அரசியல்

”நாடாளுமன்றக் கூட்டுக்குழு கேலிக்கூத்தாக மாறிவிட்டது” : ஆ.ராசா MP குற்றச்சாட்டு!

நாடாளுமன்றக் கூட்டுக்குழு கேலிக்கூத்தாக மாறிவிட்டது என ஆ.ராசா எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.

”நாடாளுமன்றக் கூட்டுக்குழு கேலிக்கூத்தாக மாறிவிட்டது”  : ஆ.ராசா MP குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இஸ்லாமிய மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்பேோதுள்ள வக்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் வக்பு சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய அரசு தாக்கல் செய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த மசோதா 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பா.ஜ.க தலைவர் ஜகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக் குழு இந்த மசோதா தொடர்பாக ஆய்வு நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளியன்று நடந்த கூட்டத்தில் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் தி.மு.க MP ஆ.ராசா உள்ளிட்ட 10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றக்கூட்டுக்குழுவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதையடுத்து 572 திருத்தங்கள் மேற்கொள்ள பரிந்துரைகள் வந்துள்ளது. இதில் பா.ஜ.க வழங்கிய 22 திருத்தங்களுக்கு மட்டும் நாடாளுமன்ற கூட்டக்குழு ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் எதிர்க்கட்சிகள் வழங்கிய அனைத்து திருத்தங்களும் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தங்களுக்கு சாதகமான திருத்தங்களை மேற்கொண்டு, மீண்டும் நாடாளுமன்றத்தில் வக்பு சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. ஒன்றிய அரசின் இந்த அவசர நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இன்று வக்பு மசோதாவை இறுதி செய்ய நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலைவர் முயற்சி செய்வதாக திமுக எம்.பி.ஆ.ராசா குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா MP,”நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில் வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார். எங்களின் எதிர்ப்பையும் மீறி திருத்தங்கள் மீதான ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது. என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள். நாடாளுமன்றக் கூட்டுக்குழு வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக பயன்படுத்தப்படுகிறது. அது ஒரு கேலிக்கூத்தாக மாறிவிட்டது.

இஸ்லாமியர்களின் 60% சொத்துக்களை பறிக்கவே, வக்பு சட்டத்திருத்த மசோதாவை மீண்டும் தாக்கல் செய்து நிறைவேற்ற துடிக்கிறது பாஜக அரசு. அதற்கு உடந்தையாக நாடாளுமன்ற கூட்டுக் குழுவை ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது.” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories