தமிழ்நாட்டின் உரிமைகளைச் சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசு மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே மெட்ரோ, வெள்ள நிவாரணம் என மறுத்து வந்த ஒன்றிய அரசுக்கு கண்டனங்கள் குவிந்த நிலையில், மெட்ரோ திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த சூழலில் அண்மையில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாடு கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மிரட்டிய சம்பவம் பெரும் கண்டனங்களை எழுப்பி வருகிறது. மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்பு, குலக்கல்வி என பலவற்றை புகுத்துவதற்கான முன்னெடுப்புகளை பாஜக மேற்கொண்டு வருகிறது.
பா.ஜ.கவின் இந்த அராஜக போக்குக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்லாது மாணவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் என தமிழ்நாடே கொதித்தெழுந்துள்ளது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ந்டைபெற்றதோடு, மக்களும் தங்கள் வீட்டு வாசலில் இந்தி திணிப்பு, நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவைகளுக்கு எதிராக கோலமிட்டு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கான கல்விநிதியை தரமறுக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இனிமேல் தமிழ்நாட்டுக்கு மோடி வந்தால் #GobackModi அல்ல GetOutModi என்று சொல்வோம் என்றார். அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் #GetOutModi ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
#GetOutModi என்ற ஹேஷ்டேக் தமிழ்நாடு அளவில் இல்லாமல், இந்திய அளவில் இல்லாமல், உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது. இந்திய அளவில் முதலிடத்திலும், உலக அளவில் இரண்டாவது இடத்திலும் ட்ரெண்டாகி வருகிறது.