதல் வழங்க வேண்டும், அல்லது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்ப வேண்டும். ஆனால், தமிழக ஆளுநர் மாதக் கணக்கில், வருடக் கணக்கில் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் முடக்கி வைத்து விட்டு, பிறகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி, அவரும் ஒப்புதல் வழங்காமல் நீண்டகாலம் கிடப்பில் போடுவதை எதிர்த்து தான் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. ஒப்புதல் வழங்குகிற அதிகாரம் பெற்றுள்ள ஆளுநரும், குடியரசு தலைவரும் நியாயமான கால அவகாசத்திற்குள் ஒப்புதலை வழங்கவில்லை என்றால், அதனால் பாதிக்கப்படுகிற தமிழக அரசு எங்கே நீதியை பெறுவது ?

உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தான் இன்றைக்கு 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற்று மாநில நிதியில் நடைபெறுகிற பல்கலைக் கழகங்களுக்கு வேந்தர்களை நியமிக்கிற அதிகாரத்தை பெற்றிருக்கிறது. கடந்த காலங்களில் வேந்தராகும் உரிமை ஆளுநருக்கு இருந்தது. அந்த உரிமையை பறித்து தமிழக முதல்வரை வேந்தராக்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பை குடியரசு துணைத் தலைவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்பட்டமான காழ்ப்புணர்ச்சியுடன் பா.ஜ.க.வின் ஊதுகுழலாக அவர் செயல்பட்டிருக்கிறார். உச்சநீதிமன்றத்தை அச்சுறுத்தும் வகையில் பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

குடியரசு தலைவரை நீதிமன்றங்கள் வழிநடத்துவதையோ, உத்தரவு பிறப்பிப்பதையோ ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார். உச்சநீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரம் வழங்குகிற பிரிவு 142 ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஆயுதமாக இருப்பதாக ஜெகதீப் தன்கர் கூறியிருக்கிறார். இன்று ஆளுகிற ஒன்றிய பா.ஜ.க. அரசு ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை உணர்ந்து தான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரிவு 142-ஐ பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றால், அது மிகையல்ல. மாநிலங்களவையின் தலைவராக இருக்கிற இவர், சர்வாதிகார பாசிச முறையில் அவையை நடத்தியதற்காக இவர்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதை எவரும் மறந்திட இயலாது. அரசமைப்புச் சட்டத்தின்படி கூட்டாட்சி தத்துவத்திற்கு பெருமை சேர்க்கின்ற வகையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தின் மூலமாக நீதி பெறுவதற்கு பிரிவு 142-ஐ பயன்படுத்தியதை ஜெகதீப் தன்கர் அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

Jagdeep-Dhankhar
Jagdeep-Dhankhar

ஜெகதீப் தன்கர் அவர்களின் பேச்சுக்கு பின்னால், ஒன்றிய பா.ஜ.க. அரசு இருப்பதை எங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது. சட்டமாமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வழங்கிய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள பிரிவு 142-ன் மூலமாகத் தான் தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் நியாயம் கிடைத்திருக்கிறது, நீதி கிடைத்திருக்கிறது. அரசமைப்புச் சட்டப்படி தான் குடியரசு தலைவர் உட்பட அனைவரும் செயல்பட முடியும். இதில் எவரும் விதிவிலக்காக இருக்க முடியாது.

எனவே, அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்கு எதிராகவும் பேசியிருக்கிற குடியரசு துணைத் தலைவர் திரு. ஜெகதீப் தன்கர் அவர்களை நான் மட்டுமல்ல, தமிழ்நாடே இன்றைக்கு வன்மையாகக் கண்டிக்கின்றது, எச்சரிக்கின்றது. நீதிமன்றத்தை அச்சுறுத்துகிற அவரது பேச்சை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்"என்று கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories