அரசியல்

தோற்று மக்களால் நிராகரிக்கப்பட்ட தோல்விசாமி... அதிமுகவின் பொய் கணக்குகளை அம்பலப்படுத்திய முரசொலி !

அனைத்துத் தேர்தலிலும் தோற்று மக்களால் நிராகரிக்கப்பட்டவர்தான் பழனிசாமி.

தோற்று மக்களால் நிராகரிக்கப்பட்ட தோல்விசாமி... அதிமுகவின் பொய் கணக்குகளை அம்பலப்படுத்திய முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (18-12-2024)

பழனிசாமியின் தப்புத் தாளங்கள்

பேசத் தெரியாதவர் கூட்டத்தில் உளறுபவர் கெட்டிக்காரர் என்ற நினைப்பில் அ.தி.மு.க. பொதுக்குழுவில் உளறிக் கொட்டி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவர் சொல்லும் புள்ளிவிபரங்களைப் பார்த்தால் புல்லரிக்கிறது. அவர் பேசும் லாஜிக்குகளைப் படித்தால் குமட்டிக் கொண்டு வருகிறது. இப்போது நாம் பார்க்கும் பழனிசாமி, அனைத்திலும் தோற்ற தோல்விசாமி ஆவார்.

2019 - நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற இடைத் தேர்தல், 9 மாவட்ட

ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள்

2021 - - ஊரக உள்ளாட்சித் தேர்தல், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

2022 -- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

2023 - - ஈரோடு இடைத்தேர்தல்

2024 - நாடாளுமன்றத் தேர்தல்-ஆகிய அனைத்துத் தேர்தலிலும் தோற்றவர். இதன் மூலமாக மக்களால் நிராகரிக்கப்பட்டவர்தான் இந்த பழனிசாமி.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நிற்காமல் புறமுதுகு காட்டி ஓடியவர் பழனிசாமி. பெரிய கூட்டணி அமையாததால் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றாராம் பழனிசாமி. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.கூட்டணி 47 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளது. அ.தி.மு.க. கூட்டணி 23 விழுக்காட்டையும், பா.ஜ.க. கூட்டணி 18 விழுக்காட்டையும் பெற்றுள்ளது. அ.தி.மு.க.வின் விழுக்காட்டையும் பா.ஜ.க. விழுக்காட்டையும் கூட்டினால் 41 விழுக்காடுதான் வருகிறது. 47 ஐ தாண்டவில்லை. எனவே, பழனிசாமி எந்தக் கூட்டணி அமைத்திருந்தாலும் தோற்றுத்தான் போயிருப்பார்.

தோற்று மக்களால் நிராகரிக்கப்பட்ட தோல்விசாமி... அதிமுகவின் பொய் கணக்குகளை அம்பலப்படுத்திய முரசொலி !

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதியிலும் தோற்றவர் மட்டுமல்ல; 7 தொகுதியில் டெபாசிட் போய்விட்டது பழனிசாமி கட்சிக்கு. 12 தொகுதியில் மூன்றாவது இடத்துக்கு பழனிசாமியின் கட்சி போனது. கன்னியாகுமரி தொகுதியில் நான்காவது இடம் போனது பழனிசாமியின் கட்சி. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை 234 சட்டமன்றத் தொகுதி வாரியாக பகுத்துப் பார்த்தால் 222 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. “222 சட்டமன்றத் தொகுதி வாரியாக தி.மு.க. கூட்டணி அதிக வாக்குகள் பெற்றுள்ளது” என்று 'தி இந்து' ஆங்கில நாளிதழ் செய்திக் கட்டுரை வெளியிட்டது பழனிசாமிக்குத் தெரியுமா?

32 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய 192 சட்டமன்றத் தொகுதிகளில் முழுமையாக தி.மு.க. கூட்டணியே அதிக வாக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது என்றும், திருவள்ளூர், தென்சென்னை, அரக்கோணம், பெரம்பலூர், கரூர், திருச்சி, கோவை, நாமக்கல், நீலகிரி, மதுரை, தென்காசி, தூத்துக்குடி மக்களவை தொகுதி களில் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிக வாக்குகளைத் தி.மு.க. கூட்டணி பெற்றுள்ளது என்றும் 'தி இந்து' சொல்லியது.

மக்களவைத் தேர்தல் வாக்கு விவரங்களின் படி 3 சட்டசபைத் தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க. முன்னணியில் இருக்கிறது. 3 தொகுதிகளில் மட்டுமே பா.ம.க. அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. 2 தொகுதிகளில் மட்டுமே தே.மு.தி.க. வேட்பாளர்கள் கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளனர். பா.ஜ.க. எந்த சட்டமன்றத் தொகுதியிலும் கூடுதல் வாக்குகளை வாங்கவில்லை என்றும் 'தி இந்து' ஆங்கில நாளிதழ் சொல்லி இருந்தது.

பழனிசாமிக்குப் புரியும் மொழியில் சொன்னால், நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் போது சட்டமன்றத் தேர்தல் நடந்திருந்தால் பழனிசாமி கட்சிக்கு 3 சீட்தான் கிடைத்திருக்கும். இது எதுவும் புரியாமல், கத்திக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.

இவ்வளவு தைரியசாலி என்றால் விக்கிரவாண்டியில் பழனிசாமி போட்டியிட்டிருக்கலாமே? ஏன் ஓடிப் பதுங்கினார்? திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்ட அன்னியூர் சிவா என்கிற சிவ சண்முகம், தனக்கு அடுத்ததாக வந்த பா.ம.க. வேட்பாளரை விட 67 ஆயிரத்து 575 வாக்குகளைக் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். 1 லட்சத்து 95 ஆயிரம் வாக்குகள் பதிவானது என்றால் அதில் 1 லட்சத்து 24 ஆயிரம் வாக்குகள் உதயசூரியனுக்குக் கிடைத்துள்ளது. மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை தி.மு.க. பெற்றுள்ளது. இது தெரிந்துதான் பழனிசாமி தலைமறைவு ஆனார்.

தோற்று மக்களால் நிராகரிக்கப்பட்ட தோல்விசாமி... அதிமுகவின் பொய் கணக்குகளை அம்பலப்படுத்திய முரசொலி !

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, 2022 ஆம் ஆண்டு உள்ளாட்சித்தேர்தல் நடந்தது. 21 மாநகராட்சிகள் -132 நகராட்சிகள் --- 435 பேரூராட்சிகள் -- என அனைத்தையும் மொத்தமாக கழகக் கூட்டணி கைப்பற்றியது.

கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு ஆகிய மாநகராட்சிகளைக் குறி வைத்து களம் இறங்கியது அ.தி.மு.க. பழனிசாமி கட்சிக்கு மரண அடிதான் கிடைத்தது.

கோவையில் மொத்த வார்டுகள் 100. இதில் 3 இடங்கள்தான் அ.தி.மு.க. பிடித்தது.

சேலத்தில் மொத்த வார்டுகள் 60. இதில் 7 இடங்களைத்தான் அ.தி.மு.க. பிடித்தது.

ஈரோட்டில் மொத்த வார்டுகள் 60. இதில் 6 இடங்களைத்தான் அ.தி.மு.க. பிடித்தது.

திருப்பூரில் மொத்த வார்டுகள் 60. இதில் 19 வார்டுகளை அ.தி.மு.க. கைப்பற்றியது. இதுதான் அ.தி.மு.க.வின் கோட்டையாக இவர்கள் சொல்லிக் கொண்ட மேற்கு மண்டலத்தின் நிலைமை ஆகும்.

சென்னையில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் 15 வார்டுகளும், மதுரையில் 100 வார்டுகளில் 15 வார்டுகளும், திருச்சியில் 65 வார்டுகளில் 3 வார்டுகளும், நெல்லையில் 44 வார்டுகளில் 4 வார்டுகளும், கரூரில் 43 வார்டுகளில் 2 வார்டுகளும், கடலூரில் 45 வார்டுகளில் 6 வார்டுகளும் ---- மட்டுமே அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடிந்துள்ளது. தி.மு.க. வாக்குகளை மட்டுமல்ல, அ.தி.மு.க. ஆதரவு வாக்குகளையும் சேர்த்து தி.மு.க. வாங்கிவிட்டது. இதுதான் உண்மை.

எனவே, பொய்க் கணக்குகள் சொல்வதை விட்டுவிட்டு மக்களுக்கு ஆக்கபூர்வமான செயல்களைச் செய்வதில் பழனிசாமி கவனம் செலுத்த வேண்டும்.

banner

Related Stories

Related Stories