அரசியல்

”அந்திமத்தை நெருங்கிவிட்டது இந்திய இட்லரின் ஆட்சி” : முரசொலியில் சிலந்தி கட்டுரை!

புதுப்புது பொய்களைக் கட்டவிழ்த்து விடத் தொடங்கிவிட்டார் பிரதமர்!

”அந்திமத்தை நெருங்கிவிட்டது இந்திய இட்லரின் ஆட்சி” : முரசொலியில் சிலந்தி கட்டுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அந்திமத்தை நெருங்கும் மோடி அரசின் ஆட்டங்கள்; அட்டகாசங்கள்!

தோல்வி ஜன்னி கண்டு பிரதமர் மோடி துடித்துத் துவண்டு பிதற்றத் தொடங்கி விட்டார். தான் என்ன பேசுகிறோம்; தன் பேச்சின் தாக்கம் என்ன எதிர்வினைகளை ஆற்றிடும் என்பதை அறியாது, ‘தான் இந்த நாட்டின் பிரதமராக உள்ள நிலையில் இதனைப் பேசலாமா?’ – என்றுகூட சிந்திக்காது பேசுகிறார், எதிர்க்கட்சிகள் மீது, குறிப்பாக காங்கிரஸ் கட்சி மீது இல்லாததும் பொல்லாததுமாக குற்றச்சாட்டுகளைக் கூறி தனது உள்ளத்துக் கொதிநிலையை கொட்டித் தீர்க்கத் தொடங்கியுள்ளார்!

மோடி அவர்களின் சமீப காலப் பேச்சுக்கள் அத்தனையுமே அவர் தூக்கத்தைத் தொலைத்த நிலையில், ஆத்திரத்தின் உச்சத்துக்குச் சென்று கொட்டித் தீர்க்கும் அவதூறுகளாகவே அணிவகுக்கின்றன!

‘பொய்க்கு கால் நொண்டி… அதனால் நீண்ட தூரம் ஓட முடியாது’ – என்பது பழமொழி! தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய நாளிலிருந்து மோடி சொல்லத் தொடங்கிய பொய்கள்பல, நீண்ட தூரம் ஓட முடியாது முடங்கிய நிலையில், இப்போது புதுப்புது பொய்களைக் கட்டவிழ்த்து விடத் தொடங்கிவிட்டார் பிரதமர்!

ஒன்றுக்கு ஒன்று சளைக்காத பொய்களை, போகுமிடமெல்லாம், பேசும் கூட்டங்கள் அனைத்திலும் அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறார்!

பதவி அதனால் அனுபவித்து வந்த படாடோப வாழ்க்கை, பவிசு, இவைகள் பறிபோய்விடுமோ என்ற பதட்டம் அவரைப் பற்றிக் கொண்டுள்ள நிலையினை அவரது பேச்சுக்கள் வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டன.

ஒரு பிரதமர் நிலையில் இருந்து கொண்டு மோடி பேசும் இப்போதைய பேச்சுக்கள், நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் இருந்து அவரை விடுவித்து நாலாந்தரப் பேச்சாளர்கள் பட்டியலில் அவரைச் சேர்த்திட வேண்டிய அளவு நச்சுரையாகவே வெளிவருகின்றன.

‘Intelligence Bureau’ எனும் உளவுத்துறை, CBI எனும் மத்திய புலனாய்வுத்துறை, Enforcement Directorate- E.D எனும் அமலாக்கத்துறை போன்ற துறைகளை கையில் வைத்திருக்கும் ஒன்றிய அரசின் பிரதமர், “அம்பானி, அதானி போன்ற, முன்னணி தொழில் அதிபர்கள் வேன் நிறைய கருப்புப் பணத்தை அனுப்பி அதனைப் பெற்றவுடன் அவர்களைப் பற்றிப் பேசுவதை ராகுல் நிறுத்திவிட்டாரா?” – எனக் கேள்வி எழுப்பிப் பேசியது, அவர் தன்னிலை மறந்து தடுமாறத் தொடங்கிவிட்டதைக் காட்டவில்லையா?

முதலில் ஒரு பொய்யை அவிழ்த்து விடுகிறார். அது சிறிது தூரம் ஓடி முடங்கி விடுகிறது. பொய் முட ங்கினாலும் மோடி முடங்குவதில்லை. அடுத்த பொய், பின்னர் அதுவும் தடுமாற அடுத்த பொய்… என அவரது அடுக்கடுக்கான பொய்கள் முடங்கினாலும், கவலைப்படுவதில்லை! ‘எவர் எது சொன்னாலும் கவலையில்லை; என் கடன் பொய் சொல்லிக் கிடப்பதே’ என்பது போல மேடைதோறும் பொய் முழக்கம் எழுப்பிக் கொண்டிருக்கிறார்!

மக்களின் மறதியிலே தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் மோடி!

•15 லட்சம் ரூபாய் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் சேர்க்கும் அளவு வெளிநாடுகளில் தேங்கிக் கிடக்கும் கருப்புப் பணத்தை வெளிக் கொணருவேன்.

•ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வழங்குவோம்.

•பெட்ரோல், டீசல், சமையல் வாயு விலைகளைக் குறைப்போம்.

•விவசாய வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவோம் என்பன போன்று, ஆட்சிக்கு வருவதற்கு முன் தந்த ‘ஜும்லா’ (வார்த்தை உபயம்: அமித்ஷா) வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை; ஆட்சிக்கு வந்தபின் தந்த வாக்குறுதிகள் கதியும் அதோ கதிதான்.

வாக்குறுதிகளை வழங்கிய மோடி அவற்றைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, அவர் விமானத்தில் நாடு நாடாகப் பறந்து கொண்டிருந்தார்.

“மோடி ஆட்சிக் காலத்தில் அவர் வெளிநாடு பயணம் செய்யாத காலம், கொரோனா தொத்துநோய் உலகெங்கும் பரவிக் கிடந்த காலம்தான்” என்று, மோடி தனது ஆட்சிக்காலத்தில் பறந்த நாடுகள் ஆண்டுவாரியாகப் பட்டியலிடப்பட்டு சமூக வலைதளங்களில் இப்போதும் அவை பவனி வந்து கொண்டிருக்கின்றன!

கொரோனா காலத்தில் இந்தியாவிலிருந்து, மக்களைப் பைத்தியக்காரர்களாக்கிக் கொண்டிருந்தார். “கொரோனாவே போய்விடு” – ‘கோ கொரோனா’ என்று மக்களை கோஷமிடச் சொன்னார், வீடுகளில் விளக்கேற்றி மணி அடித்தும் தட்டுக்களைத் தட்டியும் சப்தமிடக் கூறினார்!மொத்த இந்தியாவையும் பைத்தியக்காரக் கூடாரமாக்கி ரசித்துக் கொண்டிருந்தார்!

இலட்சக்கணக்கில் உயிர்ப்பலி ஆகிக்கொண்டிக்கும் செய்திகளோடு மோடி நடத்திய இத்தகைய கூத்துக்களை மோடியின் சாதனையாக்கி பல ஊடகங்கள் மோடிக்கு ‘ஜால்ரா’ அடித்தன!

”அந்திமத்தை நெருங்கிவிட்டது இந்திய இட்லரின் ஆட்சி” : முரசொலியில் சிலந்தி கட்டுரை!

மோடியின் நிர்வாகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் சந்தித்தது சோதனைகளைத்தானே தவிர, குறிப்பிட்டுப் பட்டியலிடும் சாதனை என்று ஏதாவது உள்ளதா?

•வீழ்ந்த பொருளாதாரம்

•பயமுறுத்தப்படும் எல்லைகள்

•பயணற்ற திட்டங்கள்

• பாதாளத்துக்குப் போன பணமதிப்பு

• விஷம்போல ஏறிய விலைவாசிகள்

•வேலையில்லாத் திண்டாட்டம்

•அமைதியை இழந்த நாடு

•அச்சத்தில் சிறுபான்மையினர்

•தள்ளாடும் ஜனநாயகம்

•தடுமாறும் நீதித்துறை

•அல்லாடும் மக்கள்

– இவைகள்தானே 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் நாடு கண்ட முத்தாய்ப்பு (சோ)சாதனைகள்!

மோடி தனது தேர்தல் பிரச்சாரங்களில், ‘மக்கள் மனம் குளிர வைத்த தனது ஆட்சியின் சாதனைகள்’ என எதையாவது கூறியுள்ளாரா?

பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கருப்புப் பணம்; கள்ளப் பணம் ஒழிந்துவிடும்; எனக்கூறி நாட்டுமக்களை மாதக் கணக்கில் நடுத்தெருவில் அல்லாடவிட்டாரே; அந்த சாதனைகளைக் கூறினாரா?

ஜி.எஸ்டி. வரியை தாறுமாறாக விதித்து பல சிறுகுறு தொழில்களை முடக்கி பல தொழில்முனைவோர்களை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்தாரே, அந்தச் சாதனை குறித்துப் பேசி பெருமைப்பட்டுக் கொண்டாரா?

இந்தியாவின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் நிலையில் விரல்விட்டு எண்ணும் தனியார்களை உருவாக்கினாரே; அதுகுறித்துப் பேசி ஆனந்தம் கொண்டாரா?

2019 ஆம் ஆண்டு, சட்டப் பிரிவு 370ஐ நீக்கிய போது பிரதமர் மோடி தந்த வாக்குறுதிகளில் எதாவது ஒன்று நிறைவேறியுள்ளதா?

“ஐம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள், உலகின் மிகப் பெரிய சுற்றுலாத் தலமாக மாறும்” என்றாரே; மாறியுள்ளதா? அதற்கான அறிகுறியாவது தென்படுகிறதா?

“ஜம்மு காஷ்மீர் இனி யூனியன் டெரிடரியாக இருக்காது, விரைவில் உங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைக்கும்” என்றாரே, ஏறத்தாழ இந்த அறிவிப்பினைக்கூறி 5 ஆண்டுகள் நெருங்கிவிட்டன. ஏதாவது முன்னேற்றம் உண்டா?

இந்தச் சட்டப்பிரிவு நீக்கப்பட்டபின் நாட்டின் பிரதமரே முதன்முறையாக காஷ்மீருக்குள் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் சென்றபின் முதன் முறையாக 2024 ஆம் ஆண்டுதான் சென்றுள்ளார் (2019ல் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது.)

அடுத்து மோடியின் மிகப்பெரிய சாதனையாக தம்பட்டம் அடிக்கப்பட்ட ஒன்று, அயோத்தியில் எழும்பியுள்ள இராமர் கோவில் செயற்கரிய காரியத்தை மோடி செய்து முடித்ததுபோல மோடி மீது விளம்பர வெளிச்சம் பாய்ச்சப்பட்டது !

ராமர் சிலை, கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படுவதற்கு முன் மோடி நடத்திய நாடகங்கள், அதற்கு ஊடகங்கள் தந்த விளம்பரங்கள், அப்பப்பா… இராம பக்தர்களே வெறுப்படையும் நிலையைத்தானே உருவாக்கியது. அந்தச் சிலை பிரதிஷ்டைக்கு முன் மோடி அடித்த கூத்துகளை எண்ணிப் பாருங்கள்!

சங்கராச்சாரியார்களே சிலையை மோடி பிரதிஷ்டை செய்ய எதிர்த்த நிலையில், மோடி அளவுக்கு மீறிய தனது நடிப்பாற்றலைக் காட்டிக் கொண்டிருந்ததைக் கண்டு, வெளியே கூற முடியாது பல இராம பக்தர்கள் தங்கள் பற்களை நரநரவென்று கடித்துக் கொண்டிருந்தனரே!

ஒரு சிலை தெய்வீகத் தன்மை பெறவேண்டுமானால் அதற்கு ஆகமங்கள் கூறிடும் விதிகள் முழுதுமாக கடைப்பிடிக்கப்படாமல் அவசரக் கோலத்தில் அந்தச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது; ராமருக்கு விழாவா; மோடிக்கு விழாவா என்று ஐயப்படும் வகையில் மோடியின் அளப்பறைகள் சொல்ல முடியாத அளவு காட்சியளித்தது... அந்த ராமர் கோயில் எழுப்பப்பட்ட நில ஆர்ஜிதமே மாபெரும் ஊழல் சரித்திரமாக எழுதப்பட்டது!

‘ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா’ அறக்கட்டளையின் மீது பலகோடி ரூபாய் நில பேர ஊழல் புகார்கள் எழுந்தனவே, அதாவது பா.ஜ.க.வினர் ரூபாய் இரண்டு கோடிக்கு வாங்கிய நிலத்தை அடுத்த சில நிமிடங்களுக்குள் ரூபாய் 18.5 கோடிக்கு அறக்கட்டளை வாங்கியது. இதுபோன்ற பல ஊழல் புகார்கள் – “இந்த ஊழல் புகார்கள் குறித்து, மோடி தலையிட்டு விளக்கம் அளிக்க வேண்டும்” என சுமார் 150 சாதுக்கள் ஒரு ஹனுமார் கோவில் மடத்தில் மஹந்த்கியான்தாஸ் என்பவர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கேட்கப்பட்டதே; அதற்கு அப்போது மோடி கேளாக்காதினராய் இருந்து, பி.ஜே.பி.யினர் இராமர் கோவில் பெயரில் நடத்திய ஊழலை அங்கீகரித்த நிலையில் இருந்ததை மறுக்க முடியுமா?

மோடி தனது அரசின் மகத்தான சாதனையாக தெரிவிக்கும் ராமர் கோவில்கூட, ஊழலின் அடித்தளத்தில் எழுப்பப்பட்டதுதானே!மோடி ஆட்சியின்சாதனைகளாகக் கூறப்பட்டவைகளின் கதிகள் இவை!

அடுத்து ஊழலற்ற ஆட்சி தருவோம் என்ற வாக்குறுதி:

ரஃபேல் விமானத்தில் ஏறி, தேர்தல் பத்திர முறைகேடுகள் வரை ஒருமிகப் பெரிய ஊழல் சுற்றுலாவையே நடத்திக்காட்டிய உத்தமர்கள், அவை குறித்து வாயைத் திறந்தார்களா?

‘சிறந்த நிர்வாகம் தருவோம்’ எனக்கூறிய மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் எப்படிப்பட்ட நிர்வாகம் நடந்தது என்பதற்கு, அரசின் சி.ஏ.ஜி. அறிக்கையே சான்றல்லவா!

மோடி அரசின் பல்வேறு துறைகளில் நடந்துள்ள முறைகேடுகளால் சுமார் ஏழரை லட்சம் கோடி மக்களது வரிப்பணம் சுரண்டப்பட்டுள்ளதை சி.ஏ.ஜி. அறிக்கை புட்டு புட்டு வைத்ததே; அதுகுறித்து ஒரு விசாரணைகூட வைத்திடாத ‘யோக்யர்’ இப்போது, மீண்டும், ‘‘மோடி கி கியாரண்டி’ – ‘மோடியின் வாக்குறுதிகள்’ என்று கூறிக்கொண்டு திரிகிறாரே;

லஞ்சலாவண்ய அரசு,

ஊழல் அரசு,

ஊதாரித்தன அரசு,

வாய்ச்சவடால் அரசு,

மோசடி அரசு

– இப்படி மோடியின் அரசை பலவகைப் பெயர்களில் பட்டியலிட்டு அழைக்கலாம்;

– இந்த லட்சணத்தில்பொய் வாக்குறுதிகளை அடுக்கடுக்காகக் கூறி ஏமாற்றி மக்கள் விரோத அரசை பத்தாண்டு காலம் நடத்திவிட்டு, நாட்டை படுபாதாளம் நோக்கி கொண்டு சென்றுவிட்டு – இப்போது மீண்டும் புதிய வாக்குறுதிகளோடு புறப்பட்டுவிட்ட மோடியை நாடு அடையாளம் கண்டுவிட்டது! அதனை அவரும் அவரது சகாக்களும் உணரத் தொடங்கிவிட்டனர்.

‘அடுத்த பிரதமரும் தானே’ என்ற இறுமாப்பில் நாளொரு கனவில் மிதந்தவர்; ‘தன்னை வெற்றி காண்பவரை கண்ணுக்கு எட்டிய தூரம் காணவில்லை’ என்ற இறுமாப்பில் இருந்தவர் இன்று, கண்ணீர்விடத் தொடங்கிவிட்டார். ‘இந்தியா’ கூட்டணியில் யார் பிரதமர் எனக் கேட்கத் தொடங்கிவிட்டனர்!அவர்களின் கோட்டைகள் இடிபடத் தொடங்கிவிட்டன!

தங்களை ஏமாற்றி, ஏற்றம் கொண்டு, பின்னர் எல்லாவழிகளிலும் வாட்டி வதைத்த பி.ஜே.பி. அரசுக்கு இறுதி அத்யாயம் எழுத மக்கள் தயாராகிவிட்டனர்.

இந்திய இட்லரின் ஆட்சி, அவருக்குத் துணை நின்ற, இடி அமீனின் ஆட்டங்கள்; அட்டகாசங்கள் அனைத்தும் அந்திமத்தை நெருங்குகின்றன

‘‘உ.பி.யில் இருந்து இந்தியா கூட்டணியின் புயல் வீசுகிறது. ஜுன் 4 அன்று மோடி இந்தியாவின் பிரதமராக இருக்கமாட்டார்; இதனை எழுத்துபூர்வ உத்தரவாதமாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்’’ என காங்கிரசின் இளம்தலைவர் ராகுலின் நம்பிக்கை நிறைந்த பேச்சு, சமூக ஊடகங்களில் வடமாநில இளைஞர்கள் மோடி ஆட்சிக்கு எதிராக எழுப்பி வருகின்ற நெருப்புப் பிரச்சாரங்கள் போன்றவை இவற்றை உறுதிப்படுத்துகின்றன!

“கடந்த இரண்டு தேர்தல்களில் காணப்பட்ட மோடி அலை இப்போது காணப்படவில்லை” – என்று ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஏட்டின் செய்திக் கட்டுரையும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் மோடி ஆதரவு ஊடகங்கள் மோடிக்கு முட்டுக் கொடுக்க, உண்மை நிலையை மறைத்து ஓட்டை விழுந்த பலூனை ஊதிப் பெரிதாக்க நினைத்து, எத்தனை காற்று அடித்தாலும் அது பலன் தராது என்பது, தெள்ளத் தெளிவாகத் தெரியத் தொடங்கிவிட்டது.

‘‘புயலுக்கும், நெருப்புக்கும் திரைபோடவோ?

- சிலந்தி

banner

Related Stories

Related Stories