2026 ஆம் ஆண்டுக்குப் பின் மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதுகுறித்து மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை குறித்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 7 மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுக்கும், முன்னாள் முதலமைச்சர்களுக்கும், அம்மாநிலங்களில் உள்ள பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் எழுதினார். அதோடு தமிழ்நாடு அமைச்சர்கள், எம்.பிக்கள் பிற மாநில அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து இந்த கூட்டத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து , தொகுதி மறுவரையறையை எதிர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 22-ம் தேதி நடைபெற்ற கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடக துணை முதலமைச்சர் சிவகுமார் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த கூட்டு நடவடிக்கைக் குழுவின் அடுத்த கூட்டம் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டை பின்பற்றி தெலங்கானா சட்டப்பேரவையிலும் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படுவதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதை குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த நடவடிக்கை நமது ஜனநாயகத்தின் சமநிலையைக் குலைக்கும் எந்த முயற்சியையும் தடுத்து நிறுத்தும் நமது கூட்டு நடவடிக்கைக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். இது குறித்து தனது சமூகவலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ள பதிவில், "தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, தெலங்கானா மாநிலச் சட்டமன்றத்தில், “நீதி, சமத்துவம் மற்றும் கூட்டாட்சியியல் உணர்வை உயர்த்திப் பிடிக்கும் வகையிலான நியாயமான மறுசீரமைப்பை வலியுறுத்தி வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார்.
தமிழ்நாட்டைத் தொடர்ந்து, தெலங்கானா நிறைவேற்றியுள்ள இத்தீர்மானம் நமது ஜனநாயகத்தின் சமநிலையைக் குலைக்கும் எந்த முயற்சியையும் தடுத்து நிறுத்தும் நமது கூட்டு நடவடிக்கைக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
இது வெறும் தொடக்கம் மட்டுமே! நியாயமான மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழுவின் இரண்டாவது கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறவுள்ள நிலையில், மேலும் பல மாநிலங்கள் நம்மோடு இணைவார்கள். இந்தியாவின் எதிர்காலத்தை நியாயமற்ற முறையில் மாற்றியமைக்க எவரையும் அனுமதிக்க மாட்டோம்!"என்று கூறப்பட்டுள்ளது.