ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "1994ல் தமிழகத்திற்கு 69% இடஒதுக்கீடு வழங்க குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், இந்தச் சட்டம் அரசியலமைப்பின் 9ஆவது அட்டவணையின் கீழ் கொண்டு வரப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது தமிழ்நாட்டின் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இடஒதுக்கீட்டு அளவை அதிகரிக்க மக்கள் தொகை வளர்ச்சியை நிரூபிக்க வேண்டும். 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள சூழலில் இது அவசியமானது.
தமிழகத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் 2020ல் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. அது தொடர்பாக விவரங்கள் அடங்கிய அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. 6 மாதங்களுக்கு உள்ளாக அது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அதற்குப் பின் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து தெரியவில்லை. ஆகவே 2020 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் தமிழகத்தில் சமூக, பொருளாதார, கல்வி,நிலை அறிய சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு, முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சாதிவாதி கணக்கெடுப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும்
பிகார்,ஆந்திரா,தெலுங்கான போன்ற மாநிலங்கள் கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. மேலும் சில மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அது போல் தமிழகத்திலும் நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதிகள், "இந்த கணக்கெடுப்பு ஒன்றிய அரசோடு தொடர்புடையது. அதோடு இது தொடர்பான விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இந்த நீதிமன்றம் இதில் எத்தகைய உத்தரவையும் பிறப்பிக்க இயலாது" எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.