அரசியல்

மாநில உரிமைகளை காக்க, குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக்குழு! : சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு!

“இந்திய அரசமைப்புச்சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமைகளை பாதுகாக்க, உச்சநீதிமன்ற மேனாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்படுகிறது” என முதலமைச்சர் அறிவிப்பு.

மாநில உரிமைகளை காக்க, குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக்குழு! : சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்படும் மசோதாக்களுக்கு, ஆளுநர்களை வைத்து முட்டுக்கட்டையிடுவதும்; பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு உரிய நிதி வழங்காமல் வஞ்சிப்பதும் ஒன்றிய பா.ஜ.க அரசின் தொடர் நடவடிக்கையாக அமைந்துள்ளது.

இதனால், இந்தியாவை ஒற்றை நாடாக, ஒற்றுமையாக காக்க முழுமையான பங்களிக்கும் மாநிலங்கள் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட இன்றியமையாத துறைகள் சார்ந்து கடுமையாக வஞ்சிக்கப்படுகின்றன.

இத்தொடர் வஞ்சிப்பை போக்கும் பொருட்டு, மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும் உயர்மட்ட அளவிலான குழுவினை அமைத்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, “இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமைகளை பாதுகாக்கவும், ஒன்றிய - மாநில அரசுகளுக்கிடையேயான உறவுகளை மேம்படுத்திடவும், உச்சநீதிமன்ற மேனாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்படுகிறது.

இதன் உறுப்பினர்களாக, இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணை வேந்தர் அசோக் வர்தன் மற்றும் தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் மேனாள் துணைத்தலைவர், பேராசிரியர் மு.நாகநாதன் ஆகியோர் இடம்பெறுவார்கள்” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாநில உரிமைகளை காக்க, குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக்குழு! : சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு!

இக்குழுவின் கொள்கைகள் பின்வருமாறு,

1. ஒன்றிய - மாநில அரசுகளின் உறவு நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகளையும், நடைமுறையிலுள்ள சட்டங்கள், ஆணைகள், கொள்கைகள் மற்றும் ஏற்பாடுகளின் அனைத்து நிலைப்படிகளையும் உயர்நிலைக் குழு ஆராய்ந்து, மறுமதிப்பீடு செய்தல்;

2. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தற்போதுள்ள விதிகளை உயர்நிலைக் குழு ஆராய்ந்து, காலப்போக்கில் மாநிலப் பட்டியலிலிருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்கு நகர்த்தப்பட்ட பொருண்மைகளை மீட்டெடுப்பது குறித்த வழிமுறைகளைப் பரிந்துரை செய்தல்;

3. மாநிலங்கள் நல்லாட்சி வழங்குவதில் உள்ள சவால்களை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்தல்;

4. நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்படுத்தாத வகையில், நிர்வாகத் துறைகளிலும், பேரவைகளிலும், நீதிமன்றக் கிளைகளிலும், மாநிலங்கள் அதிகபட்ச தன்னாட்சி உரிமை பெற்றிட உரிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்தல்;

5. 1971-இல் அமைக்கப்பட்ட இராஜமன்னார் குழு மற்றும் ஒன்றிய - மாநில உறவுகள் குறித்த ஏனைய ஆணையங்களின் பரிந்துரைகளையும், 1971 முதல் நாட்டில் நிலவும் பல்வேறு அரசியல், சமூகம், பொருளாதார மற்றும் சட்டம் சார்ந்தவற்றில் இருக்கக்கூடிய வளர்ச்சியினையும் உயர்நிலைக் குழு கருத்தில்கொள்ளுதல் வேண்டும். இவற்றை ஆராய்ந்து அறிக்கைகள் வழங்கும்.

banner

Related Stories

Related Stories