அரசியல்

ம.பியில் புதிய முதல்வர் : கூட்டத்திற்கு சென்ற சிவ்ராஜ் சிங் சௌகான்.. திடீரென கதறி அழுத பெண் தொண்டர்கள் !

ம.பியில் புதிய முதல்வர் : கூட்டத்திற்கு சென்ற சிவ்ராஜ் சிங் சௌகான்.. திடீரென கதறி அழுத பெண் தொண்டர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த நவம்பர் மாதம் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. வெவ்வேறு கட்டமாக நடைபெற்ற இந்த மாநிலங்களின் வாக்குப்பதிவுகள், இறுதியாக தெலங்கானா மாநிலத்தோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து டிசம்பர் 3-ம் தேதி மிசோரத்தை தவிர 4 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட மத்தியப் பிரதேசத்தில் 163 இடங்களை கைப்பெற்றி பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. இருப்பினும் அந்த மாநிலத்தில் முதலமைச்சர் தேர்வுக்கு இழுபறி நடந்து கொண்டிருந்தது காரணம் அம்மாநிலத்தில் முதலமைச்சராக பதவி வகித்த சிவ்ராஜ் சிங் சௌகான் தனது பதவியை தக்க வைத்து கொள்வதற்காக கடுமையாக போராடி வந்தார்.

சிவ்ராஜ் சிங் சௌகான்
சிவ்ராஜ் சிங் சௌகான்

மேலும் ஒன்றிய அமைச்சராக இருந்த நரேந்திர சிங் தோமர், திமானி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதையடுத்து, தனது ஒன்றிய அமைச்சர் பதவியை விட்டு விலகினார். இதனால் இந்த முதலமைச்சர் பதவிக்கு அவரும் போட்டியிட்டார். தொடர்ந்து குவாலியர், சம்பல் பிராந்தியத்தில் மொத்தம் உள்ள 34 தொகுதிகளில் 18-ல் வெற்றி பெற காரணமாக இருந்த எம்.பி ஜோதிராதித்திய சிந்தியாவும் தனக்கு ஆதரவாக செய்லபடும் ஒருவரை முதலமைச்சராக தேர்வு செய்வதற்காக முனைப்பு காட்டினார்.

அதோடு பிரகலாத் படேல், கைலாஷ் விஜயவர்ஜியா உள்ளிட்டவர்களும் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட்டு கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற இழுபறி காரணமாக முதலமைச்சர் தேர்வு செய்யப்படாமல் இருந்து வந்த நிலையில், நேற்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் மோகன் யாதவ் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். (மோகன் யாதவ், சிவ்ராஜின் அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர்)

மோகன் யாதவ்
மோகன் யாதவ்

இதனால் மற்ற அனைத்து தரப்பினரின் ஆதரவாளர்களும் பெரும் அதிருப்தியடைந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக சிவ்ராஜ் சிங் சௌகான், இதில் பெரும் அதிருப்தியில் இருந்தார். ஏனெனில், தன்னால் தான் பாஜக மீண்டும் ம.பியில் வெற்றிபெற்றது என்றும், எனவே மீண்டும் தான் தான் முதல்வராக இருப்பேன் என்ற எண்ணத்திலும், தேர்தல் வெற்றிக்கு பிறகும் அவர் டெல்லி செல்லவில்லை.

அதுமட்டுமின்றி பாஜக தலைமைக்கும் சிவ்ராஜ் சிங்கிற்கும் பல்வேறு முரண்பாடுகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த மாதிரியான சூழலில் அவர் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்படவில்லை என்பதால் அவர் உட்பட அவரது ஆதரவாளர்கள் பெரும் அதிருப்தியில்.உள்ளனர்.

ம.பியில் புதிய முதல்வர் : கூட்டத்திற்கு சென்ற சிவ்ராஜ் சிங் சௌகான்.. திடீரென கதறி அழுத பெண் தொண்டர்கள் !

இந்த நிலையில், இன்று சிவ்ராஜ் சிங்கின் பெண் ஆதரவாளர்கள் அவரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும் அவரை முதலமைச்சராக மீண்டும் ஆக்கவில்லை என்று அவரது தோளில் சாய்ந்து கதறி அழுதனர். லாட்லி லக்ஷ்மி யோஜனா (Laadli Laxmi Yojana) திட்டத்தின் பயனாளிகளை சந்தித்துப் இன்று சிவ்ராஜ் சிங் பேசினார்.

அப்போது அங்கிருந்த சில பெண் தொண்டர்கள் உடனே இவரை கண்டு அழ தொடங்கி விட்டனர். தற்போது இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. சிவ்ராஜ் சிங் சௌகான், அம்மாநில புத்னி தொகுதியில் 2006-ம் ஆண்டு இடைத்தேர்தல் முதல் 2023 சட்டப்பேரவை தேர்தல் வரை தொடர்ந்து 5 முறை எம்.எல்.ஏ-வாக இருக்கிறார்.

மேலும் 2005 முதல் 2018 வரையிலும், 2020 முதல் 2023 வரையிலும் 5 முறை முதலமைச்சராக இருந்திருக்கிறார். இது சூழலில் தற்போது மீண்டும் இவரே முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்று எண்ணிய நிலையில், மோகன் யாதவ் என்ற புதுமுகத்தை பாஜக அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories