அரசியல்

"மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாகுபாடு" - நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்த திருச்சி சிவா MP !

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் ஒன்றிய அரசு பெரிய அளவில் பாகுபாடு காட்டுகிறது என திருச்சி சிவா எம்.பி விமர்சித்துள்ளார்.

"மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாகுபாடு" - நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்த  திருச்சி சிவா MP !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்த ஆண்டு மே மாதத்தோடு ஒன்றிய அரசின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், ஒன்றிய பாஜக அரசின் தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யபடும் இறுதி இடைக்கால பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இடைக்கால பட்ஜெட் என்றாலும் தேர்தலுக்கு முன்னர் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால். ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டில் எந்த வித நல்ல திட்டங்களும் இல்லை, அறிவிப்புகளும் இல்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தற்போது நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, "மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் ஒன்றிய அரசு பெரிய அளவில் பாகுபாடு காட்டுகிறது. தமிழ்நாடு கொடுக்கும் ஒரு ரூபாய் வரியில் 29 பைசா மட்டுமே ஒன்றிய அரசால் திரும்ப வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் உத்தரப்பிரதேசம் ஒரு ரூபாய் வழங்கினால் அவர்களுக்கு 2 ரூபாய் 73 பைசாவை ஒன்றிய அரசு திரும்ப வழங்குகிறது. ஏன் தமிழ்நாட்டுக்கு இந்த அநீதி? புயல், மழை பாதிப்புகளுக்காக ரூ.37 ஆயிரம் கோடியை தமிழ்நாடு கோரியது இதுவரை ஒன்றிய அரசு வழங்கவில்லை" என்று கேள்வி எழுப்பினார்.

"மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாகுபாடு" - நாடாளுமன்றத்தில் பாஜக அரசை விமர்சித்த  திருச்சி சிவா MP !

மேலும், "ஆந்திராவிலும் இதே நிலைமைதான். 10 ஆண்டுகளாக அவர்கள் சிறப்பு நிதி கேட்டு வருகிறார்கள் இதுவரை அரசு வழங்கவில்லை. குடியுரிமை மசோதாவில் ஏன் முஸ்லிம்களை விடப்பட்டார்கள்? இலங்கை தமிழர்கள் விடப்பட்டது ஏன் ? 1.5 லட்சம் இலங்கை தமிழர்கள் இந்தியாவில் உள்ளார்கள். அவர்களுக்கு குடியுரிமையை இன்னும் இந்த அரசு கொடுக்கவில்லை. முத்தலாக் சட்டம் கொண்டுவரும் அரசு ஏன் கைபெண்கள் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர மறுக்கிறது? பெண்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படாதது ஏன்? ஜி 20-ம் நாடுகளில் தனிநபர் வருவாயில் கடைசி இடத்தில் இருப்பது இந்தியா தான்" என்று விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், " விவசாயத்துக்கு அடுத்தபடியாக 20 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய சிறு, குறு தொழில் துறையை ஒன்றிய அரசு புறக்கணித்து வருகிறது. சிறு, குறு தொழில்துறையினரின் 16,000 கோடி வங்கி கடனை தள்ளுபடி செய்ய மறுக்கும் ஒன்றிய அரசு, பெரு நிறுவனங்களுக்கு 5.3 லட்சம் கோடியை தள்ளுபடி செய்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்ததும் விவசாயத்துக்கான நிதி ஒதுக்கீடு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. மக்கள் தரப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த கேள்வி எழுப்பினாலும் அதற்கு ஒன்றிய அரசிடமிருந்து பதில் வருவதில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் முந்தைய இந்தியாவை கொண்டு வரும்" என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories