அரசியல்

கெஜரிவால் நன்மதிப்பைச் சீர்குலைக்க - பிணம் தின்னும் வட இந்திய ஊடக தர்மங்கள் : சிலந்தி!

பத்திரிகா தர்மங்களும் பிணம் தின்னும் என்பதைத்தான், இன்றைய வட இந்திய ஊடகங்கள் நிரூபித்துக்கொண்டிருக்கின்றன.

கெஜரிவால் நன்மதிப்பைச் சீர்குலைக்க -  பிணம் தின்னும் வட இந்திய ஊடக தர்மங்கள் : சிலந்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிணம் தின்னும் ஊடக தர்மங்கள்

கடந்த இரண்டு மூன்று தினங்களாக வட இந்திய ஊடகங்களில் பலர் நடத்திடும் கூத்துக்கள் அலப்பறைகள், பொதுமக்களை மட்டுமல்ல; நேர்மையான ஊடகவியலாளர்களையும் வெட்கித் தலைகுனிய வைக்கிறது. ‘சீ… சீ... இப்படியும் ஒரு மானங்கெட்டபிழைப்பா?’ எனக் காறி உமிழ வைக்கும் நிலையில் சில ஊடகங்களின் போக்கு அமைந்துள்ளது!

இடைக்கால ஜாமீனில் வெளிவந்து தேர்தல் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வரும் டெல்லி முதலமைச்சர் கெஜரிவாலுக்கு டெல்லியில் எழுந்துள்ள பேராதரவு – அவர்மீது மக்களுக்கு, குறிப்பாக தாய்மார்களுக்கு ஏற்பட்டுள்ள அனுதாபம், பேரலைகளாக உருவாகி வருவதைப் பொறுக்க இயலாத மோடி, அமித்ஷா கூட்டம், தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்களை – கெஜரிவாலுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, கடந்த சில தினங்களாக அந்த ஊடகங்களும் தங்களால் எப்படி எல்லாம் முடியுமோ அப்படி எல்லாம் கெஜரிவாலுக்கு மக்களிடையே உள்ள நன்மதிப்பைச் சீர்குலைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

ஊடகதர்மம், பத்திரிகா தர்மம் போன்றவற்றை காற்றில் பறக்கவிட்டு அவைகள் வெளியிடும் செய்திகளில்பல இட்டுக்கட்டப்பட்டவை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அதனால் அந்த ஊடகங்கள் மேல் உள்ள மதிப்பு சரிந்து மண்மேடாகிக் கொண்டிருக்கிறது. அதுபற்றி எல்லாம் கவலைப்படாது, மோடியையும் அமித்ஷாவையும் குஷிப்படுத்த அவர்கள் கால் கழுவி சேவகம் செய்யும் பணியில் அந்த ஊடகங்கள் ஈடுபட்டுள்ளன. தங்கள் மனசாட்சியை பலி கொடுத்துவிட்டு பலர் பணிபுரிவதும் கண்கூடாகத் தெரிகிறது.

முதலமைச்சர் கெஜரிவாலின் இல்ல அலுவலகத்தில் – அவரது உதவியாளர் ஒருவர் தன்னைத் தாக்கிவிட்டதாக, கடந்த மே 13ந் தேதியன்று ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபை உறுப்பினரான சுவாதி மாலிவால் என்பவர் டெல்லியில் உள்ள ஒரு காவல் நிலையத்துக்கு வந்து கூறியதாகவும், ஆனால் அது குறித்து எந்தவிதப் புகாரும் அவர் போலீஸ் நிலையத்தில் தரவில்லை என்றும் கூறப்பட்டது.

மே 13 திங்கட்கிழமையன்று தெரிவிக்கப்பட்ட தகவல் குறித்து விசாரிக்க வியாழனன்று, அதாவது மே 16ந் தேதி, கெஜரிவாலின் உதவியாளருக்கு பெண்களுக்கான தேசிய கமிஷன் (NCW) ஒரு சம்மன் அனுப்பியது. இது தொடர்பான விசாரணைக்கு வெள்ளிக்கிழமை அந்த உதவியாளர் வரவேண்டும் என்று கூறியுள்ளது.

இந்த விவகாரத்தில், உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து எந்தவித தெளிவான தீர்க்கமான முடிவும் வராத நிலையில்தான் வட இந்தியாவின் முக்கிய ஊடகங்களாகக் கருதப்படக்கூடியசில, இந்த விவகாரத்தை கடந்த இரண்டு தினங்களாக ஊதிப் பெரிதாக்கி – டெல்லி முதலமைச்சர் கெஜரிவாலை இந்த விவகாரத்துக்குள் வலிந்து நுழைத்து, அவருக்கு எதிராக மக்களிடையே அவப்பெயர் உருவாக்கும் நோக்கோடு திரித்தும், இட்டுக்கட்டியும் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருகின்றன!

நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் கெஜரிவாலின் உதவியாளர் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அங்கே என்ன நடந்தது; ஏன் நடந்தது என்பது குறித்து தெளிவான விபரம் எதுவும் யாரிடமும் இல்லை. இந்த நிலையில், அந்தப் பெண் எம்.பி. தாக்கப்பட்டார் என்றால், ஏன் அவர் கெஜரிவால் அலுவலக வீட்டுக்குச் சென்றார்; அங்கே என்ன நடந்தது, அவர் தாக்கப்பட்டிருந்தால் தாக்கப்பட்டதற்கான காரணம் என்ன, என்பது போன்ற விபரங்களைக் கண்டறிந்து வெளியிட வேண்டிய ஊடகங்கள், ஒருதலைபட்சமாக இந்தச்செய்தியை வைத்து– முதலமைச்சர் கெஜரிவாலுக்கு அவப்பெயர் உருவாக்கும் நோக்கோடு, கடந்த இரண்டு மூன்று தினங்களாக, தங்களால் முடிந்த முயற்சிகளில் எல்லாம் ஈடுபட்டு வருகின்றன.

கடந்த திங்கள்கிழமை நடந்த சம்பவத்துக்கு அந்த நாடாளுமன்ற பெண் உறுப்பினர் மாலிவால், வியாழன் வரை எந்தப் புகாரும் காவல் நிலையத்தில் அளிக்கவில்லை! இருந்தும் நமது வட இந்தியாவின் முக்கிய ஊடகங்கள் சிலவற்றுக்குப்பொறுக்கவில்லை; “ஆகா… முதலமைச்சர் கெஜரிவால் அலுவலகத்தில் பெண்மணி தாக்கப்பட்டுள்ளார்” என, தாக்கியதாகக் கூறப்பட்டவரை விட்டு விட்டு, முதலமைச்சர் கெஜரிவாலை இந்த வழக்கில் இழுத்து, இணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இன்னும் ஒரு சில ஊடகங்கள் ஒருபடி மேலே போய், ‘முதலமைச்சர் கெஜரிவால் தூண்டுதல் பேரில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது’ என்று செய்திகளைப் பரப்பின! இன்னும் சில ஊடகங்கள், ‘மாலிவாலைக் காணவில்லை கடத்தப்பட்டு விட்டாரா?’ என்ற கேள்விக்குறியை எழுப்பின! இந்தச் செய்திகளில் போகப் போக, தாக்கியதாகக் கூறப்பட்ட கெஜரிவாலின் உதவியாளர் பெயர் மறைந்து, கெஜரிவாலின் பெயரே பெருமளவில் வரும் அளவில்– அவரை செய்தியின் ‘சந்து பொந்து’களில் நுழைந்து இழுத்து வந்து கொண்டிருந்தன அந்த ஊடகங்கள்!

எந்த நோக்கோடு, யாரைத் திருப்திப்படுத்த, யாருடைய தூண்டுதல் பேரில் இப்படிப்பட்ட, அப்பட்டமாக இட்டுக்கட்டப்பட்டு செய்திகள் வருகின்றன என்பதைத் தெளிவாக உணர்ந்திடும் வகையில், அடுக்கடுக்காய் உருவாக்கப்பட்டு இந்தச் செய்திகள் வெளிவருகின்றன என்பதை, அதனைப் பார்த்தவர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு, இத்தகைய ஊடகங்கள் நடத்திடும் அரசியல் விபச்சாரத்தைக் கண்டு முகம் சுளித்துக் கொண்டனர்.

ஒரு பெண் எம்.பி. தாக்கப்பட்டார் என்பது உண்மை எனில் அது கண்டனத்துக்குரியது என்பதில் யாருக்கும் எந்தவிதக் கருத்து வேறுபாடும் இருக்க இயலாது; அதே நேரத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு சம்பவத்துக்கு வலிந்து அரசியல் முடிச்சுப் போட்டு, அக்கப்போர் செய்திகளை அவிழ்த்து விடுவது ஏற்கக் கூடியதல்ல!

திங்கள்கிழமை நடந்ததாகக் கூறப்படும் செய்தி குறித்து, சம்பந்தப்பட்டவர் காவல் நிலையத்திலோ அல்லது ஊடகங்களுக்கோ நேரிடையாக எந்தப் புகாரும் அளித்திட முன்வந்திராத நிலையில், நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து யாருக்கும் எந்தவிதத் தெளிவான தகவலும் கிடைக்காத போதும், பொதுவாக சமுதாயப் பொறுப்புள்ள ஊடகங்கள், அதிலுள்ள உண்மைகளை வெளிக் கொணர முற்பட வேண்டும். அதை விடுத்து ‘கருப்பு வண்ணத்தில் வாந்தி எடுத்தான்’ – என்ற செய்தியை மெருகூட்ட நினைத்து, ‘கருப்பாய் காக்கை நிறத்தில் வாந்தி எடுத்தான்’ என்று தலைப்பிட, அந்தச் செய்தியை பரபரப்பாகத் தர வேண்டும் என்று ‘அவன் காக்கை… காக்­கை­யாக வாந்தி எடுத்­தான்’ – என்று கூறுவது போல, மூலச் செய்திககும் வெளியிடப்படும் செய்திக்கும் தொடர்பின்றி வெளியிடுவதால் அந்த ஊடகங்கள் மக்கள் மத்தியில் பெற்றிருந்த நம்பகத்தன்மை சிதைந்து சின்னா­ பின்ன மாவதை அவர்கள் உணர வேண்டும்!

இன்று நடந்ததாகக் கூறப்படும் ஒரு விரும்பத்தகாத நிகழ்வைப் பெரிதுபடுத்தி –அதிலே சம்பந்தமில்லாதவர்களை எல்லாம் நுழைத்து வேறு சிலரைத் திருப்திப்படுத்த நினைப்பது, ஊடக தர்மத்தை வெட்டிச் சாய்ப்பது என்பதை அவர்கள் உணர்ந்துதான் செயல்படுகிறார்களா?

கடந்த மூன்று தினங்களாக பூதாகரப்படுத்தப்படும் இந்தச் செய்திகளின் பின்னணியில் பி.ஜே.பி. இருப்பது கண்கூடாகத் தெரிகிறது; பி.ஜே.பி.யின் மிரட்டலுக்குப் பயந்து, அவதூறை கெஜரிவால் மீது பரப்பும் நோக்கோடு, இந்தச் செய்திகள் பரப்பப்படுகின்றன.

கெஜரிவால் நன்மதிப்பைச் சீர்குலைக்க -  பிணம் தின்னும் வட இந்திய ஊடக தர்மங்கள் : சிலந்தி!

நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படுபவர்கள் இருவர். ஒருவர் பெண் எம்.பி.– மற்றவர் கெஜரிவால் உதவியாளர்! ஆனால் அந்த ஊடகங்கள் எழுப்பியுள்ள கேள்விகளைப் பாருங்கள்:

•‘A.A.P. dodges and Shields’ ( “ஆம்ஆத்மி ஏமாற்றுகிறது;

பாதுகாக்கிறது.”)

•Mr.Kejeriwal, break your silence ( “திரு.கெஜரிவாலே; உமதுமவுனத்தைக் கலையுங்கள்.” )

•“Kejariwal ‘Saving’ Mali wal’s assaulter?”

( “கெஜரிவால், மாலிவாலைத் தாக்கியவரைப் பாதுகாக்கிறார்.”)

– இப்படி எண்ணற்ற கேள்விகள் -கெஜரிவாலுடன் இந்தச் சம்பவத்தை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஊடகங்களால் கேட்கப்பட்டு பரப்பப்படுகின்றன.

இப்படி கேள்விகளை எழுப்பி, மோடி – அமித்ஷா கூட்டத்தைத் திருப்திப்படுத்துவதில் யார் பணி சிறந்தது என்று காட்டிக்கொள்வதில் இந்த ஊடகங்கள் போட்டிபோட்டுச் செயல்படுவதை சராசரி அறிவு படைத்தவர்களாலும் வெளிப்படையாகப் புரிந்து கொள்ள முடியுமே!

பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணைப் பேட்டிகண்டு விவகாரத்தினைப் பெரிதுபடுத்த இயலாத நிலையில், பல வருடங்களுக்கு முன் சுவாதியிடமிருந்து பிரிந்து சென்றிருந்த அவரது முன்னாள் கணவரை, எங்கோ தேடிப் பிடித்து வந்து அந்த வட இந்திய ஊடகங்கள் எல்லாம் பேட்டி எடுத்துள்ளனர். அவரும் ஊடக வெளிச்சம் தன்மீது பாய்வதில் புளகாங் கிதப்பட்டு, தனது முன்னாள் மனைவிக்கு கொலை மிரட்டல் இருப்பதாகக் குற்றம் சாட்டி பேட்டி தந்துவிட்டார், இப்படி இரண்டு நாள் அந்த ஊடகங்கள், தோன்றியதை எல்லாம், தங்களது அறிவுக்கு எட்டியபடி எல்லாம், செய்திகளாக்கி கெஜரிவாலைச் சிறுமைப்படுத்த நினைத்து போட்டியிட்டு அவதூறுச் செய்திகளை பரப்பிய நிலையில், மூன்று நாட்கள் முடிந்தபின் டெல்லி போலிசார் சுவாதி மாலிவாலை அவரது இல்லத்தில் சந்தித்து, அவரிடம் புகார் மனு ஒன்றைப் பெற்றுள்ளனர்!

மூன்று நாட்களாக, எந்த ஊடகங்கள் சுவாதி மாலிவாலைக் காணவில்லை; அவர் கடத்தப்பட்டுள்ளார். சுவாதி மாலிவால் உயிருக்கு ஆபத்து என்று அவரது முன்னாள் கணவர் கதறுகிறார்; என்றெல்லாம் கதைகளைத் திரித்து வெளியிட்டனவோ, அந்த ஊடகங்களின் உண்மைச் சொரூபத்தை தோலுரித்த செய்தியாக இந்தச் செய்தி வெளிவந்தது!

“இந்த விவகாரத்தை அரசியலாக்காதீர்கள்” என சுவாதி கேட்டுக் கொண்டதாகவும் செய்திகள் கசிகின்றன!

சில செய்தி ஊடகங்களும், பி.ஜே.பி. யினரும் பூதாகரமாக்கிய செய்திகள் அனைத்தும் ‘புஸ்வாணமாகி’ விட்டன.

இப்படி, கெஜரிவாலுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் அவப்பெயர் உண்டாக்க செய்திகளை உச்சகட்டத் திரிப்புகளோடு வெளியிட்ட ஊடகங்கள், ‘அய்யகோ; பெண்ணினத்துக்குப் பெருத்த அவமானம் உருவாகி விட்டதே” என்று இன்று நீலிக்கண்ணீர் வடிப்போர் – பி.ஜே.பி. ஆளும் மணிப்பூரில் நிர்வாணக் கோலத்தில் பெண்கள் நடுத்தெருவில் இழுத்துச் சென்ற காட்சிகள் வெளிவந்தபோது, “மோடி ஏன் மவுனம் சாதித்தார்? அமித்ஷா ஏன் அங்கலாய்க்கவில்லை? பா.ஜ.க, ஆட்சியில் நடந்த கொடுமைக்கு ஏன் அந்த முதலமைச்சர் ராஜினாமா செய்யவில்லை? எங்கே ஒளிந்தார் நட்டா?” – போன்ற கேள்விகளை எழுப்பினரா?

சமீபத்தில் கருநாடகாவில் பெண்கள் பலருக்கு ஏற்பட்ட அவமானங்கள் குறித்தும், அப்படி அவமானத்துக்கு அவர்கள் ஆளாக்கப்பட காரணமானதாகக் கூறப்பட்ட கட்சியுடன் பி.ஜே.பி. கூட்டு வைக்கலாமா? மோடி ஏன் மவுனம் காக்கிறார்?”- என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்களா?

“பேயாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” என்றார் பாரதி; சாத்திர மட்டுமல்ல, தர்மங்களும் அதாவது ஊடக, பத்திரிகா தர்மங்களும் பிணம் தின்னும் என்பதைத்தான், இன்றைய வட இந்திய ஊடகங்கள் நிரூபித்துக்கொண்டிருக்கின்றன.

- சிலந்தி

banner

Related Stories

Related Stories