பீகாரில் முக்கிய கட்சிகளில் ஒன்று லோக் ஜனசக்தி கட்சி. அக்கட்சியின் நிறுவனரான ராம் விலாஸ் பாஸ்வானின் மறைவுக்கு பின்னர் கட்சி யாருக்கு சொந்தம் என்பதில் ராம் விலாஸ் பாஸ்வானின் மகனான சிராக் பாஸ்வானுக்கும், ராம் விலாஸ் பாஸ்வானின் இளைய சகோதரர் பசுபதி குமார் பராஸ் ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த பிளவுக்கு லோக் ஜனசக்தி கட்சியுடன் அப்போது கூட்டணியில் இருந்த பாஜக முக்கிய காரணமாக இருந்தாக விமர்சிக்கப்பட்டது. இதில் பசுபதி குமார் பராஸ்க்கு பாஜக ஒன்றிய அமைச்சர் பதவியை வழங்கியது. எனினும் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் சிராக் பாஸ்வான் வசம் இருந்ததால் கட்சி அவரின் கட்டுப்பாட்டில் வந்தது. அதனைத் தொடர்ந்து பசுபதி குமார் பராஸ் ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி என்ற கட்சியை உருவாக்கி தொடர்ந்து ஒன்றிய அமைச்சராக இருந்து வந்தார்.
இந்த நிலையில், தற்போது பீகாரில் 17 தொகுதிகளில் பா.ஜ.கவும், 16 தொகுதிகளில் நிதிஷ்குமார் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடுகிறது. அதேபோல் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 5 இடமும் மற்ற 2 கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் ஒதுக்கப்பட்டு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது.
இதில் ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சிக்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த பசுபதி குமார் பராஸ், பாஜக தனக்கு துரோகம் இழைத்ததாக கூறி ஒன்றிய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியின் 22 முக்கிய தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
5 தொகுதிகளுக்காக லோக் ஜனசக்தி கட்சியை அக்கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் பாஜகவுக்கு விற்றுவிட்டதாக குற்றம்சாட்டி, முன்னாள் அமைச்சர் ரேணு குஷ்வாஹா, கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ராஜேஷ் டாங்கி உள்ளிட்ட 22 தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளனர். மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறியுள்ளனர். இது பீகாரில் பாஜக கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.