அரசியல்

“தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா?” : ஒன்றிய நிதிநிலை அறிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

“எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து அறிக்கையில் சேர்க்க மனம் வரவில்லை?”

“தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா?” : ஒன்றிய நிதிநிலை அறிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாட்டிற்கான திட்டங்களுக்கு நிதி வழங்காமல் வஞ்சிப்பதும், ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணிப்பதும், ஒன்றிய பா.ஜ.க அரசின் வழக்கமான நடவடிக்கையாகியுள்ளது.

இந்தியாவின் முன்னோடி மாநிலமாக இருந்து, பல துறைகளில் பல்லாயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிற மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வரும் வேளையில், தமிழ்நாட்டை தகர்க்கும் வகையில் பெயர் கூட குறிப்பிடப்படாத ஒன்றிய நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இதனை கண்டிக்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X வலைதளப் பக்கத்தில், “ஒன்றிய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா? தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லையே?

எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து அறிக்கையில் சேர்க்க மனம் வரவில்லை?

“தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா?” : ஒன்றிய நிதிநிலை அறிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

நெடுஞ்சாலைகள் - இரயில்வே திட்டங்கள் - கோவை, மதுரை மெட்ரோ இரயில் எதையுமே கொடுக்காதது ஏன்? எது தடுக்கிறது?

பொருளாதார ஆய்வறிக்கை, உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை அறிக்கை, நிதி ஆயோக் அறிக்கை என ஒன்றிய அரசின் அனைத்து அறிக்கைகளிலும் முதன்மையான இடத்தைப் பிடிக்கிறது தமிழ்நாடு. பக்கத்துக்குப் பக்கம் தமிழ்நாட்டின் செயல்பாடுகளுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கப்படுகிறது. ஆனால், நிதிநிலை அறிக்கையில் மட்டும் இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்படுவது ஏன்?

தமிழ்நாடு ஏற்காத கொள்கைகளையும் மொழியையும் திணிப்பதில் காட்டும் ஆர்வத்தில் சிறு துளியையாவது நிதி ஒதுக்கீட்டில் காட்ட வேண்டாமா?

ஒன்றிய அரசானது தன்னுடைய திட்டங்களில் தன்னுடைய பங்குத் தொகையைக் குறைத்து கொண்டே வருவதால், மாநில அரசின் நிதிச்சுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல்வேறு திட்டங்களில் மிகவும் குறைவாக மானியத் தொகையை வழங்கும் ஒன்றிய அரசு, அதிலும் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தமிழ்நாட்டிற்கு மட்டும் விதித்துள்ளது. விளம்பர மோகம் கொண்ட ஒன்றிய அரசு, திட்ட விளம்பரங்களில் ஒன்றிய அரசின் முத்திரை இடம் பெறாவிட்டால், திட்டம் சரியாகவும் செம்மையாகவும் செயல்படுத்தப்பட்டிருப்பினும், நமக்குச் சேரவேண்டிய திட்ட நிதியை விடுவிப்பதில்லை. விளம்பரம் ஒன்றையே பாராட்டும் ஒன்றிய அரசு, மக்கள் நலனில் எந்தவொரு அக்கறையையும் காட்ட மறுக்கிறது.

வெற்றுச் சொல் அலங்காரங்களும், வஞ்சனையான மேல் பூச்சுகளும் கொண்ட அறிக்கையின் மூலமாக இந்திய நாட்டு மக்களை வழக்கம் போல் ஏமாற்றும் பா.ஜ.க.,வின் பம்மாத்து நாடகம் தொடர்கிறது.

எந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதோ, எங்கு பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் உள்ளதோ அந்த மாநிலத்துக்கு மட்டும்தான் திட்டங்களும் நிதியும் அறிவிக்கப்படும் என்றால் ‘ஒன்றிய’ நிதிநிலை அறிக்கை என இதனை அழைக்க வேண்டிய அவசியம் என்ன?” என கண்டனம் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories