நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த மார்ச் 10-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் ஒன்றிய பாஜக அரசின் விரோத போக்கான தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை, தேர்தல் ஆணையத்தின் போலி வாக்காளர்கள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்தும் ஒன்றிய பாஜக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்த சூழலில் இன்று (மார்ச் 19) நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவையில் திமுக எம்.பி.-க்கள் ஒன்றிய அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். அவை பின்வருமாறு :
=> திருச்சிக்கு புதிய இரயில்கள் : திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. கோரிக்கை :
திருச்சிராப்பள்ளி இரயில்வே பிரிவின் முக்கிய தலைமையகமாக இருந்தபோதும் இரண்டு இரயில்கள் மட்டுமே அங்கிருந்து புறப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டி திமுக பொருளாளர் டி. ஆர். பாலு எம்.பி மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதன் விவரம் வருமாறு :
ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் சோழன் எக்ஸ்பிரஸ் சேவைகளுக்கு பிறகு இதுவரை வேறு புதிய சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் இரயில்சேவைகள் தொடங்கப்படாதது ஏன்? இந்த இரண்டு இரயில் சேவைகளும் தொடங்கப்பட்டு ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்பதாவது இரயில்வே அமைச்சகம் அறிந்திருக்கிறதா என்றும் 15 லட்சம் மக்கள் தொகை கொண்ட பெரிய நகரமான திருச்சிராப்பள்ளியை இரயில்வே புறக்கணிப்பதற்கான காரணங்களை விளக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
அதேபோல் திருச்சிக்கும் எழும்பூருக்கும் இடையில் முன்னர் இயக்கப்பட்ட பல்லவன் எக்ஸ்பிரஸ் நீண்ட கால கோரிக்கையை கருத்தில் கொண்டு மீண்டும் இயக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
=> பொது அமைதியை குலைக்கும் போலிச் செய்திகள்! நடவடிக்கை என்ன? - வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் கேள்வி!
அச்சு, காட்சி மற்றும் இணைய ஊடகங்கள் அனைத்திலும் போலிச் செய்திகள் மற்றும் பொருத்தமற்ற செய்திகள் பெருகுவதை குறித்து நாடாளுமன்றத்தில் வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
அதன் விவரம் வருமாறு :
நாட்டில் போலிச் செய்திகளும் அதனால் பல அச்சுறுத்தல்களும் பெருகி வருவதால் பொது அமைதி குலைகின்றது என்பதை குறிப்பிட்டு பேசிய அவர், பொதுமக்கள் அதிக அளவில் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். உடனடியாக அவற்றை சமாளிக்கவும் தடுக்கவும் ஒன்றிய அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக சட்டம் இயற்றவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
=> போலி காணொளிகள், படங்கள் - தடுப்பு நடவடிக்கை என்ன? - திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. கேள்வி :
சைபர் பாதுகாப்பு குறித்து நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
அதன் விவரம் பின்வருமாறு :
சைபர் பாதுகாப்பு நிறுவனமான McAfee நடத்திய கணக்கெடுப்பின்படி 75% இந்தியர்கள் ஏதேனும் ஒரு வகையான போலியான செய்திகளையும் படங்களையும் பார்க்கின்றனர் என்பதையும், குறைந்தது 38 சதவீதத்தினர் போலிபடங்கள் மற்றும் காணொளி மோசடிக்கு இலக்காகியுள்ளனர் என்பதையும் அரசாங்கம் அறிந்திருக்கிறதா?
இணையத்தில் உள்ள deepfake content எனப்படும் போலியான செய்திகள் மற்றும் மோசடிகள் தொடர்பான பிரச்சினைகளை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?
போலிகளை அடையாளம் கண்டுகொள்வது மற்றும் அவற்றில் இருந்து தங்களை பாதுகாப்பது குறித்து பொதுமக்களுக்குத் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சாரங்களை அரசு உடனடியாக தொடங்க வேண்டும் மற்றும் அவற்றை கல்வித் திட்டங்களிலும் சேர்க்க வேண்டும். மேலும் இதற்கான முறையான சட்டத்திட்டங்களையும் அரசு உருவாக்க வேண்டும்.
=> ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் : நடவடிக்கை என்ன? - திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. :
ஒன்றிய அரசின் ஆட்சியில் ஊடக சுதந்தரத்திற்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பது குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதன் விவரம் பின்வருமாறு :
பத்திரிகைகள், சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளின் வலைத்தளங்கள் சுதந்திரமாக செயல்பட அண்மை காலமாக மிகுந்த தடைகள் உள்ளதை சுட்டிக்காட்டி கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு மாநில வாரியாக, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட பத்திரிகைகள், சமூக ஊடகங்கள், பத்திரிகைகளின் வலைத்தளங்களின் எண்ணிக்கையை வெளியிட வேண்டும் என கேட்டுள்ள அவர், தடை உத்தரவு மற்றும் அபராதம் விதிக்கப்படுவதற்கு முன்பு உரிய சட்ட நடைமுறை பின்பற்றப்பட்டதா என்றும் கேட்டுள்ளார்.
மக்களாட்சியில் பத்திரிகை சுதந்திரத்தைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிராக பல நீதிமன்றங்கள் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதை கூறி, அத்தகைய நடவடிக்கைகளுக்கான காரணங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டியதன் அவசியத்தையும் குறிப்பிட்டுள்ளார்.