அரசியல்

NPFAM திட்டம் : “விவசாயிகளை வஞ்சிக்கும் மோசமான திட்டம்” - ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம்!

தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் கொள்கை வரைவுத் திட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

NPFAM திட்டம் : “விவசாயிகளை வஞ்சிக்கும் மோசமான திட்டம்” - ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, டி.ஏ.பி. உரமானியம் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி “கிசான் மஸ்தூர் மோர்சா” (Kisan Mazdoor Morcha), “சம்யுக்தா கிசான் மோர்சா” (Samyukta Kisan Morcha) விவசாயச் சங்கங்களின் தலைமையின் கீழ் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி விவசாயிகள் டெல்லி முற்றுகைப் போராட்டத்தைத் தொடங்கிய நிலையில், பத்து மாதத்திற்கும் மேலாக பஞ்சாப், ஹரியானா எல்லைகளில் கடுங்குளிரிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு போராட்டத்தின் தொடர்ச்சியாக வீரம் செறிந்த விவசாயிகள் போராட்டத்தின் நான்காம் ஆண்டு நினைவு தினமான நவம்பர் 26 அன்று விவசாயிகள் நாடு முழுவதும் டிராக்டர் அணிவகுப்பு மற்றும் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் ஒன்றிய அரசும், அரியானா மாநில அரசும் கண்ணீர்ப் புகைக் குண்டு, ரப்பர் தோட்டா போன்றவற்றைக் கொண்டு விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கின.

இதனால் கொந்தளித்த உணர்வுடன் அன்றைய தினமே பஞ்சாப் விவசாய சங்கத் தலைவர் ஜிக்ஜித் சிங் தல்லேவால் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தினை அறிவித்தார்.

அன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தல்லேவால் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி மயக்கமடைந்தார். பின்னர் மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் வலியுறுத்தியும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளப்போவதில்லை என்று தெரிவித்துவிட்டார்.

NPFAM திட்டம் : “விவசாயிகளை வஞ்சிக்கும் மோசமான திட்டம்” - ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தினால் ஏற்படுகின்ற எடை குறைவு, ரத்த அழுத்தம் அதிகரிப்பு போன்றவற்றால் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஒன்றிய பாஜக அரசு அலட்சியமாக இருக்கிறது.

உச்சநீதிமன்றம் பேச்சுவார்த்தைக்கு உத்தரவிட்ட பிறகும், விவசாய அமைப்புகளுடன் பிரதமர் மோடி விவாதிக்க தயாராக இல்லை. சட்டப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட விவசாயப் பொருட்களை கொள்முதல் செய்வது மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையின் அடிப்படையில் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயம் குறித்து பரிசீலிக்க ஒன்றிய அரசு தயாராக இல்லை.

விவசாயிகளின் கடன் தள்ளுபடி, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் கடுமையான துயரங்களைப் பற்றி விவாதிப்பதற்குப் பதிலாக, ஒன்றிய பாஜக அரசு புதிய தேசிய வேளாண் சந்தைக் கொள்கையை (National Policy Framework on Agricultural Marketing - NPFAM) வரைவு அறிக்கையாக வெளியிட்டு கருத்து கேட்டு வருகிறது.

ஒன்றிய அரசின் புதிய தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் வரைவு அறிக்கை விவசாயிகளின் ஓராண்டுகால வீரஞ்செறிந்த போராட்டத்தால் தூக்கி எறியப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மூன்று வேளாண் சட்டங்களை விட மிக மோசமானது தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் கொள்கை என்று விவசாயிகள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் டிஜிட்டல் வேளாண்மைத் திட்டம், தேசிய ஒத்துழைப்புக் கொள்கை ஆகியவற்றை அமல்படுத்த முயற்சிப்பதன் மூலம் விவசாயம், தொழில் மற்றும் சேவைத்துறைகள் மீதான தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது ஒன்றிய அரசு என்று கூறியுள்ளது.

NPFAM திட்டம் : “விவசாயிகளை வஞ்சிக்கும் மோசமான திட்டம்” - ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம்!

இந்நிலையில்தான் குறைந்தபட்ச ஆதாரவிலை, குறைந்தபட்ச கூலிக்கான உத்தரவாதம், விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி, மின்சாரம் தனியார்மயமாக்குவதைத் தடுப்பது மற்றும் LARR 2013 (Land Acquisition and Rehabilitation and Resettlement Bill) சட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட அடிப்படையான கோரிக்கைகளை அடைவதற்காக விவசாயிகள் போராட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர்.

சம்யுக்தா கிசான் மோர்சா (SKM), கிசான் மஸ்தூர் மோர்சா (KMM) போன்ற விவசாய அமைப்புகள் ஜனவரி 9, 2025 அன்று பஞ்சாபின் மோகாவில் போராட்டத்தைத் தொடங்குவதற்கு அறைகூவல் விடுத்துள்ளன. ஒன்றிய அரசு தேசிய சந்தைப்படுத்துதல் கொள்கை வரைவு அறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும். ஒரு மாதத்துக்கு மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பஞ்சாப் விவசாயிகள் சங்கத் தலைவர் ஜிக்ஜித் சிங் தல்லேவால் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து அவர் உயிரை காக்க வேண்டும்.

பஞ்சாப் மாநில அரசு இந்த வரைவு அறிக்கையை நிராகரித்ததை போல தமிழ்நாடு அரசும் நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

banner

Related Stories

Related Stories