உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் வெளிமாநிலத்தவர் நிலம் வாங்க தடை விதிக்கும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் இதனை சட்டமாக்க பாஜக அரசு முடிவு செய்துள்ளது.
இது வரலாற்று சிறப்புமிக்க முடிவு என்று அந்த மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியுள்ளார். ஆனால் இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும் தங்கள் முடிவில் உறுதியாக இருப்பதாக உத்தரகண்ட் மாநில பாஜக தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 370 அரசியல் சாசன சிறப்பு பிரிவை நீக்கிய போது நாடு முழுவதும் உள்ளவர்கள் இனிமேல் ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்கலாம் என்று பாஜக அறிவித்தது. தற்போது பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் வெளி மாநிலத்தவர் விவசாய நிலங்களை வாங்க தடை விதிக்கும் சட்டத்தை கொண்டு வர உள்ளது.
பாஜகவின் இது போன்ற இரட்டை நிலைப்பாட்டை குறிப்பிட்டு பலரும் விமர்சித்து வருகின்றனர். ஒரே நாடு ஒரே சட்டம் என பாஜக பேசி வரும் நிலையில், அவர்கள் ஆளும் மாநிலங்களில் இது போன்ற தனி சட்டங்களை பாஜக கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.