நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த மார்ச் 10-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் ஒன்றிய பாஜக அரசின் விரோத போக்கான தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை, தேர்தல் ஆணையத்தின் போலி வாக்காளர்கள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்தும் ஒன்றிய பாஜக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது.
எனினும் தங்கள் உரிமைக் குரல்களை இந்தியா கூட்டணி எம்.பி-க்கள் எழுப்பி வருகின்றனர். இந்த சூழலில் இன்று (மார்ச் 21) நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவையில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. அங்கன்வாடிகளுடன் கூடிய குழந்தை காப்பகங்கள் நிலை குறித்து கேள்வியெழுப்பியிருந்த நிலையில், அதற்கு ஒன்றிய அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
அதாவது, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சரிடம் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி பின்வரும் கேள்விகளை எழுத்துபூர்வமாக எழுப்பியிருந்தார்.
* 2017 இல் தொடங்கப்பட்ட தேசிய குழந்தைகள் காப்பகத் திட்டத்தின் கீழ் செயல்படும் குழந்தைகள் காப்பகங்களின் எண்ணிக்கை விவரங்கள், அவற்றின் திறன் மற்றும் அவற்றால் பயனடையும் குழந்தைகளின் எண்ணிக்கை, மாநில மற்றும் யூனியன் பிரதேச வாரியாக எவ்வளவு?
* வேலை செய்யும் பெற்றோருக்கான பயன்பாட்டை உறுதி செய்வதற்காக, குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில், குழந்தைகள் காப்பக உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளின் விவரங்கள் என்ன?
* பெண் தொழிலாளர்களின் பங்களிப்பை அதிகரிக்க, தொழிற்சாலைகள் அமைந்திருக்கும் பகுதிகளில் குழந்தைகள் காப்பகங்களை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?
* 50-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் வளாகத்தில் குழந்தை காப்பக வசதியை வழங்குவதை கட்டாயமாக்கி, அதற்கான செலவுகளை அந்த நிறுவனத்தின் உரிமையாளரே ஏற்க வேண்டும் என 2017 ஆம் ஆண்டு மகப்பேறு நலச் சட்டத்தில் (MBA) திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன் தாக்கம் குறித்து அரசாங்கம் ஏதேனும் மதிப்பீட்டை நடத்தியதா? அப்படியானால், அத்தகைய மதிப்பீட்டின் கண்டுபிடிப்புகள் என்ன?
-ஆகிய கேள்விகளை கனிமொழி எம்.பி. கேட்டிருந்தார்.
இக்கேள்விகளுக்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர்,
“வேலை செய்யும் தாய்மார்களின் குழந்தைகளுக்கான, முந்தைய ‘தேசிய குழந்தை காப்பகத் திட்டம் (NCS)’, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் 01.01.2017 முதல் 31.03.2022 வரை ஒன்றிய நிதியுதவி திட்டமாக செயல்படுத்தப்பட்டு வந்தது.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் குழந்தை காப்பகங்கள் இயக்கப்பட்டன. நிதி ஆயோக்கின் வளர்ச்சி கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அலுவலகத்தின் (DMEO) அறிக்கையின்படி, பெரும்பான்மையான மாநிலங்கள் தனித்த குழந்தை காப்பகங்களுக்குப் பதிலாக அங்கன்வாடியோடு இணைந்த குழந்தை காப்பகங்களை (AWCC) நடத்த விரும்புவதாக வலியுறுத்தியுள்ளன.
ஏனெனில் கூடுதல் திட்டத்தை செயல்படுத்துவதால் ஏற்படும் நிதி, மனிதவளம் மற்றும் நிர்வாகச் சுமையை அதிகரிக்கிறது என்று மாநிலங்கள் கருதின. இதன்படி மிஷன் சக்திக்கான செலவின நிதிக் குழுவின் (EFC) போது நிதி அமைச்சகம், குழந்தை பராமரிப்பு மையங்களை அருகிலுள்ள அங்கன்வாடி மையங்களுடன் இணைத்து, AWCC களாக நடத்தலாம் என்று பரிந்துரைத்தது.
இதையடுத்து குழந்தைகளுக்கு பகல்நேர பராமரிப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பை வழங்குவதற்காக, ஏப்ரல் 01, 2022 முதல் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் மிஷன் சக்தியின் கீழ் ’பால்னா துணைத் திட்டத்தை’ அமைச்சகம் அறிமுகப்படுத்தியது.
அன்றாடம் சிறந்த கண்காணிப்பு மற்றும் சரியான செயல்படுத்தலை உறுதி செய்வதற்காக மாநில, யூனியன் பிரதேச அரசாங்கத்தின் பங்களிப்பை உறுதி செய்யும் ஒன்றிய நிதியுதவி திட்டமாக பால்னா திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மேலும் இது ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கங்கள் இடையே 60:40 நிதி விகிதத்துடன் செயல்படுத்தப்படுகிறது. அதே நேரம் சிறப்பு அந்தஸ்து கொண்ட மாநிலங்கள் மற்றும் வட கிழக்கு மாநிலங்களுக்கு இந்த பங்களிப்பு விகிதம் 90:10 ஆகும். சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசங்களுக்கு, 100% நிதியுதவி ஒன்றிய அரசால் வழங்கப்படுகிறது.
அங்கன்வாடி மையங்கள் உலகின் மிகப்பெரிய குழந்தை பராமரிப்பு நிறுவனங்களாகும், அவை குழந்தைகளுக்கு அத்தியாவசிய பராமரிப்பு மற்றும் ஆதரவை வழங்குவதற்கும், கடைசி மைல் வரை பராமரிப்பு வசதிகளை வழங்குவதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
முதன்முறையாக பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அங்கன்வாடி மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்கள் மூலம் குழந்தை பராமரிப்பு சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. இது முழு நாளும் குழந்தை பராமரிப்பினை உறுதி செய்யும். பாதுகாப்பான சூழலில் அவர்களின் நல்வாழ்வை உறுதி செய்யும்.
அங்கன்வாடி மற்றும் குழந்தை பராமரிப்பு மைய முயற்சி பொருளாதாரத்தில் பெண்களின் பணிப் பங்களிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பால்னா திட்டத்தின் நோக்கம், 6 மாதங்கள் முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து ஆதரவு, சுகாதாரம் மற்றும் குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சி, வளர்ச்சி கண்காணிப்பு, நோய்த்தடுப்பு ஆகிய சூழலில் தரமான குழந்தை பராமரிப்பு வசதியை வழங்குவதாகும்.
பால்னாவின் கீழ் குழந்தை பராமரிப்பு மையங்கள், தாய்மார்களின் வேலைவாய்ப்பு நிலையைப் பொருட்படுத்தாமல் அனைத்து தாய்மார்களுக்கும் வழங்கப்பட வேண்டும், குழந்தை காப்பகங்களை நிறுவுதல் மற்றும் இயக்குவதற்கான திட்டங்கள் அந்தந்த மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்களிடமிருந்து பெறப்படுகின்றன, அவை இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அவற்றின் தொடர்புடைய பங்களிப்பை வழங்குவதற்கும் பொறுப்பாகும்.
15வது நிதிச் சுழற்சியின் போது, பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 17,000 குழந்தை காப்பகங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன, அவற்றில் 11 ஆயிரத்து 395 குழந்தை காப்பகங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பால்னா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 600 அங்கன்வாடியுடன் கூடிய குழந்தை காப்பகங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 2025 நிலவரப்படி தமிழ்நாட்டில் 111 தனித்த குழந்தை காப்பங்கள் செயல்படுகின்றன. இவற்றின் மூலம் 2,115 பேர் பயன் பெறுகிறார்கள்.
மகப்பேறு நலச் சட்டம் பெரும்பாலும் மாநில அரசுகள் செயல்படுத்துவதற்கான சட்டமாகும். இச்சட்டத்தின் பிரிவு 11A, ஐம்பது அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட ஒவ்வொரு நிறுவனத்திலும் குழந்தை காப்பக வசதியை கட்டாயமாக்குகிறது. இச்சட்டத்தின் தாக்கம் குறித்த அத்தகைய மதிப்பீடு எதுவும் ஒன்றிய அரசால் செய்யப்படவில்லை” என ஒன்றிய இணையமைச்சர் பதிலில் குறிப்பிட்டுள்ளார்.