அரசியல்

75 ஆண்டுகளில் முதன்முறை... மாநிலங்களவைத் தலைவருக்கு எதிராக நோட்டீஸ் : காரணத்தை விளக்கும் முரசொலி !

75 ஆண்டுகளில் முதன்முறை... மாநிலங்களவைத் தலைவருக்கு எதிராக நோட்டீஸ் : காரணத்தை விளக்கும் முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (14-12-24)

மாநிலங்களவை வரலாற்றில்...

1952ஆம் ஆண்டு மாநிலங்களவை உருவாக்கப்பட்டதில் இருந்து அவைத் தலைவருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதே இல்லை. முதல் முறையாக மாநிலங்களவைத் தலைவர் – துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து, ‘நம்பிக்கை இல்லாத் தீர்மானம்’ கொண்டுவர நோட்டீஸ் கொடுத்துள்ளார்கள். மாநிலங்களவைச் செயலாளர் பி.சி.மோடியிடம் இந்த நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. ( எங்கேயும் ‘மோடி’ தான்!)

காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா ( உத்தவ்), ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாடி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் 60க்கும் மேற்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் சார்பில் இந்த நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 67 (பி) படி இந்த நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் பேசும் உரிமையை 11 நாட்களாக தொடர்ந்து பறிக்கிறார் தன்கர் என்பதே எதிர்க்கட்சிகளின் முக்கிய கோபத்துக்குக் காரணம்.

பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் மூலமாக துணைக் குடியரசுத் தலைவரைப் பதவி நீக்கம் செய்ய முடியும். தீர்மானம் கொண்டு வர குறைந்தபட்சம் 50 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இப்போது 60 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளார்கள்.

1954, 1966, 1987 ஆகிய ஆண்டுகளில் மக்களவைத் தலைவருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால் முதன்முதலாக மாநிலங்களவைத் தலைவருக்கு எதிராக இப்போதுதான் நோட்டீஸ் முதன்முறையாகத் தரப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், தன்கரின் நடவடிக்கைகள்தான்.

75 ஆண்டுகளில் முதன்முறை... மாநிலங்களவைத் தலைவருக்கு எதிராக நோட்டீஸ் : காரணத்தை விளக்கும் முரசொலி !

அதானி விவகாரம் குறித்து அவையில் பேசுவதற்கு எதிர்க்கட்சிகள் கொடுத்த நோட்டீஸ் எதையும் அவைத்தலைவர் தன்கர் ஏற்கவில்லை. மணிப்பூர், சம்பல் விவகாரங்களையும் பேச அனுமதிக்கவில்லை. அதனால்தான் அவருக்கு எதிராகவே நோட்டீஸ் வந்துவிட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பேச அனுமதிப்பது இல்லை, அனுமதித்தாலும் தேவையில்லாமல் குறுக்கிடுவது, குறுக்கிட்டு நேரத்தை இழுப்பது, அரசியல் பிரச்சினைகளைக் கிளப்பி எதிர்க்கட்சிகளைப் பேசவிடாமல் தடுப்பது போன்ற செயல்களை அவைத்தலைவர் தன்கர் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே பேசும் போது ஒலிவாங்கியை அணைப்பதும் நடந்துள்ளது. சில எம்.பி.க்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் அவையில் தன்கர் பேசியதாக குற்றம் சாட்டப்படுகிறது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ‘இதுதொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துகள், மாநிலங்களவை எப்படி நடக்கிறது’ என்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

“மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் பாகுபாடான நடத்தையே அவருக்கு எதிராக நாங்கள் நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸ் கொடுக்கக் காரணம் ஆகும். பா.ஜ.க. அரசின் செய்தித் தொடர்பாளரைப் போல அவர் நடந்து கொள்கிறார். யாரையும் பேச அனுமதிக்க மறுக்கிறார். அனுபவமிக்க உறுப்பினர்களுக்கும் தனது விருப்பம் போல அறிவுரை சொல்கிறார். மாநிலங்கள் அவையில் பல இடையூறுகளுக்கு அவரே காரணம். பதவிக்குரிய கண்ணியத்தோடு அவர் நடந்து கொள்ளவில்லை. மாநிலங்களவையின் விதிமுறைகளை அவர் மதிப்பது இல்லை. அரசியல் உள்நோக்கத்துடன் அவர் செயல்படுகிறார். தன்கரின் பாரபட்சமான நடவடிக்கை காரணமாக அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவருவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. அவரது நடவடிக்கை, அவையின் விதிகளுக்குப் புறம்பானது மட்டுமல்ல; இந்திய மக்களுக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கும் விரோதமானது” என்று மல்லிகார்ஜூன கார்கே சொல்லி இருக்கிறார்.

75 ஆண்டுகளில் முதன்முறை... மாநிலங்களவைத் தலைவருக்கு எதிராக நோட்டீஸ் : காரணத்தை விளக்கும் முரசொலி !

வழக்கம் போல இதனைத் திசை திருப்பப் பார்க்கிறது பா.ஜ.க. தன்கர் மீதான குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதில் சொல்லத் தெரியாத பா.ஜ.க., ‘காங்கிரஸ் கட்சிக்கும் – தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸுக்கும் தொடர்பு’ என்ற புதுப்பிரச்சினையைக் கிளப்பி திசை திருப்பப் பார்க்கிறது.

“மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதோடு, அவர் சார்ந்த ஜாட் சமூகத்தையும் அவமதிக்கிறது காங்கிரஸ். எளிமையான விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவரான தன்கரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்து அவரை நீக்க முயற்சிக்கிறது” என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா சொல்லி இருக்கிறார்.

தன்கரை விமர்சிப்பது என்பது அவர் மாநிலங்களவைத் தலைவராக இருப்பதால்தான். அவர் விவசாயி என்பதற்காகவோ, அவர் சமூகத்துக்காகவோ அல்ல. அவர் விவசாயியாக இருப்பது அல்ல இங்கு பிரச்சினை. எளிமையான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவராகச் சொல்லப்படும் தன்கர், இப்படி நடந்து கொள்ளலாமா என்பதுதான் கேள்வி.

மாநிலங்களவையில் விவசாயிகள் பிரச்சினை குறித்து விவாதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ஒத்திவைப்பு நோட்டீஸை மறுத்தவர் ‘விவசாயி மகனான’ அவைத்தலைவர் தன்கர்தான். ‘வெற்று முழக்கங்கள் எழுப்புவதாலும், முதலைக் கண்ணீர் வடிப்பதாலும் விவசாயிகளுக்குச் சேவையாற்ற முடியாது’ என்று உறுப்பினர்களைப் பார்த்துச் சொன்னார் தன்கர். ‘நீங்கள் அரசியலாக்குகிறீர்கள்’ என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அப்போதே குற்றம் சாட்டினார்கள்.

மாநிலங்களவையில் டிசம்பர் 3 ஆம் தேதியன்று அவை கூடியதும் விதி எண் 267 இன் கீழ் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதம் கோரி 42 நோட்டீஸ்கள் அவைத்தலைவர் தன்கர் முன் கொடுக்கப்பட்டன. 42 நோட்டீஸ்களையும் தன்கர் நிராகரித்தார். ‘அவை அலுவல்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஆயுதமாக இந்த நோட்டீஸ்களை பயன்படுத்தக் கூடாது’ என்று தன்கர் சொன்னார்.

‘கடந்த 25 ஆண்டுகளில் இவ்வளவு அதிகமான நோட்டீஸ்கள் தரப்பட்டது இதுவே முதல் முறை’ என்று தன்கர் சொன்னார். கடந்த 75 ஆண்டுகளில் முதன்முறையாக மாநிலங்களவைத் தலைவருக்கு எதிராகவும் நோட்டீஸ் தரப்பட்டுள்ளதும் இதுவே முதல் முறையாகும். இது நாடாளுமன்ற ஜனநாயகம் எந்த அளவுக்கு மிக மோசமாக பா.ஜ.க. தலைமையில் நடத்தப்படுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டுகள் அல்லவா?

banner

Related Stories

Related Stories