2024-2025 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் "பொருளாதாரத்தில் பின்தங்கிய 700 இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.60,000/- மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும்" என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பின்படி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் 30 இணைகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மங்கல நாண் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து, பரிசுகள் மற்றும் சீர்வரிசைப் பொருட்களை வழங்கி, மணமக்களை வாழ்த்தினார். இணைகளுக்கு 4 கிராம் பொன் தாலி மாங்கல்யத்துடன் சீர்வரிசைப் பொருட்களாக கட்டில், பீரோ, மெத்தை, தலையணைகள், சமையல் எரிவாயு அடுப்பு, வெட் கிரைண்டர், மிக்சி, குக்கர், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இவ்விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை சார்பாக 30 இணையர்களுக்கு திருமணத்தை உங்களுடைய முன்னிலையில் நடத்தி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன் பெருமை அடைகிறேன்.
மற்ற நிகழ்ச்சிகளை விட திருமண நிகழ்ச்சியில் கூடுதல் மகிழ்ச்சி கிடைக்கும். எங்கே நடத்தினாலும் அமைச்சர் சேகர் பாபு நடத்துகிற நிகழ்ச்சி சிறப்பாக இருக்கும். மிக மிக முக்கியமான நாள் இன்னைக்கு காதலர் தினம். காதலர் தினத்தை சிலர் கொண்டாட கூடாது என்பார்கள். காதலர் தினத்தை கொண்டாட இருக்க முடியுமா ?இங்கு இருக்கக்கூடிய ஒவ்வொரு இணையர்களும் நல்ல காதலர்களாகவும், நண்பர்களாகவும் இருக்க வேண்டும்,
தற்போதுவரை 1 லட்சத்து 80 ஆயிரம் கோயில் நிலங்கள் இந்து சமய அறநிலையத்துறையால் மீட்க பட்டு உள்ளது. 2022 ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை கிட்டத்தட்ட 1800 திருமணங்கள் நடத்தப்பட்டுள்ளது. இன்னும் 700 திருமணங்களை நடத்த ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இங்கு உள்ள மணமகள்கள் பலர் பட்டதாரிகளாக உள்ளனர் என்பது திராவிட மாடலின் பெருமை. ஒட்டுமொத்த தமிழ்நாடும் கல்வியில் சிறந்து காணப்படுகிறது.
உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. வீடு நன்றாக இருந்ததால் தான் நாடு நன்றாக இருக்கும் என்ற அறிஞர் அண்ணாவின் கூற்று படி மணமக்கள் வீட்டை நன்றாக கவனியுங்கள்.நாட்டை முதலமைச்சர் பார்த்துக்கொள்வார். திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்களை உலகமே வியந்து பாராட்டி வருகிறது. பட்ஜெட்டில் தமிழகத்திற்கு 1 ரூபாய் கூட ஒதுக்கவில்லை. 1 மணி நேரம் 20 நிமிடங்கள் பட்ஜெட் உரையை ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்தார். ஆனால் அதில் ஒருமுறை கூட தமிழ்நாடு என்ற பெயரை உச்சரிக்கவில்லை"என்று கூறினார்.