அரசியல்

மாற்றத்திற்கான மாநிலமாக மாறுமா ‘குஜராத்’ : முடிவுக்கு வரும் பா.ஜ.க.வின் பிம்ப அரசியல்!

கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, அடிப்படை கட்டமைப்பு என எவற்றிற்கும் ஒதுக்கப்படாத நிதியை, ஆசியாவின் உயர்ந்த சிலைக்கு ஒதுக்கிய அரசு என்ற பெருமை, குஜராத் பா.ஜ.க அரசிற்கு உண்டு!

மாற்றத்திற்கான மாநிலமாக மாறுமா ‘குஜராத்’ : முடிவுக்கு வரும் பா.ஜ.க.வின் பிம்ப அரசியல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, அடிப்படை கட்டமைப்பு என இவை எவற்றிற்கும் ஒதுக்காத நிதியை ஒரு சிலைக்கு ஒதுக்கிய மாடல்.?

பழைமை வாய்ந்த மோர்பி பாலத்தை பராமரிக்க, கடிகாரம் தயாரிக்கும் குழுமத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டதால், ஏற்பட்ட விபத்தில் 141- பேரை கொன்ற மாடல்?

கொடுமை வாய்ந்த கொரோனா நோய் தொற்றை, இந்தியாவில் பரவவிட்ட மாடல்?

மக்களின் தேவைகளை நிறைவேற்றாமல், தேர்தல் ஆதாயத்திற்காக பல கலவரங்களை ஏற்படுத்தி குளிர் காயும் மாடல்?

பில்கிஸ் பானுக்களால் அம்பலப்படும் மாடல்.?

இப்படி மனித குலத்திற்கு எதிரான மாடலை தான், மோடியும் அவரது அரசும், வளர்ச்சியின் மாடல் என பரப்பி வருகின்றனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில், மேற் கூறிய சிக்கல்கள் அனைத்தும் குஜராத்தில் நடந்தவையே.

தேசத் தந்தை காந்தி பிறந்த மாநிலமாக குஜராத் இருந்தாலும், காந்தியை கொன்றவர்களே 29 ஆண்டுகளாக ஆட்சியாற்றி வருகின்றனர்.

மக்களை ஒரு சிறு வளர்ச்சி பாதைக்கு கூட எடுத்து செல்லாத நிலையிலும், தங்களின் பிளவுவாத, தனியார்மய கொள்கைகளால் முதலாளிகளின் ஆதரவோடு தொடர்ந்து பா.ஜ.க வெற்றி பெற்று வருகிறது.

மாற்றத்திற்கான மாநிலமாக மாறுமா ‘குஜராத்’ : முடிவுக்கு வரும் பா.ஜ.க.வின் பிம்ப அரசியல்!

இவ்வாறான உத்தியுடன், குஜராத் மாநிலத்தை, 1995 ஆம் ஆண்டிலிருந்து ஆட்சி செய்து வருகிற பா.ஜ.க, அம்மாநிலத்தில் ஏற்படுத்திய வளர்ச்சிகள் என்னென்ன என்றால், சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை, சூரத் வைர வர்த்தக மையம் போன்ற கண்ணைக்கவரும் காட்சிகள் தான்.

இவையெல்லாம் இங்கு நிறுவப்பட்டதற்கு காரணம், மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவோ, மக்களின் தேவையை தீர்க்கவோ அல்ல. உலகின் பெரிய வர்த்தக மையம் இது. ஆசியாவில் பெரிய சிலை இது என காட்சிப்படுத்துவதற்கு தான்.

இதனை, வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது, அண்மையில் நடந்த குஜராத் சட்டமன்ற கூட்டத்தொடர். தொடரின் கேள்வி நேரத்தில், எதிர்கட்சிகளால் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு, திக்குமுக்காடி வேறு வழியற்று, பல அதிர்ச்சி தகவல்களை விடையாக அளித்திருக்கிறது குஜராத் அரசு.

குஜராத்தில் கடந்த 29 ஆண்டுகளாக, அதாவது பா.ஜ.க. ஆட்சியில் இருந்து வருகிற இந்த 29 ஆண்டுகளில், ஒரு அரசு மருத்துவமனை கூட புதிதாக கட்டப்படவில்லை; இந்திய அளவில் அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலமும் இது தான்; வேலைவாய்ப்பு விழுக்காடு கணிசமாக குறைந்துள்ள மாநிலமும் குஜராத் தான்.

இவை தவிர்த்து, சமத்துவமின்மையிலும் குஜராத்தின் நிலை உச்சத்தில் தான் உள்ளது. கல்வி விழுக்காட்டில், ஆண்களுக்கும், பெண்களுக்கும் உள்ள வேறுபாடு சுமார் 17% ஆக இருக்கும் நிலையில், பெண்ணடிமை எண்ணமும் குஜராத்தில் ஆழமாக பதிந்துவிட்டது.

பெண்கள் அடிமைப்படுத்தப்படுவது போல, சிறுபான்மையினர்களை கொடுமைப்படுத்துவதிலும் குஜராத் அதற்குரிய அவக்கேடான நிலையில் தான் உள்ளது.

அதற்கு தகுந்த எடுத்துக்காட்டாக, 2002 குஜராத் கலவரத்தை கூறலாம். அக்கலவரத்தில், இஸ்லாமிய மக்கள், இந்து சமூகத்தினரால் அடித்து கொல்லப்பட்டதை விட, அம்மாநில காவல்துறையால் கொன்று குவிக்கப்பட்டதே அதிகம்.

மாற்றத்திற்கான மாநிலமாக மாறுமா ‘குஜராத்’ : முடிவுக்கு வரும் பா.ஜ.க.வின் பிம்ப அரசியல்!

இதற்கு அப்போது மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கும் பங்குண்டு என்பதனை தெளிவுபடுத்திய BBC-ன் தொடரை, இந்தியாவிலிருந்தே தடைபடுத்தியது ஒன்றிய பா.ஜ.க அரசு.

எனினும், இது கடந்த காலத்தில் நிகழ்ந்தது தானே, அனைத்தும் இவ்வேளையில் மாறியிருக்கும் என்ற எண்ணம் எட்டிப்பார்க்க கூட இயலாத அளவிற்கு, கொல்லப்பட்ட இஸ்லாமிய மக்களின் குடும்பத்தினர் இன்றளவும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இது குறித்து, கலவரத்தில் உயிர்தப்பிய சயத் நூர் பனோ, “22 ஆண்டுகள் ஆகியிருக்கலாம். ஆனால், இன்றளவும் இந்து ஆதிக்கம் நிறைந்த பகுதியில் கால் வைக்க மனம் பதறுகிறது” என தெரிவித்துள்ளார்.

இவ்வாறான வரலாறு கொண்ட குஜராத்தில், ஆளும் பொதுப்பிரிவு மக்களை விட, SC,ST மற்றும் OBC மக்களே அதிகம் வாழ்கின்றனர் என கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அதனால், அங்கு அதிகாரப்பூர்வ சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு, அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என இந்தியா கூட்டணி தலைவர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

எனினும், அவ்வாறு நடந்தால், தங்களின் ஆளுமைக்கு ஆபத்து உண்டாகும் என்ற நோக்கில், கணக்கெடுப்புக்கான முயற்சி கூட எடுக்காமல் தாமதித்து வருகிறது பா.ஜ.க.

இத்தகு குதர்க்கங்களும், குற்றங்களும் அரங்கேறும் ஒரு மாநிலத்தில், மதத்தின் சாயலால் மக்களின் கண்கள் மறைக்கப்படுவது வருத்தத்தை உண்டாக்கும் விதமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், பா.ஜ.க.வின் வாக்கு இயந்திரத்தின் மீதான சந்தேகமும் கூடியிருக்கிறது. காரணம், 2002 குஜராத் கலவரத்திற்கு பின் நடந்த சட்டமன்ற தேர்தல்களில், தொடர் ஏறுமுகத்தில் இருந்த காங்கிரஸ், 2017 சட்டமன்ற தேர்தலில் 77 இடங்களில் அபார வெற்றியடைந்து, அடுத்த தேர்தலில் ஆட்சியமைக்கும் என்று எண்ணப்பட்டது. ஆனால், சற்றும் எதிர்பாராத வகையில், கடந்த 2022ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கடும் வீழ்ச்சியடைந்தது காங்கிரஸ்.

எவ்வித குறிப்பிட்டு கூறும் காரணம் இல்லாத நிலையிலும், தேர்தல் முடிவில் ஏற்பட்டிருந்த இந்த மாற்றம், மக்களிடையில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது, நாடாளுமன்ற தேர்தலிலும் நிகழலாம் என்ற அச்சத்தில் தான், இந்தியா கூட்டணி தலைவர்கள் பலரும், EVM வாக்கு இயந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை என்ற முழக்கத்தை தொடர்ந்து முன்மொழிந்து வருகின்றனர்.

குஜராத்தில் ஆம் ஆத்மி-யும் வாக்கு வங்கி கொண்டிருக்கிற நிலையில், அந்த மாநிலத்தில் பட்டேல் சமூகமும் மோடிக்கு எதிராக போர்கொடி தூக்கியிருக்கின்றனர். இவை எல்லா கணக்குகளையும் விட மோடியின் பாசிச போக்கிற்கு, எதிராக மக்கள் ஒன்று திரண்டுள்ளனர்.

”என் தாய் நாடு நீதி மறுக்கப்பட்டவர்களின் தேசமாகவும், நீதி மறுப்போர் ஆளும் காடாகவும் மாறிவிடக் கூடாது. குற்றவாளிகளை மீண்டும் சிறைக்கு அனுப்புங்கள்! இந்தியாவை நீதியின் பூமியாக மாற்றுங்கள்!” என குஜராத்தியான பில்கிஸ் பானு கண்ணீர் மல்க விடுத்த வேண்டுகோள்கள், பா.ஜ.க என்ற கலவரக்காரர்களை தோற்கடிக்கும் என்ற நம்பிக்கை கூடியுள்ளது.

banner

Related Stories

Related Stories