சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் சார்பில் "universities in 2025 " என்னும் தலைப்பில் பல்கலைக்கழக பதிவாளர்கள் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர்களுக்கான மாநாடு நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோ வி செழியன் கலந்து கொண்டு மாநாட்டை துவக்கி வைத்தார். இந்த மாநாட்டில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பதிவாளர்கள் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாநாட்டில் மேடையில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கோவை செழியன், " தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் நமது மாநிலத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், தேர்வுக்கட்டுப்பாடு அலுவலர்கள் மற்றும் துணை பதிவாளர்களுக்கு நிர்வாகத் திறன் மற்றும் செயல்திறன் சார்ந்த அணுகுமுறைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் அரசு பல்கலைக்கழகங்களில், நேர்மையான நிர்வாகம், நிதி சார்ந்த பொறுப்புகள் மற்றும் செயல்திறன் வளர்ச்சியின் அதிகரித்து வரும் நிலையில், பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளும் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது.
இக்கூட்டத்தில் நிதி திட்டமிடல் மற்றும் நிர்வாக திறன்களை மேம்படுத்துதல், நிதி பயன்பாடு மற்றும் அரசு தணிக்கை நடைமுறைகளை பின்பற்றுதல் உள்ளிட்டவைகளையும் , கல்வி மற்றும் நிர்வாகத்துறைகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பை ஊக்குவித்தல் மூலம் நிறுவன செயல்திறனை மேம்படுத்துதல் உள்ளிட்டவை விவாதிக்கப்பட உள்ளது. தேர்வுகளை நடத்துவதில் ஒரே மாதிரியான நடைமுறைகள் மற்றும் நம்பகத்தன்மையை ஏற்படுத்துதல்,
பல்கலைக்கழகங்கள் எதிர்கொள்ளும் நெறிமுறைகள் மற்றும் சட்டம் சார்ந்த சிக்கல்களையும் சரியாக அறிந்து, சட்டரீதியான வழிகளில் எதிர்கொள்ளும் திறன் உள்ளிட்டவைகளும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.பல்வேறு பல்கலைக்கழக நிர்வாகிகளை ஒரே மேடையில் இணைத்து தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் சூழலை இந்த மாநாடு உருவாக்குக்கும். இது நிர்வாகத்தில் உள்ள சவால்களுக்கு ஒருங்கிணைந்த தீர்வுகளை வகுப்பதோடு, எதிர்கால வளர்ச்சிக்கான திட்டமிடலுக்கான தெளிவான பார்வையை உருவாக்கும் மையமாகவும், பொறுப்புணர்வும் திறனும் நிரம்பிய நிர்வாகத்தை ஊக்குவிக்கும் ஒரு முக்கியமான தளமாகவும் செயல்படும் என்பது உறுதியாகும்.
வருகிற மூன்றாம் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில், சட்டப் போராட்டத்தை நடத்தி பல்கலைக்கழக உரிமையை மீட்டுத் தந்த மகத்தான தலைவர் நமது முதலமைச்சருக்கு கல்லூரி முதல்வர்கள், சுயநிதி கல்லூரியின் கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள், பதிவாளர்கள், மாணவர்கள் மற்றும் ஒட்டுமொத்த உயர்கல்வியின் அம்சமாக இருக்கும் எல்லோர் சார்பிலும் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. முதலமைச்சர் என்ன எண்ணுகிறாரோ அதனை உயர்கல்வி துறை உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் செல்லும்" என தெரிவித்தார்