வங்கம் எரிவது ஏன் ?
வங்க தேசமே எரிகிறது. வங்க தேசத்தின் தந்தையாகப் போற்றப்பட்ட முஜிபுர் ரகுமானின் சிலை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் பிரதமரே தலைமறைவு ஆகி, இந்தியாவுக்குள் வந்துவிட்டார். அவரது வீட்டுக்குள் போராட்டக்காரர்கள் புகுந்துவிட்டார்கள். அந்த நாட்டின் ஆட்சியை ராணுவம் ஏற்றுக் கொண்டு விட்டது. உடனே இதனை அந்நிய நாட்டு சதி என்று சொல்லி மூடப் பார்க்கிறார்கள். உண்மையான காரணம் உணரப்படுவதாகத் தெரியவில்லை.
1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் உருவானது. இந்தப் போரில் உயிர் இழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த இடஒதுக்கீடு அதிகம் என்று சொல்லி வங்கதேச மாணவர்கள் கடந்த ஜூன் மாதம் போராட்டம் தொடங்கினார்கள். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
இது தொடர்பான வழக்கை ஜூலை 21 ஆம் தேதியன்று வங்கதேச உச்சநீதிமன்றம் விசாரித்தது. வங்கதேச சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான இடஒதுக்கீட்டை 5 விழுக்காடாக நீதிமன்றம் குறைத்தது. மாணவர்கள் போராட்டம் அமைதியானது. இந்த நிலையில் மாணவர் போராட்டத்தை தூண்டியதாக 6 பேரைக் கைது செய்த போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து அவர்களை கடுமையாக விசாரித்தார்கள். அவர்கள் கடுமையாக தாக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. அடங்கி இருந்த மாணவர் போராட்டம் மீண்டும் அதிகமானது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்தார்கள். தலைநகர் டாக்கா உள்பட வங்கதேசத்தில் பல்வேறு காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டது. சிராஜ் கஞ்ச் காவல் நிலையத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த 14 காவலர்களை படுகொலை செய்தார்கள். டாக்காவில் 2 முன்னணி நாளிதழ் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியின் பெயர் அவாமி லீக் என்பது ஆகும். அந்தக் கட்சியின் அலுவலகத்தை தீ வைத்து கொளுத்திவிட்டார்கள். டாக்காவில் உள்ள நாடாளுமன்ற வளாகத்துக்குள் போராட்டக் காரர்கள் நுழைந்துவிட்டார்கள். பிரதமர் ஹசீனாவின் வீட்டுக்குள் பல்லாயிரக் கணக்கானவர்கள் நுழைந்துவிட்டார்கள். வீடே சூறையாடப்பட்டது. டாக்காவில் மட்டும் ஒரே நேரத்தில் 4 லட்சம் பேர் திரண்டு விட்டதாகச் செய்திகள் கூறுகின்றன. போராட்டம் இவ்வளவு பெரிய வன்முறையாக, தொடர் வன்முறையாக மாறுவதற்கு என்ன காரணம்?
கடந்த ஜனவரி மாதம் தான் அந்த நாட்டில் தேர்தல் நடந்தது. ஷேக் ஹசீனா மீண்டும் வெற்றி பெற்றார். முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியக் கட்சியானது பொதுத் தேர்தலையே புறக்கணித்ததால் ஹசீனாவுக்கு வெற்றி சாதாரணமாகக் கிடைத்தது. மொத்தம் 16 கட்சிகள், பொதுத் தேர்தலைப் புறக்கணித்தன. இருந்தாலும் ஏழு மாதத்துக்குள் அவருக்கு எதிராக இவ்வளவு பெரிய எதிர்ப்பு அலை கிளம்ப என்ன காரணம்?
வங்கதேச கலவரத்தின் பின்னணியில் பிற அந்நிய தேசத்தின் உளவு அமைப்புகளின் பங்கு இருப்பதாக செய்திகளை பரப்புகிறார்கள். இது உண்மையான காரணத்தை உணரவிடாமல், அல்லது மறைக்கும் தந்திரம் ஆகும். ஏழு மாதத்துக்கு முன் பிரதமர் ஆனவர், தொடர்ந்து 15 ஆண்டுகளாகப் பிரதமராக இருந்தவர் தனது பதவியை விட்டு விலகி இன்- னொரு நாட்டில் தஞ்சம் அடைய வேண்டிய சூழல் எதனால் ஏற்பட்டது?
தனது ஆட்சிக்கு எதிராக கருத்துச் சொன்னவர்களை, போராட்டம் நடத்தியவர்களை, 'அந்நிய நாட்டின் கைக்கூலிகள்' என்று கொச்சைப்படுத்தும் வகையில் இழிவான ஒரு சொல்லை ஜூலை 14 ஆம் தேதி அன்று தொலைக்காட்சியில் பயன்படுத்தினார் பிரதமர் ஹசீனா. 'தேசத் துரோகி' என்பதை கெட்ட வார்த்தையாகச் சொல்வது ஆகும். இதுதான் மாணவர்களை அதிகமாக கோபப்படுத்தியது. சொந்த நாட்டு மக்களை தேசத்துரோகிகள் என்று சொல்வதா? என்பதுதான் மாணவர்கள், இளைஞர்களின் கோபம் ஆகும்.
30 விழுக்காடு இடஒதுக்கீடு என்பதை 5 விழுக்காடாக உச்சநீதிமன்றமே குறைத்துவிட்டது. அதன்பிறகும் போராட்டம் நடக்கக் காரணம், இந்த வார்த்தைதான். 'கண்டதும் சுட உத்தரவு' போடப்பட்டது. அதுவும், மாணவர்களது கோபத்தை அதிகம் ஆக்கியது. வேலையில்லாத் திண்டாட்டம் வங்க தேசத்தில் அதிகமாகி வருகிறது. கல்லூரிகளை முடித்துவிட்டு வெளியில் வந்து, வேலை கிடைக்காமல் இருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதற்கான எந்தத் தீர்வையும் ஹசீனா அரசாங்கம் செய்யவில்லை. போராட்டக்காரர்கள் மனதில் பொங்கி நிற்பது இதுதான் என அங்கிருந்து செய்திகள் வழங்கும் பத்திரிக்கையாளர்கள் சொல்கிறார்கள். “வங்க தேசத்தில் ஜனநாயகம் இல்லாததால்தான் இவை எல்லாம் நடக்கிறது” என்று வங்க தேசத்தைச் சேர்ந்தவரும் நோபல் பரிசு பெற்றவருமான முகமது யூனுஸ் சொல்லி இருக்கிறார்.
காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ராணுவம் உள்பட யாராலும் கட்டுப்படுத்த முடியாத போராட்டத்தை மாணவர்கள் முன்னெடுத்தார்கள். இது ஒரு பாடம். வங்கதேசத்துக்கு மட்டுமல்ல; உலகம் முழுக்க உள்ள ஒவ்வொரு சர்வாதிகாரிக்கும் இது ஒரு பாடம் என்று சொல்லி இருக்கிறார்.
இது உலகம் கவனிக்க வேண்டிய பாடம் ஆகும்!
- முரசொலி தலையங்கம்!