நாடாளுமன்ற மக்களவையில், “எதெற்கெடுத்தாலும் அம்பேத்கர்.. அம்பேத்கர்.. என்று சொல்கிறார்கள். அவர் பெயருக்கு பதில் கடவுளின் பெயரை சொல்லி இருந்தால் ஏழு ஜென்மம் சொர்க்கம் கிடைத்திருக்கும்” என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது இந்திய அளவில் பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட இந்திய அரசியல் தலைவர்கள் பலரும், “மநுநீதியை தூக்கிப்பிடிப்பவர்களுக்கு அம்பேதகர் பெயர் கசக்கத்தான் செய்யும்” என கண்டனம் எழுப்பி வருகின்றனர்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல்சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும்!” என தனது x சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
இந்நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை, அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் இரண்டாவது நாளாக தொடர்ந்து வருகிறது.
அவ்வகையில், சென்னையில் பம்மல், காட்டாங்குளத்தூர், குன்றத்தூர், திருவொற்றியூர், தாம்பரம் உள்ளிட்ட பல இடங்களில் நூற்றுக்கணக்கானோர் கூடி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படும் பா.ஜ.க ஒருபுறம் என்றால், அதனை கண்டுகொள்ளாமல் இருக்கும் அ.தி.மு.க மறுபுறம் என இரு கட்சிகளுக்கும் கண்டனங்கள் முழக்கங்களாக எழுப்பப்பட்டன.