அரசியல்

பிரதமருக்கு எதிரான நடவடிக்கை எடுக்க யாருக்கு தான் உரிமை உண்டு!?

மக்கள், செய்தியாளர்கள், அரசியல்வாதிகள், ஒன்றிய விசாரணை அமைப்புகள், தேர்தல் ஆணையம் என யாரும் எதிர்த்து எதுவும் செய்ய இயலாதவாறு, தன்னை சர்வாதிகாரியாக உயர்த்திக் கொண்ட மோடி.

பிரதமருக்கு எதிரான நடவடிக்கை எடுக்க யாருக்கு தான் உரிமை உண்டு!?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

2014 முதல், இந்திய பிரதமராக இருக்கும் மோடி, தனக்கெதிராக யாரும் எந்நடவடிக்கையும் எடுக்க முடியாத அளவிற்கு சட்டத்தில் அனைத்து மாற்றங்களையும் செய்து வருகிறார்.

2002-ல் குஜராத் முதல்வராக இருந்த மோடி, சர்ச்சைக்குரிய வகையில் பேட்டியளித்ததை, மக்கள் நினைவுகூற வேண்டும் என்ற நோக்கில், ஒரு இணையத் தொடரை வெளியிட்ட BBC-ன் பதிவு நீக்கப்பட்டதில் தொடங்கி,

மோடி என்ன செய்தாலும், அதனை தாங்கிப் பிடிக்க ‘மோடியின் குடும்பம்’ (Modi ka Parivar) இருக்கிறது என்ற சூழல், ராஜஸ்தான் பிரச்சாரக் கூட்டத்தில் மோடியின் வெறுப்பு பேச்சு வரை தொடர்ந்து வருகிறது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், ராஜஸ்தான் பிரச்சாரத்தில், “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மக்களின் சொத்துகள் அதிக குழந்தைகளையுடைய இஸ்லாமியர்களின் வசம் செல்லும்” என இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி பேசினார் மோடி.

அதன் பிறகு அடுத்த ஓரிரு நாளில், இஸ்லாமியர்களுக்கு தரப்படும் இடஒதுக்கீடு குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

எனினும், அதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “பிரதமர் மோடி எவ்வித மதப் பிளவுகளையும் உண்டாக்கவில்லை” என்றும்,

உள்துறை அமைச்சர் அமித் ஷா, “மோடியின் அரசு என்றைக்கும் இடஒதுக்கீடு திட்டத்திற்கு எதிராக செயல்படாது” என்றும், சமாளிப்புகளை முன்வைத்தனர்.

இதனிடையில், மோடியின் வெறுக்கத்தக்க பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுமார் 20,000 பொது மக்கள், இந்தியா கூட்டணியின் தலைமை கட்சிகள், முன்னாள் IAS,IPS உள்ளிட்ட அதிகாரிகள் என பலரும் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், மோடிக்கு எதிராக இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பிரதமருக்கு எதிரான நடவடிக்கை எடுக்க யாருக்கு தான் உரிமை உண்டு!?

தேசிய அளவில் எழுந்த எதிர்ப்புகள் மட்டுமல்லாது, உலகளாவிய ஊடகங்களும் மோடியின் வெறுக்கத்தக்க பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறான எதிர்ப்புகள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டு இருக்கும் நிலையிலும், நடவடிக்கை எடுக்கப்படாத நாட்டில், ஜனநாயகம் எவ்வாறு உயிர்ப்புடன் இருக்கிறது என்ற கேள்வியும் எழத்தொடங்கியுள்ளன.

இவை ஒருபுறம் இருக்க, கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில், மோடியை எதிர்த்தால் சிறை என்ற மந்திரமும் ஓங்கி முழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 16 தலைமை செய்தியாளர்கள் கைது, 2 முதலமைச்சர்கள் கைது, எண்ணற்ற அரசியல் தலைவர்கள் கைது ஆகியவை தலைப்பு செய்திகளாக்கப்பட்டுள்ளன.

இது குறித்து சிறைபட்டிருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “மது கொள்கை ஊழலில் நான் ஈடுபடாத நிலையிலும், எனக்கு எதிரான ஆதாரங்கள் சமர்பிக்கப்படாத நிலையிலும், பா.ஜ.க.விற்கு அச்சுறுத்தலாக இருக்கும் காரணத்திற்காக மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளேன்.

ஏதோ 4 பேர் சாட்சி சொன்னார்கள் என்று முதலமைச்சரை கைது செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறது என்றால், முதலமைச்சர் சாட்சி கூறினால், பிரதமர் கைது செய்யப்படுவாரா?” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு இன்று வரை அமைதியே விடையாக அமைந்துள்ளது.

இவ்வாறு, ஆட்சியை கையில் வைத்துக்கொண்டு நாங்கள் யாரை வேண்டுமானாலும் தண்டிப்போம், ஆனால் எங்களை யாராலும் எதுவும் செய்யமுடியாது என்ற மிதப்பலில் பா.ஜ.க தலைவர்கள் ஆட்சிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த 10 ஆண்டுகள் வெறும் ட்ரெய்லர் தான், இனி தான் பா.ஜ.க.வின் உண்மை நடவடிக்கைகள் வெளிப்படும் என்று மோடி தெரிவித்து வருவது, கூடுதல் அச்சமூட்டும் செய்தியாகவே அமைந்துள்ளது.

எனினும், பாசிச பா.ஜ.க.வின் சர்வாதிகாரத்தை புதைமணலுக்கு தள்ள, எதிர்க்கட்சிகளும், மாநில அரசுகளும் ஒன்றிணைந்து, மக்களவை தேர்தலை எதிர்கொண்டு வருகின்றனர்.

இது, சர்வாதிகாரத்தில் அடிபட்டிருக்கும் பாமர மக்களுக்கு உந்துத்தலாகவும், நம்பிக்கையை ஊட்டும் வகையிலும் அமைந்துள்ளது.

banner

Related Stories

Related Stories