சென்னை கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று (பிப்.28) முதலமைச்சரின் 72-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இவ்விழாவில் கழகத்தின் தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி உரையாற்றினர்.
அப்போது விழா மேடையில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “கல்வி, மதநல்லிணக்கம், சமூகநீதி, தாய்மொழி என அனைத்திற்கும் அரணாக, பாதுகாவலராக விளங்கி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மக்களை பாதுகாக்க களத்தில் நின்று பணியாற்றும், நம் முதலமைச்சர் இந்தியாவின் முதன்மை முதலமைச்சராக இருக்கிறார்.
தமிழ்நாட்டில் எத்தனை வீட்டில் மக்கள் காலை உணவு உண்கிறார்கள்? எத்தனை வீட்டில் அடுப்பு பற்றவைக்கப்படுகிறது? என்பதெல்லாம் இரண்டு வயது அரசியல்வாதிக்கும், 45 வயது அரசியல்வாதிக்கும் தெரியுமா? ஆனால், நம் முதலமைச்சர் 58 ஆண்டுகளாக மக்கள் பணியில் இருக்கிறார். அப்படியான முதலமைச்சரை விமர்சிக்க, உங்களுக்கு என்ன அருகதையிருக்கிறது?” என்றார்.
தொடர்ந்து பேசிய ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, “தனது 15ஆவது வயதில் இளைஞர் தி.மு.க கோபாலபுரம் என ஆரம்பித்து, அதில் பேரறிஞர் அண்ணா அவர்களையே அழைத்து பேச வைத்த சாமர்த்தியமும், ஆற்றலும் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உண்டு!
“உழைப்பு, உழைப்பு, உழைப்பின் மறுபெயர்தான் ஸ்டாலின்” என முத்தமிழறிஞர் கலைஞர் சொன்னார். அதனை 100க்கு 100 அனைவரும் ஒப்புகொள்வார்கள். அதுபோலதான் இன்றும் உழைத்து கொண்டிக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” என புகழுரைத்தார்.
விழா நிறைவாக, முதலமைச்சரின் ஏற்புரைக்கு முன் தாய்க் கழகத்தின் சார்பில் பேசிய ஆசிரியர் கி.வீரமணி, “திராவிட மண், பெரியார் மண்ணான தமிழ்நாட்டில் ஒருபோதும் வெற்றிடம் உருவாகாது. உலகம் முழுவதும் இருக்கிற அத்தனை உணர்வாளர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்துகிறார்கள். முதலமைச்சரின் திட்டத்தால் பயன்பெறாத ஒரு வீடு கூட தமிழ்நாட்டில் கிடையாது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி.
இங்கு கூடியுள்ள கூட்டம் வெறும் பதவிக் கூட்டம் கிடையாது. கட்சியைப் பிளந்து, MLA-வை விலைக்கு வாங்க இது வடநாடு கிடையாது. இந்த அரசியல் சடுகுடு நடத்துவதும் எல்லாம் தமிழ் மண்ணிலே ஒருபோதும் நடக்காது. இங்கு காவிக்கு வேலையில்லை, அதனை விரட்டியடிக்கும் உணர்வு இந்த மண்ணுக்கு இருக்கிறது” என்றார்.