அரசியல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : அதிமுகவின் புறக்கணிப்பு மறைமுகமாக பாஜகவை ஆதரிக்கவே - கி.வீரமணி !

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : அதிமுகவின் புறக்கணிப்பு மறைமுகமாக பாஜகவை ஆதரிக்கவே -  கி.வீரமணி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஜூலை 10 அன்று விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை மிகப்பெரிய அளவில் வெற்றியடையச் செய்ய அர்ப்பணிப்போடு உழைப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை பின்வருமாறு :

ஜூலை 10 அன்று விக்கிரவாண்டி இடைத்தேர்தல்!

விக்கிரவாண்டி தொகுதியில் சிறப்பாக செயல்பட்ட தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி அகால மரணமடைந்த நிலையில், அத்தொகுதியில் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். தி.மு.க. உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் தி.மு.க. வேட்பாளர் வெற்றிக்கு ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை மேற்கொண்டு விட்டன.

அ.தி.மு.க. இடைத்தேர்தலைப் புறக்கணிப்பது – அதன் பலகீனத்துக்கான அறிகுறியே!

எதிரணியைப் பொறுத்தவரை பா.ம.க. சார்பில் பி.ஜே.பி. கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பிரதான எதிர்க்கட்சியான எடப்பாடி பழனிசாமியைப் பொதுச்செயலாளராகக் கொண்ட அ.தி.மு.க. இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்திருப்பது – அது ஓர் அரசியல் கட்சி என்ற நிலைப்பாட்டுக்கான கடமையை நிறைவேற்றுவதிலிருந்து பி்ன்வாங்குவது உள்நோக்கம் கொண்டது என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

அ.தி.மு.க.வின் பொது மதிப்பும் காணாமல் போகும்!

இது அக்கட்சிக்கான தோல்வியின் அச்சத்தைப் புலப்படுத்துகிறது. அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்ல, பொதுமக்கள் மத்தியில், வாக்காளர்கள் மத்தியில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு இருப்பதாகக் கூறப்படும் பொது மதிப்பையும் இழக்க நேரிடும் என்பதில் அய்யமில்லை.தேர்தலில் நிற்பதில்லை என்ற முடிவுக்குச் சொல்லப்படும் காரணங்கள் பொது அறிவுக்குப் பொருத்தமானதல்ல.அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது 144 தடை போட்டு பணப் பட்டுவாடா செய்யப்படவில்லையா?ஆளும் கட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தும், பணத்தை அதிகமாகச் செலவழிக்கும் என்பது எல்லாம் ஏற்க முடியாத சறுக்கலாகும்.

அ.தி.மு.க. ஆளும் கட்சியாக இருந்தபோது, 144 தடை சட்டம் போட்டு இரவோடு இரவாக பணம் பட்டுவாடா செய்ததை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.ஆம்புலன்சைப் பணக்கடத்தலக்குப் பயன்படுத்தியவர்கள் யார் என்பதை நாடறியும்!இடைத்தேர்தலில் தி.மு.க.வைச் சந்திக்க முடியாது என்றால், ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்டது ஏன் என்ற கேள்வி எழாதா?விக்கிரவாண்டி வாக்காளர்களுக்கு அ.தி.மு.க. கொடுக்கப்போகும் அறிக்கை என்ன?பி.ஜே.பி. – பா.ம.க. கூட்டணி சார்பில், பா.ம.க. போட்டியிடுகிறது; இந்தக் கட்சிகளோடு கூட்டணியில்லை என்று ஆகிவிட்ட பிறகு, அத்தொகுதி வாக்காளர்களுக்கும், அ.தி.மு.க.வினருக்கும் அக்கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதைத் தெரிவிக்கவேண்டாமா? வாக்காளர்களே, தேர்தலைப் புறக்கணியுங்கள் என்று சொல்லப் போகிறார்களா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : அதிமுகவின் புறக்கணிப்பு மறைமுகமாக பாஜகவை ஆதரிக்கவே -  கி.வீரமணி !

பி.ஜே.பி.,க்கு மறைமுக ஆதரவா?

அ.தி.மு.க. இடைத்தேர்தலைப் புறக்கணித்திருப்பது – பல அய்யப்பாடுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.நடந்து முடிந்த 18 ஆவது மக்களவைத் தேர்தலில்கூட பி.ஜே.பி.யோடு அ.தி.மு.க. கூட்டணியை முறித்துக் கொண்டிருந்தாலும், தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியை விமர்சிக்கவில்லை. இதனை தி.மு.க. உள்ளிட்ட எதிர் அணியினரும் தேர்தல் நேரத்திலேயே சுட்டிக்காட்டி, விமர்சனம் செய்தனர்; தொலைக்காட்சிகளின் விவாதங்களிலும் இந்தக் கருத்து விளாசப்பட்டது.

மறுபடியும் பி.ஜே.பி.யோடுகூட்டு சேர முன்னோட்டமா?

மறைமுகமாக பி.ஜே.பி., – பா.ம.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்கும் நிலைப்பாட்டை அ.தி.மு.க. எடுக்கும் என்று வாக்காளர்கள் கருதுவதைத் தவிர்க்க முடியாது.நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி. கூட்டணியும், அ.தி.மு.க. கூட்டணியும் பெரும் தோல்வியைச் சந்தித்த நிலையில், எப்படியாவது ஓடும் பி.ஜே.பி. கூட்டணி ரயிலில் தொற்றிக்கொண்டு பயணம் செய்யலாம் என்ற முடிவுக்கு அ.தி.மு.க. வந்துவிட்டதாகவே கருதுவதற்கு அழுத்தமான நியாயங்கள் உண்டு.பி.ஜே.பி.யோடு அ.தி.மு.க. மீண்டும் கூட்டணி வைத்தால், மகாராட்டிரத்தில் சிவசேனாவுக்கு ஏற்பட்ட கதிதான்!மீண்டும் பி.ஜே.பி.யோடு அ.தி.மு.க. கூட்டணி என்றால், மகாராட்டிரத்தில் சிவசேனாவுக்கு ஏற்பட்ட கதிதான் அ.தி.மு.க.வுக்கு ஏற்படும் என்பதை இன்றே எழுதி வைத்துக்கொண்டு விடலாம்.எந்தக் கட்சிகளோடும் கூட்டணி வைத்துக்கொண்டு தி.மு.க.வை எதிர்த்தாலும், வெல்லப்போவது தி.மு.க. வேட்பாளர் என்பது கல்லின்மேல் எழுத்தாகும்.

மூவாண்டு தி.மு.க. ஆட்சியின் சாதனைகள்!

சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மூவாண்டு தி.மு.க. ஆட்சி என்பது மக்கள் வளர்ச்சித் திட்டத்துக்கான ‘திராவிட மாடல்‘ ஆட்சியாகும்.மகளிருக்கான மேம்பாட்டுத் திட்டங்கள், பெண்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றிருக்கிறது.கல்வியில் மிகப்பெரும் பாய்ச்சல்! காலை சிற்றுண்டித் திட்டம் மிகப்பெரிய புரட்சியாகும். மற்ற மாநில அரசுகளும் பின்பற்ற முடிவு செய்து இருப்பதிலிருந்து ‘திராவிட மாடல்‘ அரசின் அருமையும், பெருமையும், வழிகாட்டும் தன்மையும் நன்றாகவே புரியும்.பி.ஜே.பி. கூட்டணியில் சேர்ந்து மக்களைவைத் தேர்தலில் போட்டியிட்ட பா.ம.க. கடும் தோல்வியைச் சந்தித்தது. தேர்தல் கட்சி அங்கீகாரமும் பறிபோனதுதான் மிச்சம்.

பா.ம.க. பாடம் பெறும்!

வெகுமக்கள் வெறுப்பை மலையளவு சம்பாதித்து வைத்துள்ள ஒன்றிய பி.ஜே.பி. அரசு ஓடத்தில் பயணித்த பா.ம.க. பட்டும் பாடம் கற்கவில்லை என்பது பரிதாபமே!சமூகநீதியில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்னவென்று தெரியாதா? ‘நீட்‘டைத் திணிப்பதன் பின்னணியைப் பா.ம.க. அறியமாட்டாதா? இடபுள்யூஎஸ். திட்டம் என்பது யாரைக் கொழுக்க வைக்க என்ற அரிச்சுவடி பாடம் பா.ம.க.வுக்குத் தெரிந்த ஒன்றுதானே!

பா.ம.க.வின் எந்தக் கொள்கையோடுபி.ஜே.பி. ஒத்துப் போகிறது? ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தும் பா.ம.க. அதற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்துத் தேர்தலில் போட்டியிட்டால், பா.ம.க.மீது தமிழ்நாட்டு மக்களின் நம்பகத்தன்மை எப்படி இருக்கும்?தந்தை பெரியாரின் சமூகநீதி மண் – பா.ம.க.வின் இந்த நிலைப்பாட்டை ஜீரணித்துக் கொள்ளுமா?‘‘கரடி என்று தெரியாமல் கம்பளிப் போர்வை என்று கட்டி அணைத்தவரின்‘‘ கதிக்குத்தானே பா.ம.க.வும் ஆளாகும். பா.ம.க.வை வெகுமக்கள் புறக்கணிப்பார்கள் என்பதில் அய்யமில்லை!

பா.ம.க. கூறி வரும் எந்தக் கொள்கைக்கும் விரோதமான பி.ஜே.பி.யோடு கூட்டு வைத்துத் தேர்தலில் போட்டியிட்டால், தமிழர்கள் முற்றிலுமாக பா.ம.க.வை நிராகரிப்பார்கள் என்பது சுவர் எழுத்தே!

ஊழலைப்பற்றி எல்லாம் பேச முடியாது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஊழல்பற்றி சி.ஏ.ஜி. அறிக்கை என்ன கூறுகிறது? 7.5 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று கூறவில்லையா? தி.மு.க.வை எதிர்த்து நிற்கும் பா.ம.க.வின் எந்தப் பிரச்சாரமும் எடுபடப் போவதில்லை.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : அதிமுகவின் புறக்கணிப்பு மறைமுகமாக பாஜகவை ஆதரிக்கவே -  கி.வீரமணி !

இந்திய அளவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உயர்ந்து நிற்கும் பிம்பம்!

சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு – மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிம்பம் இன்றைக்கு இந்தியா முழுமையும் செம்மாந்து நிற்கிறது. இந்தியா கூட்டணி என்ற கட்டமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்கிறார்.தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க. ஆட்சி நாளும் நாளும் வளர்ச்சித் திட்டங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.இந்த நிலையில், தி.மு.க.வை எதிர்த்து வெற்றி பெறுவது என்பது முயற்கொம்பே!‘‘மக்கள் நல அரசு‘‘ (Welfare State) என்பதற்கு இலக்கணமாகத் திகழும் தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை எடை போட்டுப் பார்த்து மிகப்பெரிய வெற்றியை விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெகுமக்கள் தி.மு.க.வுக்கு அளிப்பார்கள் என்பதில் எள்ளளவும் அய்யப்பாட்டிற்கு இடமில்லை.

சமூகநீதிதான் எங்கள் உயிர்மூச்சு என்று தொடக்கத்தில் சொன்னவர்கள்!

பெரியாரையும், காரல்மார்க்சையும் படம் போட்டு ‘‘அனைவருக்குமான சமூகநீதிதான் எங்கள் உயிர்மூச்சு‘‘ என்று தொடக்கத்தில் கூறி, மக்களிடையே அறிமுகமான பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அல்ல; பெயரளவுக்கு அப்படியிருந்தாலும், அது பா.ஜ.க.வின் மாயக்குதிரை – ஜாதிவாரிக் கணக்கெடுப்பை பிரதமர் மோடியிடம் வற்புறுத்தி பெற முடியாத நிலையில் உள்ள நிதிஷ்குமாரின் கூட்டாளியான பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் உள்ள உருவம்மாறி அங்கே உலா வரும் பா.ஜ.க.

தி.மு.க. வேட்பாளர் வெற்றிமூலமே சமூகநீதியைக் காப்பாற்ற முடியும்!

அ.தி.மு.க., விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணித்ததாகச் சொல்லி, ‘வீரவசனம்‘ பேசுவது, பா.ஜ.க. அணிக்கு உதவிட, உத்தரவுக்குக் கீழ்படிந்த பா.ஜ.க.வின் மறைமுக – ''மாயக்குதிரைகளே'', ''மாயமான்களே'' என்பதை வாக்காளர்கள், குறிப்பாக மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக வாக்காளர்கள் உள்பட அனைவரும் உணர்ந்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் வெற்றிமூலமே சமூகநீதியைக் காப்பாற்ற முடியும்.மண்டல் நாயகன் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியை, மண்டல் பரிந்துரைக்காகவே கமண்டலைத் தூக்கிக் கவிழ்த்து மகிழ்ந்தவர்களுடன் கூட்டாளியாகி உள்ளவர்கள்தான் இந்த மாயக்குதிரைகள்.

பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ்.க்கான தமிழ்நாட்டின் புதிய முகவர்கள்!

விக்கிரவாண்டி தொகுதியில் நேர்மையும், உழைப்பும் கொண்ட எளிமை, இனிமையைக் கொண்ட கடலூர் ஏ.கோவிந்தசாமி அவர்களை நிற்க வைத்து, பிரச்சாரம் செய்து வெற்றி பெற வைத்த இயக்கம்.

விழுப்புரம் தொகுதியில் மிக பிற்படுத்தப்பட்ட சமூகத்தவரான எளியவர், நகைச்சுவை நல்நாயகர் திருக்குறளாரை நிற்க வைத்து, சக்தி வாய்ந்த இராம்நாத் கோயங்காவையே தோற்கடிக்கப் பெரும் ஆதரவும், பிரச்சாரமும் செய்தவர்கள்தான் திராவிட இயக்கத்து கொள்கைச் சீலங்கள் என்பது பழைய அரசியல் வரலாறு!

அந்தப் பழைய வரலாற்றை இன்றைய பா.ஜ.க.விடம் கூட்டணி இணைந்துள்ள பா.ம.க. புரிந்துகொள்ளாதது வேதனையும், வெட்கமும் ஆகும்!மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு இட ஒதுக்கீ்ட்டினால் பெரிதும் பயன்பெற்றவர்கள் வன்னியர்கள்! கலைஞரின், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு இட ஒதுக்கீ்ட்டினால் பெரிதும் பயன்பெற்றவர்கள் வன்னியர்கள். மருத்துவம், பொறியியல் பட்டப் படிப்புகளில் ஏராளமானோர் இடம்பெற வாய்ப்பு ஏற்படுத்தியது – தி.மு.க.தானே தவிர, காவிகளோ அல்லது வேறு கபடதாரிகளோ அல்ல!

அதுமட்டுமா?போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த பா.ம.க. குடும்பங்களுக்கு, அரசின் உதவித்தொகை பெற்றுத்தந்த அரசியல் பெருந்தகை முதலமைச்சர் கலைஞர் என்பதை மறக்கலாமா?

ஆதரவுக்கரத்தை நீட்டுவோம் –வெற்றியை நிலைநாட்டுவோம்!

தி.மு.க. தலைவராகத் தேர்வு செய்யப்பட்டபோது ‘‘நான் புதிதாகப் பிறந்திருக்கிறேன்‘‘ என்றார் தளபதி மு.க.ஸ்டாலின் (21.8.2018). அது வெறும் அழகு வார்த்தையல்ல – அர்த்தமிக்க ஆழமான பொருளைக் கொண்ட பிரகடனம்! மேலும் மேலும் அவருக்கு ஆதரவுக் கரத்தைப் பலமாக நீட்ட நீட்ட, நாட்டு மக்கள் நற்பலனை அடைந்து கொண்டே இருப்பார்கள்.விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய திராவிடர் கழகத்தின் பங்களிப்பு சிறப்பானதாகவே இருக்கும். கழகத் தோழர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றுமாறு வலியுறுத்துகிறோம். தி.மு.க. வெற்றி என்பது வெறும் ஒரு கட்சியின் வெற்றியல்ல – நாட்டு மக்களின் நன்மைக்கான – வளர்ச்சிக்கான – உரிமைக்கான மக்களின் பொதுநலத்திற்கான வெற்றி என்ற வீர வரலாறு தொடரும்!

banner

Related Stories

Related Stories