முரசொலி தலையங்கம் (20.02.2025)
இந்தியைத் திணிக்கவே இந்தக் கல்விக் கொள்கை !
தேசியக் கல்விக் கொள்கையின் நோக்கம் இந்தியைத் திணிப்பது அல்ல என்றும், தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டம் என்றும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாட்டு மக்கள் காதில் பூ சுற்ற நினைக்கிறார். வேண்டுமென்றே தமிழ்நாட்டில் சிலர் அரசியல் செய்கிறார்களாம். மாணவர் மத்தியில் சமச்சீரான போட்டித் தளத்தை அவர் உருவாக்கப் போகிறாராம். இந்தி மட்டுமல்ல; எந்த மொழியையும் யார் மீதும் திணிக்க மாட்டார்களாம். இப்படி எல்லாம் சொல்வதன் மூலமாக 'தர்மேந்திரராக' தன்னைக் காட்டிக் கொள்ள நினைக்கிறார் அவர்.
ஒன்றிய பா.ஜ.க. அரசானது கல்வியை வளர்க்க தேசியக் கல்விக் கொள்கையைக் கொண்டு வரவில்லை. இந்தியைத் திணிக்கவே அதனைக் கொண்டு வருகிறது.
“புதிய கல்விக் கொள்கை என்ற மத யானை தமிழகத்திற்குள் புகுந்து, “கல்விச் சிறந்த தமிழ்நாட்டை” நாசப்படுத்திடவோ, காலங்காலமாக நாம் போற்றி வரும் சமூக நீதி மற்றும் சம நீதிக் கொள்கைகளுக்குக் கேடு ஏற்படுத்திடவோ அனுமதிக்கக் கூடாது. வருமுன் காப்பதே அறிவுடைமை!” என்று இப்படி ஒரு கல்விக் கொள்கை வரப் போகிறது என்பதை உணர்ந்து 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் தேதியன்று அறிக்கை கொடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒரு கல்வியாளர் குழுவை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அமைத்தார்கள். இக்குழுவின் அறிக்கை 28.7.2019 அன்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சருக்கு திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக நேரில் கொண்டு சென்று தரப்பட்டது. 'தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது' என்று அப்போதும் பொய்யாக நடித்தது ஒன்றிய அரசு.
இப்படி வாய் வார்த்தைக்குச் சொல்வதைக்கூட ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்கள் எதிர்த்தன. ஏனென்றால் அவை முழுக்க முழுக்க இந்தியில் செயல்படுபவை. உடனே, “ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி கல்வி என்பது கட்டாயமில்லை. மாநில அரசுகள் விருப்பத்துக்கு ஏற்ப முடிவு செய்யலாம்” என்று அப்போதைய ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறினார். தாய்மொழிக்கு முக்கியத்துவம் என்பதை தொடக்கத்திலேயே மறுத்துவிட்டது ஒன்றிய அரசு.
2021 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்ட பா.ஜ.க. அரசு, தமிழில் முதலில் வெளியிடவில்லை. இதுதான் தமிழுக்கு அவர்கள் கொடுத்த முக்கியத்துவம் ஆகும்.
இந்தக் கல்விக் கொள்கையில் தமிழ் வழியிலான வகுப்புகள் பற்றிக் கூறப்படவில்லை. தமிழ் மொழி சிறப்புப் பாடமாகவோ, முக்கியப் பாடமாகவோ பள்ளிகளில், கல்லூரிகளில் கற்பிக்கப்படும் என்றும் கூறப்பட வில்லை. 'அடிப்படையிலான தமிழ்' என்று மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் மும்மொழிக்கொள்கை என்ற சொல் 7 இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மும்மொழிக்கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என்றும், மாநிலங்கள் பிராந்தியங்கள், மற்றும் மாணவர்களின் விருப்பப்படி பள்ளி மாணவர்களுக்குமும்மொழிக் கொள்கை அடிப்படையில் மூன்று மொழிகள் கற்பிக்கப்படும் என்றும் - மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் மும்மொழிகளில்இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் - மாணவர்களிடையே பலமொழி ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்குமும்மொழிக் கொள்கை அறிமுகப்படுத்தப்படுகிறது என்றும் - பள்ளி மற்றும் உயர்கல்வி நிலைகளில் நடைமுறைப்படுத்தப்படும் மும்மொழிக் கொள்கையில் ஒருமொழியாக சமஸ்கிருதம்இருக்கும் என்றும் அதில் இருக்கிறது.
இந்தியை வளர்க்கத் தடையாக இருப்பது ஆங்கிலம்தான். ஆங்கிலத்தை அகற்ற அவர்களுக்கு ஒரு திட்டம் தேவை. அதற்காகத்தான் தாய்மொழியை வளர்க்கிறோம் என்று கிளம்புகிறார்கள். ஆங்கிலத்தை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்தியை உட்கார வைப்பதும், இந்தியை உட்கார வைத்த இடத்தில் சமஸ்கிருதத்தை உட்கார வைப்பதும்தான் அவர்களது நோக்கம். ஆங்கிலத்தை அகற்றுவதற்கு ஒரு தந்திரம் தேவை. அதற்குத்தான் தாய்மொழி பம்மாத்து. தாய்மொழியில் படிக்கலாமே என்று சொல்லி ஆங்கிலத்தை அகற்றுவது இதன் சதித்திட்டம் ஆகும். தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் தருகிறோம் என்கிறார்கள். தாய் மொழிக் கல்வியைக் கற்க வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறார்களா? இல்லை.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் பாடம் இருக்கிறது. உண்மைதான். ஆனால் தமிழ் கற்பிக்க தமிழாசிரியர்கள் கிடையாது. இப்படித்தான் இருக்கிறது அவர்கள் தாய் மொழியை வளர்த்தெடுக்கும் லட்சணம். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆங்கிலம், இந்தி ஆகியவை கட்டாய மொழிகளாகவும், 6 முதல் 3 ஆகிய வகுப்புகளில் அந்தந்த மொழிகள் விருப்பப் பாடமாகவும் இருக்கிறது. தமிழ்நாட்டில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இருக்கிறது. இப்பள்ளிகளில் தமிழ் கற்றுத் தர ஒரு தமிழாசிரியர் கூட இல்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்தி ஆசிரியர்களாக 100 பேர் இருக்கிறார்கள். சமஸ்கிருத ஆசிரியர்களாக 53 பேர் இருக்கிறார்கள். தமிழ் ஆசிரியர்கள் ஒருவர் கூட இல்லை. தர்மேந்திர பிரதான் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார்?