அரசியல்

விரைவில் கைதாகும் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் : முதன்முறையாகச் சிரிக்கும் பில்கிஸ் பானு - முரசொலி !

விரைவில் கைதாகும் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் : முதன்முறையாகச் சிரிக்கும் பில்கிஸ் பானு - முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (11.01.2024)

சிரிக்கிறார் பில்கிஸ் பானு

மனித உரிமையும் –- சட்டநீதியும் காக்கும் தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் உருக்குலைக்கப்பட்ட பில்கிஸ் பானு என்ற பெண்ணுக்கு கொடூரம் இழைத்த குற்றவாளிகளை அந்த மாநில அரசு விடுதலை செய்ததை ரத்து செய்திருக்கிறது உச்சநீதிமன்றம். இந்த தீர்ப்பைக் கேள்விப்பட்டதும், “ஒன்றரை ஆண்டுகளில் முதல் முறையாக சிரிக்கிறேன்.” என்று பில்கிஸ் பானு கூறியுள்ளார். “இன்று எனக்கு உண்மையிலேயே புத்தாண்டு. நான் கண்ணீர் விட்டு அழுதேன். ஒன்றரை ஆண்டுகளில் முதல் முறையாக நான் சிரிக்கிறேன். என் நெஞ்சில் சுமையாக இருந்த ஒரு மலை அகன்றது போல் உணர்கிறேன். எனக்கு சுவாசமே திரும்ப வந்தது போல் இருக்கிறது. இதுதான் உண்மையான நீதி. எனக்கும், என் குழந்தைகளுக்கும், அனைத்து பெண்களுக்கும் சம நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை வழங்கிய உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி.” என்று குறிப்பிட்டுள்ளார்.

பில்கிஸ் பானுவின் கணவர் யாகூப் பி.பி.சி. -– செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் பில்கிஸுக்கு கிடைத்த நீதியால் நானும் எனது குடும்பத்தினரும் மகிழ்ச்சியடைகிறோம். நாட்டின் நீதி அமைப்பு மீது எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. இன்று உச்சநீதிமன்றம் எங்கள் நம்பிக்கையை காப்பாற்றியுள்ளது. உச்ச நீதிமன்றத்திற்கு மிக்க நன்றி” என்று சொல்லி இருக்கிறார். பில்கிஸ் பானுவுக்கு மகள்கள் ஹஜ்ரா, பாத்திமா, சலேஹா என 3 மகள்களும் யாசின் என்ற மகனும் உள்ளனர். தன் கண் முன்னே கொலை செய்யப்பட்ட மகளின் சலேஹா என்ற பெயரை இளைய மகளுக்கு சூட்டியுள்ளார் பில்கிஸ் பானு.

2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதைத் தொடர்ந்து இசுலாமியர்களுக்கு எதிரான பெரும் வன்முறை அரங்கேற்றப்பட்டது. இதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசுலாமியர்கள் வீடுகள், தங்கள் சொத்துகள் சூறையாடப்பட்டது. இதில் பில்கிஸ் பானுவின் குடும்பமும் ஒன்று. அவரது குடும்பத்தில் 7 பேர் கொலை செய்யப்பட்டார்கள். 6 பேரைக் காணவில்லை. பில்கிஸ் பானுவின் 3 வயது குழந்தை சலேஹா சுவற்றில் அடித்துக் கொல்லப்பட்டார். அப்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்தார் பில்கிஸ் பானு. அவர் உட்பட 4 பெண்கள் பாலியல் வன்முறையால் சீரழிக்கப்பட்டார்கள். அப்போது பில்கிஸ் பானுவுக்கு சுமார் 20 வயது.

விரைவில் கைதாகும் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் : முதன்முறையாகச் சிரிக்கும் பில்கிஸ் பானு - முரசொலி !

பாலியல் வல்லுறவுக்குப் பின்னர் அவநம்பிக்கையான நிலையில் பில்கிஸ் பானு அருகேயுள்ள மலைப்பகுதிக்குச் சென்று தன் உயிரை காப்பாற்றிக் கொண்டார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, போலீசார் சிலர் பில்கிஸ் பானுவை மிரட்டி ஆதாரங்களை அழிக்க முயன்றனர். அவரது குடும்ப உறுப்பினர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்யப்பட்டன. பில்கிஸ் பானுவை பரிசோதித்த மருத்துவர், அவர் பாலியல் வல்லுறவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். ஆனாலும், பில்கிஸ் பானு தொடர்ந்து போராடி குற்றவாளிகளை அடையாளம் காட்டினார். 2004–-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்த பிறகு முதல் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உதவியுடன், பில்கிஸ் பானு வழக்கு மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

‘குஜராத் நீதிமன்றங்களால் நீதி வழங்க முடியாது’ எனக் கூறி பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.இது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டார்கள். ஐஸ்வந்த்பாய், கோவிந்தபாய், சைலேஷ் பட், ராதேஷ்யாம் ஷா, பிபின் சந்திர ஜோஷி, கேசவர் பாய் வோஹானியா, பிரதீப் மோர்தியா, பசுபாய் வோஹானியா,ராஜூபாய் சோனி, மிதேஷ் பட், ரமேஷ் சந்தனா ஆகிய 11 பேர் மீது மும்பை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனையை சி.பி.ஐ. நீதிமன்றம் 2008 ஆம் ஆண்டு விதித்தது. இவர்கள் கோத்ரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்கள். கடந்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 15 அன்று இவர்கள் 11 பேரையும் விடுவித்து இருக்கிறது குஜராத் மாநில அரசு. நீண்ட காலம் சிறையில் இருந்தார்கள் என்ற அடிப்படையில் அவர்களை விடுதலை செய்துள்ளது அம்மாநில அரசு.

விரைவில் கைதாகும் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் : முதன்முறையாகச் சிரிக்கும் பில்கிஸ் பானு - முரசொலி !

11 பேரின் விடுதலையை ரத்து செய்யக் கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ‘அரசியலமைப்பு நடத்தைக் குழு’ என்ற தலைப்பில் பகிரங்க கடிதம் ஒன்றை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மாண்பமை யு.யு.லலித் அவர்களுக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் 134 பேர் அப்போதே அனுப்பி வைத்தார்கள்.“இவர்களை விடுதலை செய்தது பயங்கரமான தவறு. முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்று முடிவெடுக்கும் குழுவில் இருந்த 10 பேரில் 5 பேர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள். இது பாரபட்சமற்ற தன்மை மற்றும் சுதந்திரமான நடைமுறையின் மீது முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. பில்கிஸ் பானுவின் குடும்பத்துக்கு மட்டுமல்ல; இந்தியாவில் உள்ள அனைத்துப் பெண்களின் பாதுகாப்பிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை இது ஏற்படுத்தும்” என்று 134 அதிகாரிகளும் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.இந்த வழக்கில் தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குஜராத் அரசின் முடிவை உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

“குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி தண்டனையை ரத்து செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. குற்றவாளிகள் விசாரிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்ட மகாராஷ்டிரா அரசுக்குதான் அந்த அதிகாரம் உள்ளது. இது குஜராத் அரசின் அதிகார அத்துமீறல் ஆகும்” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகரத்னா, உஜ்ஜல்புயான் ஆகியோர் தீர்ப்பு அளித்துள்ளார்கள்.குஜராத் பா.ஜ.க. அரசால் விடுவிக்கப்பட்ட 11 பேரும் விரைவில் கைது செய்யப்பட இருக்கிறார்கள். இந்த தீர்ப்புக்குப் பிறகு அதில் 7 பேர் தலைமறைவு ஆகிவிட்டதாகச் செய்திகள் வந்துள்ளன. குற்றவாளிகளின் மிரட்டல் காரணமாக இரண்டு ஆண்டுகளில் இருபது வீடுகள் மாறியவர் பில்கிஸ் பானு. ஆனால் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் இன்று தலைமறைவு ஆகிவிட்டார்கள். பில்கிஸ் பானு முதன்முறையாகச் சிரிக்கிறார்.

banner

Related Stories

Related Stories