தமிழ்நாட்டின் வளர்ச்சியையும், திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் புறக்கணிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் சட்டப்பேரவையில் தனக்கு தரப்படும் உரையை வாசிக்காமல் புறக்கணித்து வரும் ஆளுநருக்கு, பிரதமர் மோடியின் அண்மை கூற்றே பதிலடியாக அமைந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாத்ததில் பேசிய பிரதமர் மோடி, மாநில அரசுகளால் தரப்படும் ஆளுநர் உரையை ஆளுநர்கள் வாசிப்பது தான் முறை என தெரிவித்தார். இதனையடுத்து, பா.ஜ.க.வின் கட்சியினர் போலவே, பணிபுரியும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கூடுதல் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இது குறித்து அமைச்சர் ரகுபதி, தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “நாடாளுமன்றத்தில் அவை மரபுகளை பற்றி பேசி சிலாகிக்கும் மோடி அவர்களுக்கு பாஜக ஆளாத மாநிலங்களின் சட்டமன்ற மரபுகளை ஆளுநர்கள் எவ்வாறு சிதைக்கின்றனர் என்பது தெரியாதா?
தமிழ்நாட்டில் மோடி நியமித்திருக்கும் ஆளுநர் ரவி அவர்களோ தமிழ்நாடு அரசின் உரையை வாசிப்பது கூட இல்லை!
ஆளுநரோடு முரண்பட்ட போதிலும் பேரவை நாகரிகம் கருதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆளுநருக்கு மதிப்பளித்து சட்டப்பேரவையில் உரையாற்ற சபாநாயகர் மூலம் அழைப்பு விடுத்தார். ஆனால் நாகரிகம் என்றால் கிலோ எத்தனை ரூபாய் என கேட்கும் அளவு நடந்து கொள்ளும் ஆளுநர் ரவி பேரவை மாண்பை மதிக்காமல் உரையை படிக்காமல் உதாசீனப்படுத்தினார்.
சட்டப்படி மாநில அரசு தயாரித்து கொடுக்கும் உரையை தான் ஆளுநர் வாசிக்க வேண்டும் அதை தான் நாம் வலியுறுத்தினோம். மாநில அரசிற்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற சட்டப்படியான உண்மையை பிரதமர் மோடியே ஒத்துக்கொள்கிறார். இனி என்ன சொல்லப் போகிறீர்கள் ஆளுநர் ரவி அவர்களே?” என பதிவிட்டுள்ளார்.