தமிழ்நாடு

”பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை” : செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்த துணை முதலமைச்சர் உதயநிதி!

செம்பரம்பாக்கம் ஏரியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

”பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை” : செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்த துணை முதலமைச்சர் உதயநிதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (13.12.2024) சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கம் ஏரியில் கனமழையினால் நீர் நிரம்பியுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரிநீர் வெளியேற்றப்படுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் நீர் நிரம்பியுள்ளதையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரிநீர் வெளியேற்றப்படுவதையும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்த பின்னர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணத்தால், சென்னை மட்டுமன்றி பல மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

கன மழையால் சென்னையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதிகளாக உள்ள பூண்டி நீர்த்தேக்கம், செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரிகளில் தண்ணீர் முழு கொள்ளவை எட்டியுள்ளது.

முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், நானும், நம்முடைய மாவட்ட அமைச்சர் அவர்களும், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களும், நீர்வளத் துறை செயலாளர் அவர்களும் இன்றைக்கு செம்பரம்பாக்கம் ஏரியைத் தொடர்ந்து, பூண்டி நீர்த்தேக்கம், புழல் ஏரிகளில் ஆய்வு செய்ய இருக்கின்றோம்.

பூண்டி நீர்த்தேக்கத்தை பொறுத்தவரை 99.16 சதவீதம் அளவுக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. பூண்டி நீர்த்தேக்கமானது, 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி கொள்ளளவை கொண்டது. தற்போது 3 ஆயிரத்து 204 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

கொசஸ்தலை ஆற்றில் 80 ஆயிரம் கன அடி அளவுக்கு தண்ணீர் செல்லக்கூடும். அந்த இடத்தில் 16 ஆயிரத்து 500 கன அடி அளவு தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது. எனவே, எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. எந்தவிதமான அச்சமும் பொதுமக்கள் அடையத் தேவையில்லை.

அதேபோல, செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவில் 96 சதவீதம் அளவுக்கு நீர் நிரம்பியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியைப் பொறுத்தவரை, முழு கொள்ளவான 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடியில், 3 ஆயிரத்து 535 மில்லியன் கன அடி அளவுக்கு நீர் நிரம்பியுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 32 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றலாம். அந்த இடத்தில் தற்போது, 4 ஆயிரத்து 632 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதே போல, புழல் ஏரியின் முழு கொள்ளளவில் 90 சதவீதம் அளவுக்கு நீர் நிரம்பியுள்ளது. புழல் ஏரியில் இருந்து விநாடிக்கு 7 ஆயிரத்து 200 கன அடி தண்ணீரை வெளியேற்றலாம். ஆனால், தற்போதுவரை, விநாடிக்கு 709 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது.

இவை அனைத்து இடங்களிலுமே வாய்க்கால்களின் முழு கொள்ளவுக்கு உட்பட்டே நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் வெளியேற்றப்பட்டு வருவது தொடர்பான எச்சரிக்கை, நீர் வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ச்சியாக நேற்று இரவு முதல் விடுக்கப்பட்டுள்ளது.

இது முழுக்க, முழுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை தான். இதனை அரசு தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த நேரத்தில் பொதுமக்கள் யாரும் எந்தவிதமான அச்சமோ, பயமோ கொள்ளத் தேவையில்லை. கனமழை நேரத்தில், அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு நான் கேட்டுக் கொள்கின்றேன்.

கேள்வி :- தென்மாவட்டங்களிலும் தற்போது அதிக அளவில் மழை பாதிப்பு உருவாகிக் கொண்டிருக்கிறது. தென் மாவட்டங்களுக்கு நீங்கள் ஆய்வுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறதா?

துணை முதலமைச்சர் பதில் :- காலையில் முதலமைச்சர் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள். தேவைப்பட்டால் இன்று இரவோ அல்லது நாளை காலையோ சூழ்நிலைக்கேற்ப நிச்சயமாக ஆய்வுக்கு செல்வேன்.

கேள்வி :- எவ்வளவு மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய உதவிகள் செய்யப்பட்டு வருகிறதா?

துணை முதலமைச்சர் பதில் :- தற்போது அனைத்து இடங்களிலும் முகாம்கள் தயாராக உள்ளது. மக்களுக்கான அனைத்தும் தயாராக உள்ளது. இன்றைக்கு சென்னையில் எந்தப் பிரச்சினையும் கிடையாது. இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குப் பிறகு மழை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதும், அனைத்து முகாம்களும் தயாராக இருக்கும். மக்களிடம் கேட்டுக்கொள்வது தயவுசெய்து பதட்டமோ, பீதியோ அடைய வேண்டாம். நிவாரண முகாம்களுக்கு சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இதனைத் தொடர்ந்து, "செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து குறைவான நீரே வெளியேற்றப்படுகிறது. நீரை வெளியேற்றும் அளவை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் யாரும் அச்சமோ - பீதியோ அடையத் தேவையில்லை." என சமூகவலைதளத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories